News
Loading...

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், காரைக்குடி அருகே விவசாயிகளே களமிறங்கி தூர்வாரினர்

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், காரைக்குடி அருகே விவசாயிகளே களமிறங்கி தூர்வாரினர்

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், காரைக்குடி அருகே விவசாயிகளே களமிறங்கி தூர்வாரிய கண்மாயில், 25 வருடம் கழித்து தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது குடிகாத்தான் கிராமம். இங்கு 50 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. விளைநிலங்களுக்கு குடிகாத்தான் ஏந்தல் கண்மாயில் இருந்து தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. 25 வருடங்களுக்கும் மேலாக இக்கண்மாய் மற்றும் வரத்து வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்தது. கண்மாய் முழுவதும் வேலிகருவேல மரம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை உருவானது. கண்மாய் வறண்டதால், விளைநிலங்கள் தரிசாக மாறின. கண்மாய் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அதிகாரிகளிடம் இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். பலமுறை வலியுறுத்தியும் பலனில்லை. 

வேறுவழியின்றி, கண்மாய் மற்றும் வரத்து வாய்க்கால்களை தாங்களே தூர்வாருவது என முடிவு செய்தனர். இதற்காக விவசாய சங்கத்தை ஏற்படுத்தி கிருஷ்ணன் என்பவரை தலைவராக நியமித்தனர். தூர்வாரும் பணிக்காக, மதுரை தானம் தொண்டு நிறுவனத்தின் வயலகம் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.65 ஆயிரம் சேர்த்தனர். கடந்த ஜூலை மாதம் தூர்வாரும் பணியை துவங்கினர். சில நாட்களுக்கு முன்புதான் முடித்தனர்.

கடந்த ஒரு வாரமாக காரைக்குடியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், குடிகாத்தான் ஏந்தல் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களின் உழைப்பால், 25 வருடங்களுக்குப் பிறகு கண்மாயில் தண்ணீர் தேங்கியிருப்பதால் உற்சாகத்துடன் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...