News
Loading...

பாரி வேந்தருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்

பாரி வேந்தருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கித் தருவதாக கூறி வேந்தர் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி மதன், பலரிடம் பெருந்தொகையை வாங்கி மோசடி செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தர் பச்சமுத்துவை கடந்த மாதம் 26-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், ஜாமீன் கேட்டு பாரிவேந்தர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த முறை நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பு கருத்தை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரிவேந்தருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.

மீண்டும் 3 மணிக்கு பின்னர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது பாரி வேந்தருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 

நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:-

ரூ.10 லட்சத்துக்கு இரண்டு பேரது உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட்டை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளலாம்.  

மறு உத்தரவு  வரும்  வரை விசாரணை  அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். ரூ.75 கோடியை சைதாப்பேட்டை 11-வது  நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.  

இவ்வாறு கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...