News
Loading...

தண்ணீர் வீணே கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டும் - கலைஞர் அறிக்கை

தண்ணீர் வீணே கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டும் - கலைஞர் அறிக்கை

கலைஞர் அறிக்கை :


தண்ணீர் வீணே கடலில் கலப்பதைத் தடுத்து, தென்னக நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிட வேண்டும் ..
காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் நேற்றையதினம் (20-9-2016) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, நான்கு வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர்ப் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைப்பது ஒன்றே, காவிரி நதிநீர்ப் பங்கீட்டினை, சட்டப்படி முறையான - நியாயமான அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நிலைப்பாட்டினை தி.மு. கழகம் தொடக்கத்திலேயே மேற்கொண்டு, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

2013ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி மூன்றாண்டு களுக்கு முன்பே வாரியமும் குழுவும் அமைக்கப்பட்டிருந்தால், இந்நேரம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து, இரு மாநில மக்களுக்கும் நீர்ப் பங்கீடு பழக்கப்பட்டுப் போயிருக்கும். பல்வேறு அரசியல் காரணங்களினால் தாமதம் ஏற்பட்டு விட்டது. இப்போது கடைசியாக உச்ச நீதி மன்றமே தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு வாரத்திற்குள் அமைத்திட வேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளது. காவிரி நதி நீர்ப் பிரச்சினையின் தொடக்கம் முதல் முக்கியமான ஒவ்வொரு கட்டத்திலும் ஆக்க பூர்வமான பங்களிப்பை ஆற்றியவன் என்ற முறையில், காவிரிப் பிரச்சினையில், உச்ச நீதி மன்றத்தின் மைல் கல் போன்ற இந்த மகத்தான தீர்ப்பினை நான் மனதார வரவேற்று மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகள் பல்லாண்டுகளாகப் பட்ட வேதனைக்கும், சிந்திய வியர்வைக்கும், சொரிந்த கண்ணீருக்கும் கிட்டியிருக்கும் வெற்றிப் பரிசு என்பதில் கிஞ்சிற்றும் அய்யமில்லை. “Light at the end of the Tunnel” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு; அதற்கு “பாதையின் விளிம்பில் பரவிடும் வெளிச்சம்” என்று பொருள். கடைசியாகக் காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத்தின் மூலமாக ஒளிக்கீற்று தோன்றியுள்ளது. தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கத் தக்கது, வரவேற்றுப் பாராட்டத்தக்கது, பாராட்டி மகிழத் தக்கது, மகிழ்ந்து என்றும் நினைவு கூரத் தக்கது!

மேலும் உச்ச நீதி மன்றம் தமிழகத்திற்கு 21-9-2016 முதல் 
27-9-2016 வரை ஏழு நாட்களுக்கு விநாடிக்கு ஆறாயிரம் கன அடி நீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. 15 ஆயிரம் கன அடி, 12 ஆயிரம் கன அடி என்பது 3 ஆயிரம் கன அடியாக மிகவும் சுருங்கி தற்போது 6 ஆயிரம் கன அடியாகச் சுருங்கியிருக்கிறது. 3 ஆயிரம் கன அடிக்கே , கனத்த இதயத்தோடு தருகிறோம் என்றும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தர முடியாது என்றும் மறுத்து வந்த கர்நாடகம், உச்ச நீதி மன்ற உத்தரவை செயல்படுத்த இயலாத உத்தரவு என்று சொல்லிவிட்டு, எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அப்படியே நிறைவேற்ற முன் வந்தாலும், மேட்டூர் அணை நீர் சம்பா சாகுபடிக்காகத் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், சம்பாப் பயிரை அ.தி.மு.க. அரசு கடைசி வரை காப்பாற்றுமா - விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கைக்கேற்ப நடந்து கொள்ளுமா என்பது காலப் போக்கில் தெளிவாகி விடும். 

