News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - கடகம்

புரட்டாசி மாத ராசி பலன் - கடகம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

சொத்து சேர்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்போம்!

நேருக்கு நேர் பேசிக் காரியத்தை எளிதில் முடித்துக் கொடுக்கும் கடக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் சந்திரன் 9–ல் சஞ்சரித்து குருவால் பார்க்கப்படுகின்றார். எனவே, குருச்சந்திர யோகம் உருவாகின்றது. அதன் விளைவாகக் குடும்ப முன்னேற்றம் கூடும். செய்தொழிலில் லாபம் வந்து சேரும். பிள்ளைகள் கல்வியில் உயர்வு பெற்று வெளிநாடு செல்லும் திட்டங்கள் நிறைவேறும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.

சகாய ஸ்தானத்தில் சூரியன் இருப்பது யோகம் தான். வழக்குகளில் வெற்றி கிட்டும். வாய்தாக்கள் ஓயும். குடும்பத்தில் மூன்றாம் நபரால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வீடு, வாகனம் வாங்க அரசுவழிச் சலுகைகள் கிடைக்கலாம்.  

பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கின்றார். பஞ்சம ஸ்தானாதிபதி 6–ல் இருக்கின்றார். எனவே பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. என்ன இருந்தாலும் 2–ல் ராகுவும், 8–ல் கேதுவும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. ஏற்றமும், இறக்கமும் ஏற்படுத்தும். சர்ப்பதோஷ அமைப்பில் இருப்பதால் நாகசாந்திப் பரிகாரங்களை யோகமான நாளில் செய்து கொள்வது நல்லது. 

அஷ்டமத்து கேது அலைச்சலை உண்டாக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயத்தைக் குறைத்துக் கொடுக்கும். ஒரு சில காரியங்கள் முடிவடைவது போல் இருந்து கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். இனம்புரியாத கவலையை ராகுவும், கேதுவும் வழங்கும் என்பதால் தான் சிறப்பு வழிபாடுகளை செய்து செல்வநிலையை ஓரளவேனும் உயர்த்திக் கொள்ள இயலும். எதிரிகள் ஸ்தானத்தில் செவ்வாய் பலம்பெறுவதால் முருகப்பெருமான் வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும்  மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கடன் சுமையிலிருந்து விடுபடும் வாய்ப்பும், கவலையிலிருந்து விடுபடும் வாய்ப்பும் தானாக வந்து சேரும். மாதக் கடைசியில் குடும்பத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடிவரப்போகின்றது. 

சுகம் தரும் சுக்ரப்பெயர்ச்சி!

சுக்ரன் உங்கள் ஜாதகத்தை பொறுத்தவரை நன்மைகள் அதிகம் செய்யமாட்டார் என்றாலும் கூட, சுக ஸ்தானத்தில் வலுப்பெறுகின்ற பொழுது சில புதிய திட்டங்களுக்கு அடிகோலுவார். அது செப்டம்பர் 19–ம் தேதி நிகழவிருக்கின்றது. இக்காலத்தில் பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் போதுமானதாக இருக்கும். பழுதுகளை முன்னிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கடல் தாண்டி வரும் தகவல் அனுகூலமாக இருக்கும்.

உச்ச புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். இதுபோன்ற காலங்களில் நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்துப் பாதிப்புகளிலிருந்தும் அகல்வீர்கள்.  உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.  சம்பள உயர்வும், நினைத்த இடத்திற்கு இடமாறுதலும் கிடைத்து சந்தோஷத்தை ஏற்படுத்தும். 

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். சுக லாபாதிபதி பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் நன்மை ஏற்படும். பெண்கள் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேருவதோடு, பண வரவும் கிடைக்கும். உதிரி வருமானங்களால் உள்ளம் மகிழும். எதிரிகள் விலகுவர். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். இம்மாதம் பவுர்ணமி வழிபாடு பலன் தரும். அம்பிகை வழிபாடு இன்பம் வழங்கும். 

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் குருச்சந்திர யோகத்தோடும், பரிவர்த்தனை யோகத்தோடும் பிறக்கும் மாதமாகும். வருமானப் பற்றாக்குறை அகலும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கணவன், மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க குடும்பத்தினர் முன்வருவர். பிள்ளைகள் பெருமையைத் தேடித்தருவர். நகை வாங்கும் யோகம் உண்டு. உறவினர் பகை அகலும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். மாதக் கடைசியில் மங்கள நிகழ்ச்சிக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு. நவராத்திரி நாயகியை வழிபட்டு நலங்களையும், வளங்களையும் வரவழைத்துக்கொள்ளலாம்.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: செப்டம்பர்: 19, 20, 28, 29 அக்டோபர்: 3, 4, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.