News
Loading...

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடலோர காவல்படை பாதுகாப்பு ஒத்திகை

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடலோர காவல்படை பாதுகாப்பு ஒத்திகை

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பில் போதுமான கவனம் செலுத்தாததே இச்சம்பவத்துக்கு காரணமாக அமைந்திருந்தது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 2 முறை 6 மாத இடைவெளியில் ‘ஆபரே‌ஷன் ஆம்லா’ என்கிற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய-மாநில கடலோர காவல்படையினர், உள்ளூர் போலீசார் கமாண்டோ வீரர்கள் ஆகியோர் இணைந்து கூட்டாக இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுவார்கள்.

இந்த ஒத்திகையின்போது, தீவிரவாதிகள் வேடத்தில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் கமாண்டோ வீரர்கள் கடற்கரை ஓரங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள். அவர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சம் ஆகும்.

இந்த ஒத்திகையை போல ஒவ்வொரு மாதமும் ‘ஆபரே‌ஷன் ரக்‌ஷத்’ என்ற பெயரிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. மத்திய கடலோர காவல்படையினர் இந்த ஒத்திகையில் இன்று ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் தடுப்பது எப்படி? ஆயுதங்களை கடத்தினால் அதனை கண்டுபிடித்து பறிமுதல் செய்வது எப்படி? என்பது பற்றி இந்த ஒத்திகையின்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கடலோர பகுதிகளில் மாநில கடலோர காவல்படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால் ஆழ்கடல் பகுதியை மத்திய பாதுகாப்பு படையினரே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இன்றைய பாதுகாப்பு ஒத்திகையின் போது, ஆழ்கடல் பகுதியிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகள் 1076 கி.மீ. தூரம் கொண்டவையாகும். இந்த பகுதிகள் அனைத்திலும் இன்று ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது கடல் பகுதி வழியாக சந்தேக நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? என்பது பற்றியும், ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? என்பது பற்றியும் கண்காணிக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை இரவு 7 மணி வரை நடைபெறும் என்று கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.