இன்றைய நாளேடுகளில் மேட்டூர் அணை திறப்பு பற்றிய செய்தி விரிவாக வந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே, மேட்டூர் அணையை செப்டம்பர் 20ஆம் தேதி திறக்கப் போவதாக அறிவித்து, திறந்து விடப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற போது 2006ஆம் ஆண்டில் ஜுன் 12ஆம் தேதி அன்றும் - 2007ஆம் ஆண்டில் ஜூலை 18ஆம் தேதி அன்றும் - 2008ஆம் ஆண்டு 12-6-2008 அன்றும் - 2009ஆம் ஆண்டு 28-7-2009 அன்றும் - 2010ஆம் ஆண்டு 28-7-2010 அன்றும் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப் பட்டு, குறுவை மற்றும் சம்பா சாகுபடி முறையாக நடைபெற்றது.

ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 2002இல் செப்டம்பர் 6 அன்றும், 2003இல் அக்டோபர் 7 அன்றும், 2004இல் ஆகஸ்ட் 12 அன்றும், 2005இல் ஆகஸ்ட் 4 அன்றும் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அது போலவே 2012இல் செப்டம்பர் 17 அன்றும், 2013இல் ஆகஸ்ட் 8 அன்றும், 2014இல் ஆகஸ்ட் 10 அன்றும், 2015இல் ஆகஸ்ட் 9 அன்றும் தற்போது 2016இல் செப்டம்பர் 20 அன்றும் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அ.தி.மு.க. ஆட்சியில் மிகவும் தாமதமான தண்ணீர் திறப்பால், கடந்த ஐந்து ஆண்டுகளாக டெல்டா மாவட்டங் களில் குறுவை பொய்த்துப் போய் விட்டது; தற்போது சம்பாவும் முழுமையாக நிறைவேறுமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

இதிலிருந்தே ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மேட்டூர் அணை யில் நீர்திறக்கப்படுவது கால தாமதம் செய்யப்பட்டே திறந்து விடப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம். டெல்டா மாவட்டங்களில் சாகுபடி முடிவடையும் நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. பொதுவாக சம்பா சாகுபடிக்கு தினமும் 1.25 டி.எம்.சி. வீதம் 100 நாட்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால் மேட்டூர் அணையில் இப்போது 50.03 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. இதில் 20 டி.எம்.சி. தண்ணீரை, குடிநீருக்காக அணையில் இருப்பு வைக்க வேண்டும். இதனால் தண்ணீர் திறந்தாலும் அதை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடியைத் தொடங்கி, அதன் பின் வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டால், விவசாயிகள் தான் பாதிக்கப்படுவார்கள். தினமும் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் பத்து நாட்களுக்கேனும் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் கடை மடை வரை தண்ணீர் வந்தடையும். இல்லை என்றால், இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சம்பா சாகுபடிக்கு உதவாது. இதனால், 13 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளதே என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்தை உறுதிப்படுத்திடும் வகையில், பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர், “ஜனவரி 28 வரை நீர் திறக்க வேண்டும். வடகிழக்குப் பருவ மழை ஏமாற்றினால், நிலைமை சிக்கலாகி விடும். வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். திறக்கப்பட்டுள்ள நீர், கடைமடையைச் சென்றடையுமா என்பது கேள்விக்குறி தான்.

