News
Loading...

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய விழுப்புரம் அரசு மருத்துவமனை

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய விழுப்புரம் அரசு மருத்துவமனை

விழுப்புரம் சிக்னல் அருகே 2.5 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டது. அப்போது மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்து கிராமப்புற மக்கள் உயர் சிகிச்சை பெற இங்கு நாள்தோறும் குவிந்தனர். இதனால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக செயல்பட்டது. தமிழகத்தில் அதிக விபத்து ஏற்படும் மாவட்டத்தில் ஒன்று விழுப்புரம். காரணம் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதுதான். 

இங்கு அடிக்கடி பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் முறையான உயர்தர நவீன சிகிச்சைகள் இல்லாததால் விபத்து ஏற்பட்டால் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி, சேலம், சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. 
இந்நிலையில் விழுப்புரத்தில் உயர் சிகிச்சையுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

இதனை தொடர்ந்து விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணி தொடங்கியது. 2009ம் ஆண்டு முதல் விழுப்புரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. இதனால் மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட்ட விழுப்புரம் அரசு மருத்துவமனை கள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டது. 

பின்னர் முண்டியம்பாக்கத்தில் மருத்துவக்கல்லூரி கட்டும் பணி முடிந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த மருத்துவக்கல்லூரி முண்டியம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட அனைத்து பிரிவு கட்டிடங்களும் பராமரிப்பு, பாதுகாப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. 

மேலும் பல்வேறு கட்டிடத்தில் இருந்த கதவுகள், பேன்கள் கொள்ளை போனது. இதற்கு அங்குள்ள ஊழியர்கள் தான் காரணம் என கூறப்படுகின்றது. இரவு நேரம் மட்டுமின்றி, பகல் நேரத்திலேயே மதுபான பார், கழிப்பறைகளாக மாறிய அவலத்தின் உச்சக்கட்டத்திற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனை சென்றுள்ளது. 

மேலும் பல இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு தலைவிரித்து ஆடுகின்றது. மருத்துவர்கள், செவிலியர் பற்றாக்குறையால், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் விழுப்புரம் அரசு மருத்துவமனை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

புதிய கட்டிடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாற தொடங்கிய போது, இந்த மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் வீணாகாமல், தரமான அவசர சிகிச்சை தொடர்ந்து நடைபெற விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

கடந்த 2011ம் ஆண்டு அமைச்சர் சிவி.சண்முகம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நர்சிங் கல்லூரி தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகள் விழுப்புரத்தில் அரசு நர்சிங் கல்லூரி அமைப்பது கேள்விகுறியானது. 

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மாணவிகள் அதிக வேலைவாய்ப்பு தரும் செவிலியர் நர்சிங் படிக்க விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பராமரிப்பின்றி கிடக்கும் கட்டிடங்கள் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, அரசு நர்சிங் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

விஷ ஜந்துகள் அட்டகாசம் 

மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏராளமான காலி இடத்தில், புதர்போல் செடி, கொடி, மரங்கள் முளைத்துள்ளது. இதனால் புதர் பகுதியில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அட்டகாசம் அதிகரித்து, அங்குள்ள சாலையில் மேய்ந்து செல்வதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். 

மதில் சுவர் உடைப்பு

மருத்துவமனை வளாகத்திற்குள் குறுக்கு வழியில் சமூக விரோதிகள் செல்ல மாம்பழப்பட்டு ரோடு பகுதி, மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடத்தில் மதில் சுவர்கள் உடைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சமூக விரோதிகள் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று மது குடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் இல்லாத கழிவறை

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனை வளாகத்தில் மகளிர் பிரிவு அருகில் அமைந்துள்ள பொதுக்கழிவறை பல ஆண்டுகளாக தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை அழைத்து வருபவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.