News
Loading...

முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு குற்றச்சாட்டு

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு

``ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை’’ என்று முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு குற்றம் சாட்டினார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) கோவை கிளை சார்பில், தலைமை பண்பு குறித்த கருத்தரங்கம் கோவையில் நேற்று நடந்தது. இதில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை துவக்கிவைத்தார். கருத்தரங்கில், அவர் பேசியதாவது:  

ரயில்வே துறையில் தற்போது பல புதுமைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் புகார் அளிக்க ரயில்நிலையங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, கம்ப்யூட்டர் மயமாக்கியுள்ளோம். ஆன்லைன் மூலம் மக்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே புகார் செய்யலாம். சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் புகார் செய்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 

 ரயில்வே துறையில் 50 சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால், நடப்பாண்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரயில்வே துறை அபரிமிதமான வளர்ச்சி அடையும். தற்போது, ரயில்வே பட்ஜெட் தனியாக அறிவிப்பது தேவையில்லை என்ற விவாதம் நடந்து வருகிறது. என்னை பொறுத்தவரையில் ரயில்வே பட்ஜெட்டை தனியாக அறிவிக்க தேவையில்லை. 

இவ்வாறு மத்திய ரயில்வே அமைச்சர் பேசினார். ஒத்துழைப்பு தருவதில்லை: முன்னதாக அவர், நிருபர்களிடம் கூறுகையில், ‘ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மாநில அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு 16 மாநிலங்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளது. 

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ஆதரவு அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு மட்டும் ஒத்துழைப்பு தருவதில்லை. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...