மேட்டூர் அணையில் நீர் இருப்பு 50.03 டி.எம்.சி. யாகவும், நீர் மட்டம் 87.68 அடியாகவும் உள்ளது. இந்த நீர் அதிகபட்சமாக 45 நாட்களுக்கு மட்டும் தான் உதவும்; கர்நாடக அணைகளிலிருந்து மேலும் 50 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தால் மட்டுமே சம்பாப் பயிரைக் காப்பாற்ற முடியும். சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், கடந்த 5ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசின் சார்பில் 11ஆம் தேதி தாக்கல் செய்த மனுவினை 12ஆம் தேதி விசாரித்த உச்ச நீதி மன்றம், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. 19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டது.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.ஆர். பாண்டியன் கூறும்போது, “ஒரு உயர்மட்டக் குழுவை நியமனம் செய்து, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகளை ஆய்வு செய்து பாசன பகுதிகளின் உண்மை நிலையைக் கண்டறிந்து, பற்றாக்குறை காலத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றி உரிய தண்ணீரைப் பெற்றால் தான் விவசாயப் பணிகளைத் தொடங்க முடியும். குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்கே 30 நாட்களுக்கு 60 டி.எம்.சி. தண்ணீர் தேவையிருக்கிறது. முழுமையாகப் பயிரைப் பாதுகாப்பதற்கு ஜனவரி இறுதி வரை குறைந்தது மேலும் 100 டி.எம்.சி. தண்ணீர் தேவை” என்று கூறியிருக்கிறார். இந்த 100 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு வந்து வழங்கிட, அ.தி.மு.க. அரசு என்ன மாதிரித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது; அது ஜெயலலிதாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! பற்றாக்குறை காலப் பகிர்வுத் திட்டத்தைப் பற்றி உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு உரிய முறையில் வலியுறுத்தியதா என்று தெரியவில்லை.

நான் ஏற்கனவே தெரிவித்தவாறு, காவிரிப் பிரச்சினையிலே உச்ச நீதி மன்றமோ, காவிரி மேற்பார்வைக் குழுவோ எந்த முடிவினை எடுத்து அறிவித்தாலும் உடனடியாக கர்நாடக மாநில முதல் அமைச்சரும், அமைச்சர்களும் எவ்வாறு செயல்படுகிறார்கள், எவ்வாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து கலந்தாலோசிக்கிறார்கள், எவ்வாறு சட்ட வல்லுநர் களையெல்லாம் அழைத்துப் பேசுகிறார்கள், எவ்வாறு அமைச்சரவையைக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார்கள், இன்றைக்குக் கூட, அமைச்சரவைக் கூட்டத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறார் கர்நாடக முதல்வர்; ஆனால் தமிழ்நாட்டிலும் ஒரு அரசு இருக்கிறதே, அவர்கள் இதைப் பற்றியெல்லாம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று கேட்டிருந்தேன். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை; காவிரிப் பிரச்சினையிலே தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதற்கும் எந்தப் பதிலும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாததாலேயே ஜெயலலிதா கைதேர்ந்த அரசியல்வாதி என்று சொல்லும் அளவுக்கு ஒரு நாளேடு போயிருக்கிறதென்றால், தமிழக நிலைமை எவ்வளவு வெட்கக் கேடானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சம்பாப் பயிரை முழுமையாகக் காப்பாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை அதிமுக அரசு மேற்கொள்ள விருக்கிறது என்பது ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெளிவுபடுத்தப் பட்டால் தான், நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் விவசாயிகள் சாகுபடிப் பணிகளைச் செய்திட இயலும் என்பதை உணர வேண்டும். இதற்கும் பதில் இல்லாமல் போனால், பாதிப்பு விவசாயிகளுக்குத் தான்.

அரசியல் காரணத்திற்காக, மேலும் எப்படியெல்லாம் தாமதப்படுத்தலாம் என்று வழியைத் தேடுவதில் கவனம் செலுத்திக் காலத்தைக் கழிக்காமல், உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுப்படியும், நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்; பசிப்பிணி போக்க உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் தர வேண்டும். அ.தி.மு.க. அரசு வாரியமும், குழுவும் அமைந்திட, தனது அரசியல் பலத்தையும் செல்வாக்கையும் முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும். தேவையான தண்ணீரை வைத்துக் கொண்டு திண்டாடுவதைத் தவிர்த்திடவும், மாநிலங்களுக்கிடையே பகை உணர்வை ஒழித்திடவும், பயன்படுத்தப்படாமல் தண்ணீர் வீணே கடலில் கலப்பதைத் தடுத்து, தென்னக நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிடும் முயற்சியை மத்திய - மாநில அரசுகள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றும் நெருக்கடியான இந்த நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.