News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - கும்பம்

புரட்டாசி மாத ராசி பலன் - கும்பம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

உற்சாகத்துடன் செயல்படும் காலம் இது!

எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10–ம் இடத்தில் பலம் பெற்றிருக்கின்றார். மாதத் தொடக்கத்தில் மூன்று நாட்கள் கழித்து சுக்ரன் 9–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே திரண்ட செல்வம் தேடி வரும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். இருண்ட சூழ்நிலை மாறி இனி விடிவுகாலம் பிறக்கப் போகின்றது.

சூரியபலம் 8–ல் இருப்பதால் ஒரு சிலருக்கு அரசு வழித் தொல்லைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்திலும் குறைபாடுகள் உருவாகலாம். உஷ்ணாதிக்க நோய்கள் ஏற்பட்டு உடலைத் துன்புறுத்தலாம். அதே நேரத்தில் சூரியனோடு குரு இருப்பது யோகம் தான். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் அகலும். அன்யோன்ய உறவிற்கு அடித்தளம் அமைத்துக்கொள்வீர்கள். கண்ணியமிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். 

மாதத் தொடக்கத்தில் 6–க்கு அதிபதி சந்திரனைக் குரு பார்க்கின்றார். எனவே உத்தியோக முயற்சிகள் கைகூடும். வேலைக்கு  விண்ணப்பித்து, விண்ணப்பித்து வீடு தேடி நல்ல தகவல் வரவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது அலுவலகத்திற்கு வரச்சொல்லி அதிகார பூர்வமான அறிவிப்புகள் வரலாம். பயண வாய்ப்புக்கள் இம்மாதத்தில் அதிகரிக்கும். தூரதேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதா என்று கூட சிந்திப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் வாகனம் வாங்கும் முயற்சியிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் சூழல் உருவாகும்.

ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்யுங்கள். ராகு–கேதுக்களுக்குப் பிரீதி செய்யுங்கள். இம்மாதம் நடைபெறும் நவராத்திரி விழாவில் அம்பிகை வழிபாட்டை முழுமையாக மேற்கொள்ளுங்கள். இன்பங் களும், இனிய பலன்களும் வந்து சேரும்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ர பகவான் செல்கின்றார். சுக ஸ்தானம் மற்றும் ஒன்பதாமிடத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9–ம் இடத்திலேயே பலம் பெறுவது யோகம்தான். ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும் என்பது ஜோதிடக் கருத்து, அந்த அடிப்படையில் மிஞ்சும் அளவிற்கு பொருளாதாரத்தைச் சுக்ரன் மேம்படுத்திக் கொடுக்கப் போகின்றார். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பெண்களால் பெருமை வரும். பிறர் போற்றுமளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். தாய் வழி ஆதரவு பெருகும். வாகன யோகம் உண்டு.

உச்ச புதனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 8–ம் இடத்தில் உச்சம் பெற்றிருக்கின்றார். அந்த நிகழ்வு அக்டோபர் 4–ம் தேதி நிகழவிருக்கின்றது. மறைந்த புதன் நிறைந்த தனலாபத்தைத் தரும் என்பார்கள். எனவே தொழிலில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் மனஅமைதிக் குறைவு ஏற்டலாம். உறவினர் வழியில் பிரச்சினைக் உருவாகி மறையும். அரைகுறையாகச் சில காரியங்கள் நிற்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அப்பொழுதுதான் பிரச்சினைகளைச் சந்திக்காமல் இருக்க இயலும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். இதன் விளைவாக உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும். ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். புதிய நபர்களின்அறிமுகத்தாலும், நட்பாலும் ஒப்பந்தங்க்ள வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களால் அனுகூலங்கள் கிடைக்கும். பெண்களால் பெருமை வந்து சேரும் நேரமிது. இம்மாதம் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும், அனுமனையும், வழிபாடு செய்யுங்கள். நவக்கிரக நாயகியை வழிபட்டு நன்மைகளை வரவழைத்துக் கொள்ளுங்கள். 

 பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் மாதமாகும். குடும்பச் சுமை கூடுதலாக இருக்கும். கூடயிருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். வேலை ஆட்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஊர் மாற்றச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நலலது. கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். மாதக் கடைசியில் குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வார வழிபாடாக சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபடுவது நல்லது. நவராத்திரி விழாவில் அம்பிகையை வழிபட்டு இன்பங்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: செப்டம்பர் 17, 18, 22, 23 அக்டோபர்: 2, 3, 8, 9, 15, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.