News
Loading...

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலி: காவிரியில் கர்நாடக அரசு ரகசியமாக தண்ணீரை திறந்துவிட்டது

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலி காவிரியில் கர்நாடக அரசு ரகசியமாக தண்ணீரை திறந்துவிட்டது

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலியாக காவிரியில் ரகசியமாக கர்நாடக அரசு 11 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து உள்ளது.  

50 டி.எம்.சி. தண்ணீர்

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 23ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “நடப்பு பாசன ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது “இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். ’வாழு, வாழ விடு’ என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் கர்நாடகம் நல்லிணக்க அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்.“ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

அதோடு தமிழக அரசின் சார்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த பட்டியல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தங்களால் எந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விட முடியும் என்பது குறித்த பட்டியலை கர்நாடகம் வருகிற திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவின் மீதான விரிவான விசாரணை திங்கட்கிழமை(நாளை) நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

சித்தராமையா ஆலோசனை

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா நேற்று காவிரி நீர் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் பாலி நாரிமன்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

பின்னர் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா “கர்நாடக அரசின் நிலைகுறித்து திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் அரசு வக்கீல்கள் அறிக்கை தாக்கல் செய்வார்கள்“ என்றார். அப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டு கண்டனத்திற்கு மேலும் ஆளாகாமல் இருக்க தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. தமிழகத் திற்கு 25 டி.எம்.சி. தண்ணீரை உடனே வழங்க கர்நாடக முதல்-மந்திரி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தண்ணீர் திறப்பு

இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு முறையான அறிவிப்பு இல்லாமல் ரகசியமாக காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக 25 டிஎம்சி நீரை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் (முழு கொள்ளளவு 49.5 டிஎம்சி ) தற்போது 17.68 டிஎம்சி, ஹேமாவதி அணையில் (முழு கொள்ளளவு 37.1 டிஎம்சி ) 18.38 டிஎம்சி, கபினி அணையில் (முழு கொள்ளளவு 19.52 டிஎம்சி ) 14.64 டிஎம்சி, ஹாரங்கி அணையில் (முழு கொள்ளளவு 8.5 டிஎம்சி) 7.24 டிஎம்சி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

தண்ணீர் திறந்து விடுவதை பகிரங்கமாக அறிவித்தால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என்பதால் ரகசியமாக தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணராஜாசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதமும், கபினி அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. நேற்று முதல் இந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தண்ணீர் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலை கடந்து பாய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7-ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...