News
Loading...

தமிழகத்தில் 162 போலி மருத்துவர்கள் கைது

தமிழகத்தில் 162 போலி மருத்துவர்கள் கைது

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 162 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பினால் 5 பேர் பலியாயினர். மேலும் பலர் காய்ச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலால் இறந்தவர்களில் 2 பேருக்கு ஆரம்பத்தில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலி மருத்துவர்களைக் கண்டறியும் பொருட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

618 போலி மருத்துவர்கள்: 2013-ஆம் ஆண்டு வரை இந்தத் துறையினர் 618 போலி மருத்துவர்களைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில், ஆயுஷ் மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றில் பதிவு இல்லாதவர்கள் போலி மருத்துவர்களாக கருதப்படுவார்கள்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:

ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போலி மருத்துவர்கள் தண்டனை முடிந்து வெளியே வந்ததும், வேறு இடங்களுக்குச் சென்று இதே பணியைத் தொடருகின்றனர். காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் எளிதில் கண்டறிய முடியாத கிராமப்பகுதிகளில் இவர்கள் மருத்துவம் பார்க்கின்றனர்.

இதனால் போலி மருத்துவர்களாக கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்களை கண்காணிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

162 பேர்: இந்நிலையில் 2014-ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆகஸ்ட் மாதம் வரை 162 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் இயக்குநர் டாக்டர் செங்குட்டுவன் கூறியது:

ஆகஸ்ட் மாதம் மட்டும் 19 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 13, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்பின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இருப்பினும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போலி மருத்துவர்களைக் கண்காணித்து கைது செய்வதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

சென்னையில் போலி மருத்துவர்கள்: சென்னையிலும் பல்வேறு இடங்களில் போலி மருத்துவர்கள் உள்ளதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையினருக்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முழுவதும் சென்னையில் போலி மருத்துவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.