News
Loading...

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 800 கோடி மாட்டுத்தீவன ஊழல்: விசாரணை நடத்த அரசு உத்தரவு

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 800 கோடி மாட்டுத்தீவன ஊழல்: விசாரணை நடத்த அரசு உத்தரவு

மும்பை: மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவிய ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்ட கால்நடை தீவன முகாம்களில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து முகாம்களை நிர்வகித்த அமைப்புகள் குறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூத்த அரசு அதிகாரி ஒருவர் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிராவில் கடந்த 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கு இடையே அப்போதைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 1,288 கால்நடை முகாம்கள் திறக்கப்பட்டன. இந்த இரண்டு ஆண்டுகளிலும் மாநில அரசு இந்த முகாம்களுக்கு ₹800 கோடி செலவிட்டது. 

நாசிக், சோலாப்பூர், சாங்கிலி, அகமத்நகர் மற்றும் பீட் போன்ற மாவட்டங்களில் இந்த கால்நடை முகாம்கள் திறக்கப்பட்டன. இந்த முகாம்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களில் சில மிகவும் கடுமையானவை. கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி அரசிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். போலியான நபர்களின் பெயர்களை எழுதி கால்நடைகள் அவர்களுக்கு சொந்தமானவையாக காட்டப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. அரசிடம் இருந்து நிதியை பெற்றும் கால்நடைகளை சரியாக பராமரிக்கவில்லை என்பது போன்று புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த முகாம்களை நிர்வகித்த அமைப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இலாகா உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழல்களை எதிர்த்து கோர்ட்டில் சில வழக்குகளும் உள்ளன. இந்த முகாம்களில் பராமரிக்கப்பட்டு வந்த பெரிய கால்நடை ஒவ்வொன்றுக்கும் ₹70 மற்றும் சிறிய கால்நடைக்கு ₹35 என்ற கணக்கில் மாநில அரசு மானியம் வழங்கியது. கடந்த ஆண்டு மாநிலத்தில் மிகக்கடுமையான வறட்சி நிலவியது. அப்படி இருந்தும்கூட புதிதாக திறக்கப்பட்ட சுமார் 400 கால்நடை முகாம்களுக்கு அரசு₹185 கோடி மட்டுமே செலவிட்டது. ஆனால் 2012-14ம் ஆண்டுக்கு இடையே அப்போதைய அரசு ₹800 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. இதனால்தான் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். இந்த விவகாரம் தொடர்பான கோப்பு மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு இலாகா அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...