News
Loading...

ஒரு வருட நஷ்டம் 15 ஆயிரம் கோடி!

ஒரு வருட நஷ்டம் 15 ஆயிரம் கோடி!

ஆட்சிக்கு எதிரான செய்தி​களையோ,  தகவல்களையோ எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சொன்னால் அது சட்டமன்ற அவைக்குறிப்பில் ஏறாது. திட்டங்களில் முறைகேடு, குறைபாடு பற்றி பேச அனுமதி கிடைக்காது. அப்படிப்பட்ட சட்டமன்றத்தில்​தான் அரசின் திட்டங்களில் நடந்த வண்டவாளங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது சி.ஏ.ஜி.

Comptroller and auditor general of India (CAG) என்கிற இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை, மத்திய, மாநில அரசுகளின் கணக்குகளை ஆய்வு செய்யும் அதிகாரம் கொண்ட தனி அமைப்பு. அரசின் திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதம், முறைகேடுகள், பணவிரயம், வரி ஏய்ப்பு, கையாடல், நிதி முடக்கம், பயனற்றச் செலவுகள், முறையற்ற நிர்வாகம், பயனற்ற முதலீடு என எல்லா அம்சங்களையும் சி.ஐ.டி-போலத் துப்பறிவதுதான் சி.ஏ.ஜி-யின் வேலை. ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி 2ஜி விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது சி.ஏ.ஜி-தான். விமானம் வாங்கியதில் முறைகேடு தொடங்கி நிலக்கரி ஒதுக்கீடு வரையில் நடந்த தகிடுதத்தங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது சி.ஏ.ஜி. தமிழக அரசின் பல்வேறு துறைகளையும் பொதுத் துறை நிறுவனங்களையும் ஒவ்வோர் ஆண்டும் அலசி ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும். அந்த ரிப்போர்ட்தான் தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிராக நிறைய விஷயங்கள் அந்த ஆடிட் ரிப்போர்ட்டில் இருந்தும், அது சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. சி.ஏ.ஜி-யின் ஆடிட் ரிப்போர்ட்டை சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் கட்டாயம் வைக்க வேண்டும் என்பது சட்டம். அந்த வகையில்தான் தணிக்கை, அறிக்கை தாக்கல் ஆனது. அந்த ஆடிட் ரிப்போர்ட்டில் இருந்து ட்ரெயிலர் இங்கே...

 ஒரு மாநில அரசின் வருவாயில் விற்பனை வரி உள்ளிட்ட வரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாநில அரசு குறைவான வரி பெற்றது; வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்காமல் தவறவிட்டது; வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் உரிய அபராதம் வசூலிக்காமல் போனது என்று பல தவறுகளால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பைத் தமிழக அரசு சந்தித்துள்ளது.

 வணிகவரி, மாநில ஆயத்தீர்வை, வாகனங்கள் மீதான வரி முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம், மின்வரி, சுரங்கம் மற்றும் கனிமவளங்களுக்குரிய வரி வரவுகளை ஆய்வு செய்ததில், குறைவான வரி மதிப்பீடு செய்ததால், 803 கோடி ரூபாய் இழப்பு.

 விதிமுறைகளுக்கு மாறாக ரூ.40.90 கோடி செலவில், 9 புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்று அதில் தோல்வி அடைந்ததால் வேளாண்மைத் துறையில் நஷ்டம் ஏற்பட்டது. அதுபோல, வேளாண் திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த மானியத் தொகை 36.62 கோடி ரூபாயை மாநில அரசு பயன்படுத்தவில்லை. மேலும் தவறான நிதி மேலாண்மையால், ரூ.86 கோடி ‘நிதி முடக்கம்’ ஏற்பட்டுள்ளது.

ஒரு வருட நஷ்டம் 15 ஆயிரம் கோடி!

