News
Loading...

2 கி.மீ. தூரம் பைக்கில் விரட்டி சென்று செல்போன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பெண் காவலர்

2 கி.மீ. தூரம் பைக்கில் விரட்டி சென்று செல்போன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பெண் காவலர்

தண்டையார்பேட்டை: செல்போன் பறித்த வாலிபர்களை பைக்கில் 2 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று பிடித்த பெண் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.  பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை காவல் குடியிருப்பை சேர்ந்தவர்  மகாலட்சுமி (30). இவர் சாத்தான்காடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பணி முடித்து விட்டு  பைக்கில்  வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே வரும் போது இவருக்கு முன்னே  நடந்து  சென்று  கொண்டிருந்த ஒரு நபரிடம் இருந்து பைக்கில் சென்ற வாலிபர்கள் செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்தனர். 

இதை பார்த்த மகாலட்சுமி அந்த பைக் ஆசாமிகளை 2 கிலோ மீட்டர்  தூரம் வரை விரட்டி சென்றார். தனது பைக்கால் அவர்கள் பைக் மீது மோதி  செல்போன் திருடர்களை கீழே தள்ளினார். பின்னர் அங்குள்ள பொதுமக்களின் துணையோடு அவர்களை மடக்கிப் பிடித்தார். அதன் பின்னர் அவர்களை  தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரை  சேர்ந்த சசிகுமார் (22), சரத்குமார் (24) என்பதும் அவர்கள் செல்போன் பறித்ததும், செல்போனை பறிகொடுத்தவர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த  ராவ்பகதூர் என்பதும் பின்னர் தெரியவந்தது. 

பைக் ஆசாமிகள் இருவரும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக புதுவண்ணாரப்பேட்டையில் ஜாகீர் என்பவரிடம் செல்போன் பறித்து வந்ததையும்  ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து   விசாரித்து வருகின்றனர்.  துணிச்சலுடன் வேகமாக செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவலர் மகாலட்சுமியை உயர் போலீஸ் அதிகாரிகள்  பாராட்டினர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...