News
Loading...

தமிழகத்தில் உருவாகியுள்ள புதிய பறவைகள் சரணாலயம்!

தமிழகத்தில் உருவாகியுள்ள புதிய பறவைகள் சரணாலயம்!

திருநெல்வேலி மாவட்டம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவேல மரங்கள் சூழ்ந்துள்ள குளத்தில் கடந்த சில மாதங்களாக பல அரியவகை பறவை இனங்கள் வெளிநாட்டில் இருந்து வர தொடங்கியுள்ளன. அது பற்றிய செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் பறவை இனங்களை பாதுகாக்கின்ற வகையில் வேடந்தாங்கல், கூந்தன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையின் பறவைகள் சரணாலயமாக கண்டறியப்பட்டு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பறவை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் கடந்த சில மாதங்களாக பல அரியவகை பறவை இனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதற்கு அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இங்குள்ள தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த செங்கல்நாரை, வெள்ளை நாரை, கருப்புநாரைகள் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. அவைகள் இங்குள்ள கருவேல மரங்களில் கூடுகட்டி அதில் தங்கள் முட்டைகளை அடைகாக்கின்றன. 

சங்கரன்கோவில் பகுதியில் இதுவரையில் எங்கும் இல்லாத வகையில் பெரூங்கோட்டூர் பெரியகுளத்தில் தஞ்சம் அடைந்துள்ள இந்த வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே பறந்து செல்வதும், குளத்தை சுற்றிலும் வட்டமடிப்பதுடன், கருவேல மரப்பகுதிகளில் ஆட்டு மந்தை போன்று கூட்டமாக அணி வகுத்து நிற்பதும் தமிழகத்தில் கோடியக்கரை, வேடந்தாங்கலை அடுத்து பெருங்கோட்டுர் ஒரு மிகச்சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளதற்கான அடையாளம் என்றே கூறலாம்.

நீர் சூழ்ந்த ரம்யமான இடத்தில் இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள பல ஆயிரம் வெளிநாட்டு பறவைகளை சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். 

எனவே தமிழக அரசு பெரூங்கோட்டூரிலும் பறவைகள் சரணாலயத்தை உருவாக்கி இப்பகுதியை சுற்றுலாத்தலமாக உருவாக்கி பறவை இனங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.