News
Loading...

'கவுன்சிலர் சீட் ரூ.40 லட்சம்':கல்லா கட்டிய அதிமுக மாவட்ட செயலாளர்கள்!

'கவுன்சிலர் சீட் ரூ.40 லட்சம்':கல்லா கட்டிய அதிமுக மாவட்ட செயலாளர்கள்!

சென்னையில் அதிமுக சார்பில் ஒரு கவுன்சிலர் சீட் சுமார் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது என்று அதிர வைக்கின்றனர் அதிமுகவினர்.  

மேலும்,போலீஸ் நிலையத்தில் வழக்கு இருக்கும் நபர்களுக்கும், நில அபகரிப்பு உள்ளிட்ட கிரைம் ரெக்கார்டு உள்ளவர்களுக்கும் அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது என்று கிறுகிறுக்க வைக்கின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016 வரும் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனுத்தாக்கலும் திங்கள் அன்று தொடங்கியுள்ள நிலையில்,அதிமுகவில் கலகம் தொடங்கியுள்ளது.

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையோர் லட்சங்களில் பணத்தைக் கொடுத்து  சீட் பெற்றுள்ளனர் என்கிறார்கள் சிட்டிங் கவுன்சிலர்கள். அதிலும் சென்னையில் கவுன்சிலர் சீட்  வியாபாரம் மிக ரகசியமாக நடந்து, இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தெரியாமலே  ஒருவருக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையில் பெற்றுக்கொண்டு மாவட்ட செயலாளர்கள்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர் என்று கொதிக்கிறார்கள் இரட்டை இலை விசுவாசிகள்.

இது குறித்து அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட பிரதிநிதிகளிடம் பேசினோம். அவர் கூறுகையில், "எங்கள்  கட்சியின்  பொதுச் செயலாளர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரின் உடல் நலம் குறித்துக்கூட அக்கறை இல்லாமல் மாவட்ட செயலாளர் ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை  வாங்கியுள்ளார். அம்மா மருத்துவமனையில் இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு  கிரிமினல்கள் பலரும் சீட் பெற்றுள்ளனர். மாவட்ட செயலாளர்களும் 'திறமையாக  கல்லா' கட்டியுள்ளனர்." என்றனர் அதிர்ச்சியோடு.

சென்னையின் பல பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சீட் கிடைக்காத சிட்டிங் கவுன்சிலர்கள், புதியதாக போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் போயஸ் கார்டனிலும், அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டையிலும் அதிருப்தியோடு வலம் வருகின்றனர். வேட்பாளர் லிஸ்டில் உள்ள உள்ளவர்கள் குறித்து தலைமைக் கழகத்திற்கும் போயஸ் கார்டன் அலுவலகத்திற்கும் புகார் மனுக்களை பலரும் அனுப்பி பரபரக்க வைத்துள்ளனர். அதே போல நேரிலும் பலர் சென்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் புகார் தெரிவிக்கின்றனர்.

போயஸ் தோட்டம் அமைந்துள்ள வார்டு சிட்டிங் கவுன்சிலர் வட்டாரத்தில் பேசினோம். அவர்கள் கூறியவை அனைத்தும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள். அவை அப்படியே இங்கே...." இப்போது 116 வது வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர் மாவட்ட செயலாளருக்கு மிக வேண்டியவர். அவரிடம் ரூ.40 லட்சம் வாங்கியுள்ளார். அவர்தான் 28 சிட்டிங் கவுன்சிலரில் 2 பேருக்கு மட்டும்தான் மீண்டும் போட்டியிட சீட் கொடுத்துள்ளார். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் இருந்தாலும் பணம் கொடுப்பவர்களுக்கே கவுன்சிலர் சீட் என்றால்  என்ன அர்த்தம், கட்சிக்கு என்று பணியாற்றாதவர்களுக்கு, மக்களுக்கு சேவை செய்யாதவர்களுக்கு சீட் என்றால்  எப்படி மக்கள் ஒட்டு போடுவார்கள்.

116 வது வார்டில் இப்போது நிறுத்தப்பட்டுள்ளவர் மீது போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. டி.எஸ்.பட்டணம் பொடி நிறுவனத்தின் சொத்தை அபகரித்து முறைகேட்டில் ஈடுபட்டவர், ராயப்பேட்டை பைலட் தியேட்டர் அருகில் உள்ள செங்கல்வராயன் டிரஸ்ட் நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்தது, ராயப்பேட்டை காவல் ஆய்வாளரைத் தாக்கியது, நுங்கம்பாக்கத்தில் பணமோசடியில் ஈடுபட்டது, மைலாப்பூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டது என்று பல குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. இதெல்லாம் தெரிந்துதான் அம்மா, அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் இப்போது அவர் மீண்டும் கட்சியில் இணைந்து,கவுன்சிலர் சீட் பெற்றுள்ளார். அம்மா மருத்துவமனையில் இருப்பதை இப்படியும் மாவட்ட செயலாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்." என்றார் கொதிப்பாக.

இதே நிலைதான் சென்னையின் பெரும்பான்மையான வார்டுகளில் ஏற்பட்டுள்ளது. வார்டுகள் 110,109,112,113 என்று தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவா அல்லது அதிமுக மாவட்ட செயலாளர்களா என்று தெரியவில்லை என்பதே அதிமுக தொண்டர்களின்  குழப்பமாக இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.