News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - மிதுனம்

புரட்டாசி மாத ராசி பலன் - மிதுனம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள்!

உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்றும் வைத்துப் பேசாமல் உள்ளன்போடு பேசும் மிதுன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பட்ட துன்பங்கள் மாறும். பண வரவு திருப்தி தரும். அஞ்சல் வழியிலும், அலைபேசி வழியிலும் வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.

அர்த்தாஷ்டம குரு வலிமை இழந்திருப்பது யோகம்தான். அதுமட்டுமல்ல, விரயாதிபதி சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே சுபவிரயங்கள் செய்ய உகந்த நேரமாக இது அமைகின்றது. இடம் புதிதாக வாங்கும் யோகம் உண்டு. இல்லம் புதிதாய் கட்டும் அமைப்பும் உருவாகும். தங்கம், வைரம் வாங்கி மன நிறைவு காண்பீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் வீட்டில் நடப்பதற்கு வாய்ப்புகள் கைகூடி வரும். 

இதுவரை 6–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த செவ்வாய் 7–ம் இடத்திற்குச் சென்று உங்கள் ராசியைப் பார்க்கின்றார். தைரியகாரகன் செவ்வாய் பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உங்களுக்குள் பிறக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து சேருவர். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கூடுதலாகக் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சனி சஞ்சரிப்பது யோகம் தான். 8–ம் இடத்திற்கும், 9–ம் இடத்திற்கும் அதிபதியானவர் சனி பகவான். அஷ்டமாதிபதி 6–ல் சஞ்சரிக்கும் பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் திருப்பங்கள் உருவாகும். முடிவடையாத சில காரியங்கள் முடிவடைந்து முன்னேற்றம் ஏற்படும். மாற்று இனத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். ஏற்ற விதத்தில் தொழில்கள் அமையும். லாபம் எதிர்பார்த்த அளவிற்கு வந்து சேரும். 

உங்கள் ராசிநாதனோடு ராகு இணைந்து செயல்படுகின்றார். எனவே சக்தி வழிபாடு உங்கள் சஞ்சலங்களைத் தீர்க்கும். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளும் இணைந்து செயல்படும் பராசக்தி வழிபாட்டை நவராத்திரியில் மேற்கொள்ளுங்கள். நலம் யாவும் வந்து சேரும்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். நீச்ச பலன் மாறி நற்பலன் உங்களுக்குக் கிடைக்கப் போகின்றது. துலாம் ராசி சுக்ரனுக்குச் சொந்த வீடு என்பதால் இக்காலத்தில் எண்ணற்ற நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகத்தான பலன் கிடைக்கும். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில்  கவனம் செலுத்துவீர்கள். வரவு திருப்தி தரும். 

உச்ச புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். ராசிநாதன் உச்சம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஊர் மாற்றம், இட மாற்றம், நாடு மாற்றம் போன்றவை ஒரு சிலருக்கு வந்து சேரலாம். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள். உச்ச புதன் சூரியனோடு இணைவதால் புத ஆதித்ய யோகம் ஏற்படுகின்றது. எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வாகன மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். மாமன் வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். 12–க்கு அதிபதி 6–ம் இடத்திற்குச் செல்லும்பொழுது பயணங்களால் பலன் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆதாயம் கூடும் நேரமிது. இம்மாதம் பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும். 

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

குடும்பச்சுமை கூடும் மாதமாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். கணவன்–மனைவி இடையே கனிவு கூடும். சகோதரிகள் விட்டுக் கொடுத்துச் செல்வர். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. சனிக்கிழமை விரதமும், அனுமன் வழிபாடும் சஞ்சலம் தீர்க்கும்.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: செப்டம்பர்: 19, 20, 26, 27, 30 அக்டோபர்: 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.