News
Loading...

தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி

தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி

இளைஞர்களின் நமக்கு நாமே திட்டத்தில், சிவகங்கை அருகே உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக ஜொலிக்கிறது. மாணவர்கள் கலர்புல் சீருடையில் வந்து கலக்குகின்றனர். சிவகங்கை அருகே உள்ள கீழச்சாலூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் விவசாயம், கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என இக்கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வு இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளியை, தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற வேண்டும் என இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். பள்ளிக்கு என்னென்ன தேவை என்பதை ஆசிரியர்களிடம் கேட்டு ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய தொடங்கினர். இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், வெளிநாடுகளில் வசிப்போர், மாணவர்களின் பெற்றோர் இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு சீருடை, விளையாட்டுக்கு தனி சீருடை, சுத்திகரிப்பு இயந்திரம், மேஜை, நாற்காலி, பெஞ்ச், மின்விசிறி, கழிவறை போன்ற வசதிகளை செய்து கொடுத்து அசத்தியுள்ளனர். பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு தனியார் பள்ளிக்கு நிகராக இப்பள்ளி ஜொலித்து வருகிறது. இது குறித்து பள்ளி கல்விக்குழு தலைவி கணேஷ்வரி கூறுகையில், ‘எங்கள் ஊர் மிகவும் பின்தங்கிய கிராமம். போதிய அடிப்படை வசதி இல்லாத நிலையில், அரசு பள்ளியை மேம்படுத்த நினைத்த இளைஞர்கள் ஊர் பெரியவர்களுடன் பேசி தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர். தனியார் பள்ளிக்கு நிகராக இருப்பதால் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது’ என்றார்.

இளைஞர் மன்றத்தை சேர்ந்த செல்லமுத்து கூறுகையில், ‘இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்தோம். இதற்காக ஊர் பெரியவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் எங்களை ஊரை சேர்ந்தவர்களிடம் நிதி பெற்று பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். எங்கள் ஊரை சுற்றி பல தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எங்கள் ஊரை சேர்ந்த யாரும் குழந்தைகளை சேர்ப்பதில்லை. எங்கள் ஊரிலுள்ள அரசு பள்ளியிலேயே சேர்த்து வருகின்றனர். எங்களது சேவை பணி தொடரும்’ என்றார்.

மாணவர் அஜய்குமார் கூறுகையில், ‘பள்ளியில் கொடுத்த ஒரு சீருடையை ஆண்டு முழுவதும் பயன்படுத்தினோம். தற்போது நல்ல சீருடை, விளையாட்டுக்கு என தனி சீருடை அணிந்து வருகிறோம். முன்பு தரையில் அமர்ந்து படித்த நாங்கள் தற்போது இருக்கையில் அமர்ந்து படித்து வருகிறோம். இது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...