News
Loading...

கொள்ளைக்கார 3 போலீசார் சஸ்பெண்ட்


கோவை: கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இரண்டு பேர் தலைமறைவானார்கள். 

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர், 32; தங்க நகை மொத்த வியாபாரி. மலப்புரத்தில் நகைக்கடையும் வைத்துள்ள இவர், ஆர்டரின் பேரில் நகைகள் செய்து சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். 

கடந்த மாதம் 24ம் தேதி தான் தயாரித்த நகைகளை, சென்னையில் உள்ள ஜுவல்லரிகளில் கொடுத்து பணம் பெற்று வருமாறு, நகைக்கடை ஊழியர்கள் அனந்த், 32, முஜ்பூர், 32, முகமது இப்ராகீம், 53, ஆகியோரை காரில் அனுப்பினார். சிஷாஸ், 35, என்பவர் காரை ஓட்டினார். சென்னையில் நகை விற்ற பணம், 3.90 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு, கேரளாவுக்கு கிளம்பினர். 25ம் தேதி அதிகாலை, 4:30 மணியளவில், கோவை, நீலாம்பூர் நெடுஞ்சாலையில் ஈச்சனாரி அருகே ஜீப்பில் வந்த ஐந்து பேர் கும்பல், திடீரென காரை மறித்தது.

அவர்களில் மூன்று பேர், போலீஸ் சீருடையில் இருந்தனர். காரில் இருந்தவர்களை இறக்கிவிட்டுவிட்டு பணத்துடன் அவர்கள் காரையும் கடத்தினர்.
நகைக்கடை ஊழியர்கள், கார் கடத்தப்பட்டதாக மதுக்கரை காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். 

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரில் ரூ.3.90 கோடி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை துரிதபடுத்தினர். கார் கடத்தப்பட்ட மதுக்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில், கடத்தல்காரர்களின் கார் எண் பதிவாகியிருந்தது.

இந்த கார் கேரளாவில் பிடிபட்டது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில்,கொள்ளையில் தொடர்புடைய கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சுபாஷ், சாகித் மற்றும் குருவாயூரை சேர்ந்த சுகிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நிஜ போலீஸ் என்பது தெரியவந்தது. 

இந்த கொள்ளை சம்பவத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி இன்ஸ்பெக்டர்முத்துக்குமார், குளித்தலை எஸ்.ஐ., சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் ரூ.2 கோடியை எடுத்துக்கொண்டதும், தங்களுக்கு ரூ.1.90 கோடி கொடுத்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து, முத்துக்குமார், சரவணன், தர்மேந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி., அருண் உத்தரவிட்டார். தொடர்ந்து முத்துக்குமாரிடம் கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன், தர்மேந்திரன் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்துக்குமார் பேட்ஜ் அதிகாரி நடராஜன் என்பவர் இன்ஸ்பெக்டராக கோவையில் பணிபுரிகிறார். அவர் முத்துக்குமாருக்கு உதவியதாக கூறப்படுகிறது. இவர்கள் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும், பணம் கொண்டு வருவது எப்படி அவர்களுக்கு தெரியும் என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.