News
Loading...

கள்ளாட்டம் - திரை விமர்சனம்

கள்ளாட்டம் - திரை விமர்சனம்

நடிகர் : நந்தா
நடிகை  : சாரிகா
இயக்குனர் : ரமேஷ் ஜி
இசை : குமார் எழிலன் எச்
ஒளிப்பதிவு : ரமேஷ் ஜி

ரிச்சர்டும், சரிகாவும் கணவன்-மனைவி. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர்களுக்கு ஒரு அழகாக பெண் குழந்தை இருக்கிறது. ஒருநாள் ரிச்சர்டு தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது, வேகமாக பைக் ஓட்டிவந்த இருவர் அந்த குழந்தை மீது மோதிவிட்டு தப்பிச் செல்கின்றனர். ரத்த வெள்ளத்தில் சரியும் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார் ரிச்சர்டு.

அவளது தலையில் அடிபட்டிருப்பதால் உடனடியாக சர்ஜரி செய்யவேண்டும் என்றும், அதற்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தையின் ஆபரேஷனுக்கு தனது வீட்டு பத்திரம், மனைவியின் நகை அனைத்தையும் சேட்டு கடையில் விற்று பணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் ரிச்சர்டு. ஆனால், சேட்டோ ரிச்சர்டிடம் பணத்தை கொடுப்பதுபோல் கொடுத்து பின்னாலேயே ஆள் அனுப்பி அந்த பணத்தை களவாடுகிறார்.

இதனால் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்கிறார் ரிச்சர்டு. போலீஸ் அதிகாரியான நந்தாவும், அவருடன் பணிபுரியும் இளவரசுவும் களவு போன பணத்தை எப்படி மீட்பது என்று திட்டம் போடுகிறார்கள். அதேவேளையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். 

ஆனால், ரிச்சர்டால் பணத்தை தயார் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கொள்ளையடித்ததில் யார், யாருக்கு சம்பந்தம் என்று தோண்டி துருவி விசாரித்து வரும் நந்தாவும் குழந்தையின் ஆபரேஷனுக்கு வேண்டிய பணத்தை தயார் செய்ய முடிவு செய்கிறார். 

ஆபரேஷன் நாள் நெருங்கும் சமயத்தில் நந்தா லஞ்சம் வாங்கியதாக அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இறுதியில், அந்த குழந்தையின் ஆபரேஷனுக்கு வேண்டிய பணம் தயார் ஆனதா? சிறையில் இருந்து நந்தா வெளிவந்தாரா? குழந்தையின் உயிருடன் கள்ளாட்டம் ஆடிய அந்த நபர் யார்? என்பதே மீதிக்கதை. 

நந்தா ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவந்த ‘வேலூர் மாவட்டம்’ சரிவர ஓடவில்லை. எனினும், தைரியமாக இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான விறுவிறுப்பு இவரிடம் இல்லாதது பெரிய ஏமாற்றம். படம் முழுக்க ஏதையோ பறிகொடுத்தவர் போலவே வருகிறார். விசாரணை செய்யும் காட்சிகளில்கூட முகபானையில் மாற்றமோ வேகமோ இல்லை. 

ரிச்சர்டு நடுத்தர வர்க்க குடும்பஸ்தனாக மனதில் பதிகிறார். குழந்தைக்கு என்னவாகிவிடுமோ என்று பதட்டத்துடன் அலையும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் சரிகாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே இளவரசுவின் எதார்த்தமான நடிப்புதான். நேர்மையான போலீஸ் அதிகாரியாக நந்தாவுடனேயே வலம்வரும் இவர் பேசும் எதார்த்த வசனங்களால் அந்த கதாபாத்திரத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. 

வில்லனாக வரும் ஏழுமலையும் தனது எதார்த்தமான நடிப்பை பதிவு செய்கிறார். டாக்டராக வரும் குமார் நடராஜன் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய பொறுமையான நடிப்பு, அவரை டாக்டராக மதிக்க தோன்றுகிறது.

தமிழ் சினிமாவுக்கு அதர பழசான ஒரு கதையையே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். கொள்ளை சம்பவம், அதைச்சுற்றி நடக்கும் ஒரு விசாரணை என தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப்போன கதைதான். இருப்பினும், ஏதாவது புதுமையாக சொல்ல வந்திருக்கிறார் என்று நினைத்தால் அதுவும் இல்லை. படத்தில் உள்ள நடிகர், நடிகைகளிடம் இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு கிரைம் கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு.

உமரின் இசையில் பாடல்கள் சூப்பர். ‘ரா ரா ரண்டி’ பாடல் குத்தாட்டம் போடவைக்கிறது. விளையாடு விளையாடு பாடல் அழகான மெலோடியாக மனதில் பதிந்திருக்கிறது. விறுவிறுப்புக்காக பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். ஆனால், காட்சிகள் அதற்கேற்ப விரியாததால் பெரிதாக எடுபடவில்லை. ரமேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலம் கூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘கள்ளாட்டம்’ தள்ளாட்டம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.