News
Loading...

பகிரி - திரை விமர்சனம்

பகிரி - திரை விமர்சனம்

நடிகர் : பிரபு ரணவீரன்
நடிகை : ஸ்ரவியா
இயக்குனர் : இசக்கி கார்வண்ணன்
இசை : அருணகிரி
ஒளிப்பதிவு : வீர குமார்

நாயகன் பிரபு ரணவீரனின் அப்பா தன்னுடைய மகன் தன்னைப்போலவே தனது மகனும் விவசாயத்தில் ஈடுபடவேண்டும் என்ற ஆசையில் அவனை விவசாய படிப்பு படிக்க வைக்கிறார். ஆனால், அரசாங்க வேலையில் சேர விருப்பப்படும் பிரபுவோ, தனது அப்பாவின் ஆசைக்காக விவசாய படிப்பை படித்து முடிக்கிறான். படித்து முடித்தபின், அரசாங்க வேலை தேடி அலைகிறான். 

அவனுக்கு நாஸ்மாக் எனப்படும் அரசாங்கம் நடத்தும் மதுபானக்கடையில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சிக்கிறான். அந்த வேலையில் சேர்வதற்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சமாக கேட்கிறார்கள். தன்னுடைய அப்பாவிடம் சென்று நிலத்தை விற்று தன்னை வேலையில் சேர்த்துவிடுமாறு கோரிக்கை வைக்கிறார். இவரது கோரிக்கையை அவரது அப்பா ஏற்க மறுக்கிறார். இதையடுத்து, எப்படியாவது ரூ.5 லட்சத்தை சம்பாதித்து அந்த வேலையில் சேர முடிவெடுக்கிறார். 

இந்நிலையில், ஒரு மதுபானக்கடையில் தற்காலிகமாக பணியில் சேர்கிறார். அங்கிருந்து சம்பாதித்து எப்படியாவது அந்த வேலையை நிரந்தரமாக்கிக் கொள்ளவேண்டும் என்று முயற்சி செய்கிறார். இந்நிலையில், ஒருநாள் நாயகி ஸ்ரவியாவை பார்க்கும் நாயகன் அவள் மீது காதல் கொள்கிறார். ரொம்பவும் அடாவடித்தனமான அவளது செயல்பாடுகள் எல்லாம் நாயகனுக்கு பிடித்துப் போகிறது. ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்லும்போது முதலில் ஏற்க மறுக்கும் அவள், பின்னர் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அத்துடன், காதலனின் லட்சியத்தை நிறைவேற்ற அவனுக்கு உதவி செய்யவும் நினைக்கிறாள். 

இதற்கிடையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான ரவிமரியாவுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. நாயகியின் வீட்டில் உள்ளவர்கள் நாயகனுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகளை விற்று, நாஸ்மாக்கில் பணியில் சேர வைக்கிறார்கள். 

இதையறிந்த ரவிமரியா பிரச்சினை செய்யவேண்டும் என்பதற்காக அவன் வேலைக்கு சேர்ந்த முதல்நாளே அங்கு மதுபானக் கடை இருக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தி அந்த கடையை மூட வைக்கிறார். இதனால், நொந்துபோன நாயகன், வேறு இடத்தில் மதுபானக்கடையை திறக்கிறான். அங்கும் ரவிமரியாவால் பிரச்சினை ஏற்படுகிறது.

இறுதியில், ரவிமரியாவின் பிரச்சினையை சமாளித்து நாயகன் தனது லட்சியத்தில் வென்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

பிரபு ரணவீரன் அறிமுக நாயகன் என்றாலும், அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடும் காட்சிகளிலும், காதலி ஸ்ரவ்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும், அப்பா, அம்மா, தங்கையுடன் சென்டிமெண்ட் காட்சிகளிலும் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரவ்யா, குறும்புக்கார அதேநேரத்தில் அடாவடி பெண்ணாக கவர்கிறார். அரசியல்வாதியாக வரும் ரவிமரியா வரும் காட்சிகள் எல்லாம் படம் கலகலப்பாக செல்கிறது. ஸ்ரவ்யாவின் குடிகார தந்தையாக வரும் ஏ.வெங்கடேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். விவசாயத்தின் மேன்மையை வலியுறுத்தும் வகையில் நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணிக்கு சூப்பர் சல்யூட். 

விவசாயம் செய்வதன் அவசியத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன். அதேபோல், மதுவிலக்கு, அதனை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் நிலைப்பாடுகளை மறைமுகமாக நக்கல், நையாண்டி, விமர்சனம் செய்து படமாக்கியது ரசிக்கும்படியாக இருக்கிறது. இருப்பினும், காட்சிகளை கோர்வையாக கொண்டு செல்லமுடியாமல் இயக்குனர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். 

மற்றபடி, மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய வசனங்கள், நக்கல், நையாண்டி கலந்த காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதால் படம் போரடிக்காமல் செல்கிறது. வீரக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அருணகிரியின் இசை படத்திற்கு பெரிதாக எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

மொத்தத்தில் ‘பகிரி’ எகிறும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.