News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - துலாம்

புரட்டாசி மாத ராசி பலன் - துலாம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

இடமாற்றங்களால் இனிய மாற்றம் வந்து சேரும் நேரம்!

முடியாத காரியத்தை முடிக்க முடியாது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் துலாம் ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே முதல் மூன்று நாட்கள் விரயங்கள் கூடுதலாக இருக்கும். விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நேரமிது. 

3, 6–க்கு அதிபதியான குரு 12–ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். அதிலும் தற்சமயம் குரு வலிமையிழந்திருப்பதால் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். மேலதிகாரிகளின் ஆதரவோடு மேன்மைகளைக் காண்பீர்கள். அரசியலில் மீண்டும் பொறுப்புகளைப் பெறும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்திலிருந்து விடுபட்டு விருப்ப ஓய்வில் வெளிவந்து ஏதேனும் சொந்தத்தொழில் செய்யலாமா? என்று சிந்திப்பீர்கள். இக்காலம் ஒரு பொற்காலம் என்றாலும் கூட ஏழரைச் சனியின் ஆதிக்கம் அல்லவா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே சனியின் ஆதிக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்ட பிறகே தொழில் செய்யத் தொடங்குவது நல்லது. 

சகோதர ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கின்றார். இதனால் உடன்பிறப்புகள் மீது ஏற்பட்ட பகை மாறும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகள் சாதகமாக அமையும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும்.

வாக்கு ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்கை சில சமயங்களில் காப்பாற்ற இயலாமல் போகலாம். எனவே யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால், கொடுக்கும் முன்பு ஒரு கணம் யோசிப்பது நல்லது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு வீண் பழிக்கு ஒரு சிலர் ஆளாக நேரிடும். 5–ல் கேது இருப்பதால் பிள்ளைகள் வழியிலும் விரயங்கள் உண்டு. அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. 

குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வரும் வாய்ப்பு கிட்டும். சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபடுவதோடு அனுமனுக்கு அகவைக்கு ஏற்ற வெற்றிலை மாலையை அணிவித்து வருவது நல்லது. 

 சுகம் தரும் சுக்ரப்பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசியான உங்கள் ராசிக்கு சுக்ரன் வரப்போகின்றார். நீச்சநிலை மாறி பலன்பெறும் சுக்ரனால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நிச்சயிக்கப்பெற்ற திருமணம் நடைபெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. செய்தொழிலில் லாபம் சிறப்பாக கிடைக் கும். வீடுகட்டிக் குடியேறுவதில் விருப்பம் செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தொல்லை அகலும். கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணிப்பொறித்துறையிலும் வளர்ச்சி காண்பீர்கள்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறப்போகின்றார். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரம் வரவைக்காட்டிலும் செலவு கூடும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். ஒரு சிலர் விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடலாம். தொழிலுக்கு மூலதனம் தேவைப்படுபவர்கள் என்றைக்கோ வாங்கிப் போட்ட இடத்தை இப்பொழுது இருமடங்கு லாபத்திற்கு விற்று அதை தொழில் வளர்ச்சிக்கு வைத்துக்கொள்வர். பூர்வீக சொத்து தங்கவில்லையே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். தொழில் வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.  

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் 2–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தடைபெற்று வந்த சுபநிகழ்வுகள் தானாகவே நடைபெறத்தொடங்கும். வியாபார விருத்தி உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்றவை இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்று மருத்துவத்தால் இழந்த வாய்ப்புகள் மீண்டும் வரும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமையில் பாதிக்கு மேல் குறைய வழிபிறக்கும். இம்மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டையும் அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

விரயங்கள் அதிகரிக்கும் மாதமாகும். மனம் போல ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பப் பிரச்சினைகளில் மூன்றாம் நபரின் தலையீட்டால் விரிசல்கள் ஏற்படலாம். குருவின் பார்வை பலத்தால் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரலாம். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். பிள்ளைகளின் கல்வி முயற்சிக்காகவோ, கடல் தாண்டும் முயற்சிக்காகவோ செலவிட முன்வருவீர்கள். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். விரய ஸ்தானம் பலம் பெற்றிருப்பதால் சேமிப்புக் கரைகிறதே என்ற கவலை மேலோங்கும். சனிக்கிழமை விரதமிருந்து, நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நலமும், வளமும் வந்து சேரும்.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்  செப்டம்பர்: 24, 25, 28, 29, அக்டோபர்: 2, 3, 4, 12, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.