News
Loading...

போலீஸ் நிலையத்தில் பதிவு செய்த FIR 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்

சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் போலீஸ் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் தங்களது இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

மனு விவரம்

‘யூத் பார் அசோசியேஷன் ஆப் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.), பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அந்தந்த மாநிலங்களின் காவல் துறை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை என்பது பொதுவான ஆவணமாகும். ஆனால் குற்றங்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு காவல் நிலையங்களில் இருந்து முதல் தகவல் அறிக்கையை பெறுவது எப்போதும் மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இணையதளத்தில் வெளியிட வேண்டும்

இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் தங்களது இணையதளத்தில் அதை வெளியிட வேண்டும். பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முதல் தகவல் அறிக்கையை 72 மணி நேரத்துக்குள் பதிவேற்றம் செய்யலாம். பயங்கரவாதம், கிளர்ச்சி, பாலியல் வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளுக்கு இந்த தீர்ப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பழைய தீர்ப்புகள்

கடந்த ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட்டு, உத்தரபிரதேச மாநில அரசு, அந்த மாநிலத்தின் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இமாச்சல பிரதேச ஐகோர்ட்டும் அந்த மாநிலத்தின் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2010-ம் ஆண்டில் டெல்லி ஐகோர்ட்டும் இதே போன்ற தீர்ப்பை வழங்கியது.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் வகையில் அதிரடி தீர்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...