News
Loading...

அம்மா சிமென்ட் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது

அம்மா சிமென்ட் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது

அம்மா சிமென்ட் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை  மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(40). இவர் சொந்தமாக வீடு கட்டி  வருகிறார். இதற்காக மானிய விலையில் வழங்கப்படும் அம்மா சிமென்ட்  பெற செ.கூடலூரில் உள்ள அரசு வாணிப கிடங்கில் விண்ணப்பித்து இருந்தார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் வாணிப கிடங்கில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முருகையன்(57), குப்பனை செல்போனில் தொடர்புகொண்டு, ‘50 சிமென்ட்   மூட்டைகள் வந்துள்ளன. நாளை வரும்போது ரூ.1,500 லஞ்சமாக பணத்தை கொண்டு வரவேண்டும்’ என தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குப்பன்,  இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கூறியபடி குப்பன், ரசாயனம் தடவிய ரூ.1,500 ரூபாய்  நோட்டுகளை நேற்று வாணிப கிடங்கில் இருந்த முருகையனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இளநிலை உதவியாளர்  முருகையனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...