News
Loading...

மார்க்கெட்டிங், திட்டமிடுதல் இல்லாமையால் தமிழக ஆவின் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி நஷ்டம்

Aavin

மார்க்கெட்டிங், திட்டமிடுதல் இல்லாமை மற்றும் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காத காரணத்தால், தமிழக ஆவின் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆவின் பொருட்களான வெண்ணெய், நெய் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. ஆவின் நெய்யின் தரம் நன்றாக இருப்பதால் விற்பனையும் நன்றாக இருந்து வருகிறது. இதனால் கடந்த ஓராண்டாக ரூ.380க்கு விற்று வந்த கிலோ நெய், செப்டம்பர் 3ம் தேதியிலிருந்து கிலோ ரூ.410 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

விற்பனை பிரிவு தோல்வி: ஆவின் பால் பவுடர் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 15 ஆயிரம் டன் கையிருப்பு உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் பால்பவுடர் பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை விற்பனை நடந்தது. கடந்த கால தவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத ஆவின் நிர்வாகம், பால் பவுடர் உற்பத்தியை இரண்டு மடங்காக மாற்றியது. ஆனால் மார்க்கெட்டிங் டெக்னிக்கை மாற்றிக் கொள்ளவில்லை. 

இதனால் பால் பவுடர் விற்பனை படுபாதாளத்தில் சென்றுள்ளது. அதாவது உற்பத்தி மற்றும் கையிருப்பு மட்டும்  15 ஆயிரம் டன் பால் பவுடர் இருப்பு உள்ளது. அதில்  300 டன் பால் பவுடர்  ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியாகி விட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் 45 கோடியாகும். இனி இந்த 300 டன் பால் பவுடர் குப்பைக்குதான் செல்லவேண்டும். 

அதிகார குளறுபடி:  ஆவின் பொருட்களை விற்பனை செய்யும் அதிகாரத்தை ஆவின் நிர்வாக இயக்குனர் வைத்திருப்பதால், கூட்டுறவு ஒன்றியங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்கள், கூட்டுறவு ஒன்றிய தலைவர்கள் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கு முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   தற்போதுள்ள ஆவின் நிர்வாக இயக்குனர், ஆவின் தயாரிக்கும் பால் பொருட்களை விற்பனை செய்வதில் சரியான முடிவு எடுக்காமல் காலம் கடத்துவதால், பல கோடி மதிப்பிலான  ஆவின் பொருட்கள் வீணாகி வருகிறது என்று சேலம் பால் கூட்டுறவு ஒன்றிய தலைவர், நிர்வாக இயக்குனருக்கு பல முறை கடிதம் மூலம் எடுத்து கூறியுள்ளார்.  

நிர்வாக இயக்குனர் அவரது கருத்துகளை அலட்சியப்படுத்தி வந்ததே, ஆவின் பவுடர் பாக்கெட்டுகள் வீணானதற்கு காரணம் என்று ஆவின் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ளதைப்போல் வாரம் ஒருமுறை பால் பொருட்கள் விற்பனை குறித்த ஏல அறிவிப்பை வெளியிட்டு, பொருட்களை விற்று வந்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்திக்க வேண்டி இருந்திருக்காது என்று ஆவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதில் முறையான திட்டமிடல் இல்லாததால் பால் பொருட்கள் வீணாகி வருவதாக பால்கூட்டுறவு ஒன்றிய தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...