News
Loading...

"சென்னையில் மோனோ ரயில் : போகாத ஊருக்கு வழிகாட்டும் ஜெயலலிதா அரசு!"

சென்னையில் மோனோ ரயில் போகாத ஊருக்கு வழிகாட்டும் ஜெயலலிதா அரசு

சென்னை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக 43.48 கி.மீ. தொலைவுக்கு ரூ. 6402 கோடியில் மோனோரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நடைமுறைக்கு ஒத்துவராத இத்திட்டத்தை செயல்படுத்தத் துடிப்பது போகாத ஊருக்கு வழிகாட்டும் பயனற்ற செயல் என்பதை தவிர, இதில் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன் அதற்கான சாத்தியக் கூறுகள், அத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் ஆகியவற்றைப் பற்றி அரசு ஆராய வேண்டும். ஆனால், அத்தகைய எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை என்பது இந்த திட்டத்தை அறிவித்ததிலிருந்தே தெரிகிறது.

சென்னையில் பூந்தமல்லி - கத்திப்பாரா சந்திப்பு இணைப்புடன் போரூர் முதல் வடபழனி வரை 20.68 கி.மீ தொலைவுக்கு ரூ.3267 கோடியிலும், வேளச்சேரி முதல் வண்டலூர் வரை 20.80 கி.மீ தொலைவுக்கு ரூ. 3135 கோடியிலும் மோனோரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தால், மோனோரயில்களில் தினமும் 64,000 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இது சென்னையின் போக்குவரத்து நெரிசலை எந்த வகையிலும் குறைக்காது. அதுமட்டுமின்றி, போரூர் - வடபழனி சாலை தான் சென்னையில் மிகவும் குறுகலான நெடுஞ்சாலை ஆகும். அந்த சாலையின் மத்தியில் மோனோரயில் திட்டத்திற்காக தூண்கள் அமைக்கப்பட்டால் பேரூந்து போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். மோனோ ரயிலால் ஏற்படும் சாதகங்களை விட, அதனால் பேரூந்து போக்குவரத்துக்கு ஏற்படும் பாதகம் அதிகம்.

இதற்கெல்லாம் மேலாக மோனோரயில் திட்டம் உலகம் முழுவதும் தோல்வியடைந்த திட்டமாகும். ஜப்பான், சீனாவைத் தவிர வேறு எங்கும் 10 கி.மீ தொலைவுக்கு கூட மோனோரயில்கள் இயக்கப்படவில்லை. மும்பையில் ரூ.20 ஆயிரத்து 296 கோடியில் 165 கி.மீ. நீளத்திற்கு 8 மோனோ ரயில் திட்டங்களை செயல்படுத்தப் போவதாக 2008 ஆம் ஆண்டில் அம்மாநில அரசு அறிவித்தது. ஆனால், 20 கி.மீ நீளமுள்ள முதல் பாதை அமைக்கப்பட்டவுடன், மீதமுள்ள பாதைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டது.

மோனோரயில் திட்டத்தால் எந்த பயனும் கிடைக்காது; நகர்ப்புற போக்குவரத்துத் திட்டமிடலுக்கு மோனோரயில் ஒரு மோசமான முன்னுதாரணம் என்றும் வல்லுனர்கள் கூறியது தான் இதற்கு காரணம். இதைத் தான் சென்னையில் செயல்படுத்த ஜெயலலிதா அரசு பிடிவாதம் பிடிக்கிறது.
2001-ஆம் ஆண்டிலிருந்தே மோனோரயில் திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. அப்போது இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்கு தொடர்ந்ததால் இத்திட்டத்தை செயல்படுத்தி மக்கள் பணத்தை வீணடிப்பது தடுக்கப்பட்டது.

கடந்த 2011- ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மொத்தம் 300 கி.மீ தொலைவுக்கு மோனோரயில் பாதை அமைக்கப்படும் என்றும், முதல்கட்டமாக 111 கி.மீ. தொலைவுக்கு 3 பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் வண்டலூர் - புழல் இடையிலான 54 கி.மீ பாதையை தமிழக அரசே கைவிட்டு விட்டது. மீதமுள்ள 3 திட்டங்களை இரு திட்டங்களாக சுருங்கின.

இவ்வாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மொத்தம் 300 கி.மீ. இலக்குடன் தொடங்கிய மோனோரயில் திட்டத்தை இப்போது 43.48 கி.மீ தொலைவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது அரசு.

இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், ஒப்பந்தம் கோர சிலர் மட்டுமே முன்வந்ததால் அரசே அந்த நடைமுறையை ரத்து செய்தது. 2013ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தம் எடுக்க எவருமே முன்வரவில்லை.

2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சில நாட்களில் மோனோரயில் திட்டத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவரது பதவி பறிபோனதே தவிர ஒப்பந்தம் கோரப்படவில்லை. மோனோரயில் திட்டத்தின் பயணம் அவ்வளவு வெற்றிகரமானது. இப்படிப்பட்ட திட்டத்தை தூசு தட்டி எடுத்தாலும் வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அதேநேரத்தில் 43 கி.மீ. நீள மோனோரயில் திட்டத்திற்காக செலவிடப்படவிருக்கும் ரூ.6402 கோடியில் நான்கில் ஒருபங்கு தொகையில், அதாவது ரூ.1500 கோடியில் சென்னையில் 96.70 கி.மீ தொலைவுக்கு அதிவிரைவுப் பேருந்துத் திட்டத்தை (BRTS) செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியும். இதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் கடந்த 2013 ஆம் ஆண்டில் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு விட்டன.

அதன்படி சென்னையில் கோயம்பேடு- பூந்தமல்லி (14 கி.மீ), கோயம்பேடு- அம்பத்தூர் (7 கி.மீ), கோயம்பேடு-மாதவரம் (12.40 கி.மீ),சைதாப்பேட்டை-சிறுசேரி (24.80 கி.மீ), சைதாப்பேட்டை-தாம்பரம் (18.20 கி.மீ), துரைப்பாக்கம்- குரோம்பேட்டை (10.60 கி.மீ), கோயம்பேடு-சைதாப்பேட்டை(9கி.மீ) என 7 பாதைகளில் முதல்கட்டமாக அதிவிரைவு பேருந்து திட்டத்தை செயல்படுத்த முடியும்.

மோனோரயில் மூலம் ஒரு நாளைக்கு 60,000 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், அதிவிரைவு பேருந்து திட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1.68 லட்சம் பேர் வீதம் ஒரு நாளைக்கு சராசரியாக 25 லட்சம் பேர் எளிதாக பயணம் செய்ய முடியும்.

அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தை 18 மாதங்களில் செயல்படுத்த முடியும் என்பதுடன், மூன்றரை ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக செய்யப்பட்ட முதலீட்டை திரும்பப் பெற முடியும். எனவே, மோனோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, குறைந்த செலவில் அதிக பயனும், வேலைவாய்ப்பும் அளிக்கக் கூடிய அதிவிரைவுப் பேருந்துத் திட்டத்தை (BRTS) செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்

- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.