News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - கன்னி

புரட்டாசி மாத ராசி பலன் - கன்னி

17.9.2016 முதல் 16.10.2016 வரை

உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை

மாற்றங்களால் ஏற்றம் பெறும் நேரம்!

எதிலும் ஒரு புதுமையைக் கையாள வேண்டுமென்று நினைக்கும் கன்னி ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்திருக்கின்றார். எனவே, எண்ணற்ற மாற்றங்கள் இம்மாதம் வரப்போகின்றது. ஒரு சிலருக்குத் தானாக வரும் இடமாற்றம் திருப்தி அளிக்காமல் போகலாம். வீணான செலவு செய்து விட்டோமே என்று கவலைப்படுவீர்கள். 

எல்லாவற்றிற்கும் ஜென்ம குருதான் காரணமாக விளங்குகின்றது. 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். வாகனம், தாய், சுகம், வீடு, களத்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வலிமை இழந்திருக்கும் நேரமிது. எனவே தாய்வழி ஆதரவு குறையும். விரோதங்கள் வளரலாம். பெற்றோர்களின் உடல் நலம் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். வாகனப் பழுதுகள் அதிகரிக்கலாம்.  

இப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைய இம்மாதம் பிறப்பதால் குலதெய்வ வழிபாடு முதல் குரு வழிபாடு வரை முறையாக வழிபட்டு முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நேரமிது. திடீர் இடமாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றங்கள் கூட ஒரு சிலருக்கு உருவாகலாம். வரும் மாற்றங்கள் ஏற்றம் தரும் விதத்தில் அமையும் என்றாலும் திசா புத்தி பலமிழந்திருப்பவர்களுக்கு ஏமாற்றம் தரும் விதத்திலும் அமையலாம்.  

தனாதிபதி சுக்ரனோடு மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றுவிட்டார். எனவே பண நெருக்கடியும் கூடுதலாகவே இருக்கும். ஒருதொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். எனவே, இம்மாதம் பெண் தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ந் தேதிதுலாம் ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். சுக்ரன் தன் சொந்த வீட்டில் பலம்பெறும் நேரம் ஒரு யோகமான நேரமாகும். 2, 9–க்கு அதிபதியானவர் பலம்பெறும் பொழுது, எண்ணங்கள் நிறை    வேறும். இல்லம் கட்டிக் குடியேறும் ஆசை உருவாகும். வள்ளல்களின் ஒத்துழைப்போடு வருங்காலத்தை அமைத்துக் கொள்வீர்கள். இல்லை என்று சொல்பவர்களுக்கு கொடுத்து உதவும் குணம் பிறக்கும். நல்ல மனிதர்களின் தொடர்பால் நகையும் வாங்குவீர்கள். தொகையும் திருப்திகரமாக வந்து சேரும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

அக்டோபர் 4–ம் தேதி புதன் உச்சம் பெறப்போகின்றார். புதன் உங்கள் ராசியிலேயே உச்சம் பெறுவது யோகம் தான். கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். சேமிப்புகள் உயரும். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய வாகனம் வாங்கும் யோகம் வரைச் சிந்திப்பீர்கள். புதன் சூரியனுடன் இணைந்திருப்பதால் அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

விருச்சிக ராசிக்கு அக்டோபர் 16–ம் தேதி சுக்ரன் செல்லவிருக்கின்றார். தனாதிபதி சகாய ஸ்தானத்திற்கு செல்லும் நேரம் நல்ல நேரம்தான். பணத்தட்டுப்பாடுகள் அகலும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஓங்கிக் குரல்கொடுத்த உடன்பிறப்புகள் இனி தேன்போல பேசி ஒற்றுமைக்கு வித்திடுவர். சகோதர வர்க்கத்தினரின் இல்லங்களில் நடைபெறும் மங்கள நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். பழைய ஆபரணங்களை கொடுத்து விட்டுப் புதிய ஆபரணங்களை வாங்க முற்படுவீர்கள். இம்மாதம் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆதியந்தப் பிரபுவை வழிபட்டு வருவது நல்லது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் மாதமாகும். விரயங்கள் கூடுதலாக இருக்கும் என்பதால் சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம், குழந்தைகளின் கல்யாண சீர்வரிசைப் பொருட்களையும் வாங்குவது நல்லது. கணவன்– மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர்கள். அவர்களின் பணி நிரந்தரம் பற்றிய மகிழ்ச்சி தரும் தகவல் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வணங்குங்கள். அன்னை பராசக்தி வழிபாடு அனைத்து நலன்களையும் கொடுக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள் : செப்டம்பர்: 22, 23, 26, 27 அக்டோபர்:  2, 3, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.