மீன்குஞ்சுகள் வளர்க்க பொருத்தமற்ற இடங்களைத் தேர்வு செய்ததில் நஷ்டம். ‘மீன் பண்ணைகளைத் தரம் உயர்த்துகிறோம்’ எனச் சொல்லி கோடிக்கணக்கில் செலவு செய்த பிறகும், உற்பத்தியின் அளவு அதிகரிக்கவில்லை. ‘நைட் சபாரி’ என்ற பெயரில், இரவு நேர வனச் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு நிதி ஆதாரத்தை உறுதி செய்யத் தவறியதால், தேவையற்ற நஷ்டம் ஏற்பட்டது.

 2012 முதல் 2015 வரையில் வனவிலங்குகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 166. இதில், 133 நிகழ்வுகள் யானைகளால் ஏற்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 2012-15 வரை இயற்கைக்கு மாறான வகையில் 23 யானைகள் இறந்துள்ளன. அவற்றில், 16 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. யானை வழித்தடங்களைக் கண்டறிந்து அவற்றை அறிவிப்பதில் அரசாங்கம் செய்த தாமதமே இதற்குக் காரணம். யானை நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட அகழிகளின் பராமரிப்புக்கு 2014-15-ம் ஆண்டில் நிதி ஒதுக்கவில்லை. மீட்பு மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1.25 கோடி ஒதுக்கியது. ஆனால், முறையாக ஆராயாமல், அதை திருச்சியில் உள்ள எம்.ஆர். பாளைய காப்புக்காட்டில் செலவிட்டது. ஆனால், அங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை என்பதை ரூ.90 லட்சத்தைச் செலவழித்து, உள்கட்டமைப்பை முடித்தபிறகே வனத்துறை உணர்ந்தது. 

 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், மேற்கொள்ளப்பட்ட பணிகளை முன்கூட்டியே முடித்ததால், அதில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் நஷ்டம். மேலும், அதில் குறைநிவர்த்திப் பிரிவைச் செயல்படுத்தாததால், ஏற்பட்ட கூடுதல் செலவீனம் 4 கோடி ரூபாய். சாலைகள் அமைக்க கையகப்படுத்திய நிலங்களைப் பயன்படுத்தாமல் போனதால் 3.86 கோடி ரூபாய் முடங்கியது.

 மத்திய அரசு ஒதுக்கிய நிதியைச் சமூகநல ஆணையம் பயன்படுத்தவில்லை. சமூகநல ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 375 இல்லங்கள் பதிவுசெய்யப்படவில்லை. அரசு மற்றும் என்.ஜி.ஓ-க்களால் நடத்தப்பட்ட இல்லங்​களில் இருந்து, 2010-15 காலத்தில் தப்பியோடிய 433 குழந்தைகளில் 202 பேர் கண்டுபிடிக்கப்​படவில்லை.

 வேலைவாய்ப்பு அலுவலகங்களை கம்ப்​யூட்டர்​மயமாக்க, சாஃப்ட்வேர் தயாரிக்க திட்டம்போட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்பது தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 6 கோடி ரூபாய் நஷ்டம்.

 சென்னைப் பல்கலைக்கழகம் 4.91 கோடி ரூபாய் செலவில், உருவாக்கிய மெய்நிகர் பல்கலைக்கழகச் செயல்முறை மற்றும் வீடியோ எஜிகேஷன் திட்டத்தைச் செயல்படுத்தத் தகுந்த பணியாளர்கள் இல்லை. அதனால், உபகரணங்கள் பயனற்றுப்போனதோடு திட்டமும் நிறைவேற வில்லை.

 கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 77 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட விபத்து மற்றும் தலைக்காய சிகிச்சைப் பிரிவு கட்டடம் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

 43 சர்க்கரை ஆலைகளில் 2 பொதுத்துறை நிறுவனங்கள் 2014-15 காலகட்டத்தில் அதன் நோக்கத்தையும் இலக்கையும் எட்டவில்லை. தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தில் 2.55 லட்சம் டன்னும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில், 5.08 லட்சம் மெட்ரிக் டன்னும் கரும்பு கிடைப்பது குறைந்தது. அரைக்கப்பட்ட கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரையின் அளவுகள் இந்தத் தொழிலுக்கான பொது அளவுகளுடன் ஒத்திருப்பதை பேணத் தவறியதால், இரு நிறுவனங்களும் ரூ.110 கோடி மதிப்பிலான, 36 ஆயிரத்து 472 மெட்ரிக் டன் சர்க்கரை இழப்பை அடைந்தன.

ஒரு வருட நஷ்டம் 15 ஆயிரம் கோடி!

காற்றாலை மின் உற்பத்தியில் குஜராத், ஆந்திராவுக்கு அடுத்தபடியாக 14 ஆயிரத்து 152 மெகாவாட் ஆற்றல் திறன்கொண்டு தமிழ்நாடு மூன்றாம் இடம்  வகிக்கிறது. மிக அதிக அளவில் காற்றாலை நிறுவுவதற்கான வளம் இருந்தும் மாநில அரசு காற்றாலை மின் சக்திக்கென தனிக் கொள்கையை வெளியிட​வில்லை. இதனால் அரசு நிறுவனங்களான மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொட​ரமைப்புக் கழகம் ஆகியவை காற்றாலை மின் சக்திக்கான திட்டமிடல் மற்றும் கொள்முதல் குறித்த வழிகாட்டுதல் இன்றிச் செயல்பட்டன. 

 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ, 2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்துக்கு ரூ.87.59 கோடியை வசூலிக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் டான்ஜெட்கோவுக்கு ரூ.159.20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

 மத்திய அரசின் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி’ திட்ட செலவுக்கு மத்திய அரசு 75 சதவிகிதமும் மாநில அரசு 25 சதவிகிதமும் ஏற்க வேண்டும்.  தமிழகத்தில், 8 மாவட்டங்களில் இந்தத் திட்டம் தணிக்கை செய்யப்பட்டது. அதில், 190 அரசுப் பள்ளிகளில், பள்ளி அளவிலான தொலைநோக்குத் திட்டம், ஆண்டுத் திட்டம் என்று எதுவும் இல்லை. விதிமுறைப்படி 5 கி.மீ சுற்றளவுக்கு ஓர் உயர்நிலைப் பள்ளியும், 7 கி.மீ சுற்றளவுக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளியும் இருக்க வேண்டும். அந்த விதிமுறைகள் எங்கும் கடைப்பிடிக்கப்படவில்லை. 1,944 பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டியிருந்தும், 2009-12 காலகட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,096 பள்ளிகளே தரம் உயர்த்த அனுமதி பெற்றன. அதில், 898 பள்ளிகளில் கட்டுமானப் பணியே தொடங்கப்படவில்லை. 119 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்களும், 149 பள்ளிகளில் நூலகங்களும், 94 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும் இல்லை. அதுபோல், தேர்வில் சரியான தேர்ச்சி விகிதம் இல்லை.

 போக்குவரத்துக் கழகங்கள், மின் நிறுவனங்கள் என அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 64 பொது நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் 2014-2015-ம் ஆண்டில் 14,868 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதாவது, தமிழக அரசுக்குத் தினமும் 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது, கடந்த ஆண்டுக்கான நஷ்டம் மட்டுமே. ஒட்டுமொத்தமாக இந்த 64 நிறுவனங்களையும் சேர்த்து இதுவரையில் ஏற்பட்ட திரண்ட இழப்பு 65,440 கோடி ரூபாய். அரசுக்கு இழப்பு தரும் நிறுவனங்களில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றன மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் மின்தொடரமைப்புக் கழகமும். இந்த இரு நிறுவனங்களின் திரண்ட இழப்பு ரூ.54,952 கோடி. எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாகவும் அரசாங்கத்துக்கு மொத்தம் ரூ.2,654 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

- ஜோ.ஸ்டாலின்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.