News
Loading...

சிட்பண்ட்ஸ் நடத்தி ரூ.1 கோடி மோசடி

சிட்பண்ட்ஸ் நடத்தி ரூ.1 கோடி மோசடி

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கரூர் சாலை ஐந்து முனை சாலை சந்திப்பு அருகே சிந்தனா சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நாமக்கல் பரமத்தியை சேர்ந்த  ஆனந்தன் (32) என்பவர் மாதாந்திர சீட்டு மற்றும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். 3 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில் 500க்கும் அதிகமானோர் மாதம்  ரூ.4 ஆயிரத்து 500 வீதம் செலுத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கான சீட்டு சேர்ந்தனர். முதல் 3 மாத ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் பின் தேதிகளிட்டு  வங்கி செக் வழங்கப்பட்டன. இதேபோல் சிறு நிறுவனங்கள், தொழில் முனைவோர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மாத வட்டிக்கு பணம் தருவதாக  கூறி டெபாசிட் மற்றும் பதிவு செலவுகளுக்காக தலா ரூ.1500 முதல் 2500 ரூபாய் வரை வசூலித்து, அவர்களில் 5 பேருக்கு மட்டும் கடன் தொகை கிடைத்துள்ள  நிலையில், 75 நபர்களுக்கு பணம் தரவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த சிறுதொழில் செய்வோர் தங்கள் டெபாசிட்தொகையை திருப்பி கேட்டபோது, 15 நாளில் கடன் கிடைத்துவிடும் என்றும், வங்கி செக்  பவுன்ஸ் ஆனவர்கள் பணம் கேட்டபோது, 10 நாள், 15 நாள் என தவணை கூறியுள்ளனர். சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த  வாடிக்கையாளர்கள் 50க்கும் அதிகமானோர் நேற்று மாலை சிட்பண்ட்ஸ் அலுவலகத்திலிருந்த அதன் உரிமையாளர் ஆனந்தனை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர்.
இதையறிந்த பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் சிட்பண்ட்ஸ் முன் திரண்டனர். 

சம்பவம் பற்றி தகவலறிந்த தாராபுரம் போலீசார், சிட்பண்ட்ஸ் நிறுவனத்திற்கு வந்து அதன் உரிமையாளர், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பணம் கொடுத்த  அனைவருக்கும் 15 நாளில் திருப்பி ெகாடுப்பதாகவும், அதுவரை எங்கும் செல்ல மாட்டேன் என்றும் ஆனந்தன் போலீசிடம் எழுதி கொடுத்தார். இதையடுத்து,  சமாதானமடைந்த வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர். இந்த நிறுவனத்தில் சுமார் 1 கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் பணம் மாதாந்திர சீட்டு  தொகையாகவும், கடன் வழங்க டெபாசிட் தொகையாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...