News
Loading...

9/11 இரட்டை கோபுர தாக்குதல், 15வது நினைவு தினம் இன்று

இரட்டை கோபுர தாக்குதல்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது அல்கொய்தா விமானத்தை மோதி தாக்குதல் நடத்தியதன் 15வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை, 15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்கள் மூலம் தகர்த்தனர். இந்த தாக்குதலில் அங்கு 2,600 பேர் பலியாயினர். அமெரிக்காவில் கடந்த 1941ம் ஆண்டு பேர்ல் துறைமுகம் மீது நடந்த குண்டு வீச்சுக்குப்பின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது. இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் தற்போது நினைவிடமும், மியூசியமும் அமைக்கப்பட்டுள்ளது. 

இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் இந்த இடத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால் இந்த இடத்தின் முக்கியத்துவம் மங்கி, ஜாலியான சுற்றுலாத் தலமாக மாறிவருவதாக நியூயார்க் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இங்கு நடந்த தாக்குதலில் பலியான ஒருவரின் மனைவி ரோசேன் ஹுக்ஸ் கூறுகையில், ‘‘இந்த நினைவிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மிக சோகமானது. இங்கு நடந்த சம்பவம் பற்றிய கோபம் எங்களுக்கு இன்னும் தீரவில்லை. 

ஆனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சிரித்தபடி செல்பி எடுக்கின்றனர். இதெல்லாம் இங்கு பலியானவர்களுக்கு செய்யப்படும் அவமரியாதை. இதை பார்க்க வேதனையாக உள்ளது. இந்த இடத்தின் சோகத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கத் தோன்றுகிறது’’ என்றார். நியூயார்க் நகர வரலாற்று அறிஞரும், கொலம்பியா பல்கலை பேராசிரியருமான ஜாக்சன் கூறுகையில், ‘‘தீவிரவாத தாக்குதல், உலக வர்த்தக மையத்தை, உலகின் மிக பிரபல இடமாக ஆக்கிவிட்டது. நல்லதோ, கெட்டதோ, நியூயார்க் நகரின் சுற்றுலாத் தல பட்டியலில் இந்த நினைவிடமும் சேர்ந்துவிட்டது. இங்கு நினைவிடமே அமைக்காமல்  இருந்திருந்தாலும், மக்கள் இந்த இடத்தை பார்வையிடுவர்’’ என்றார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...