News
Loading...

விபத்து தவிர்க்கும் விதிகள்!

விபத்து தவிர்க்கும் விதிகள்!

குடிபோதையில் காஸ்ட்லி காரில் வரும் கோடீஸ்வரர்கள், அப்பாவி ஏழைகள் மீது மோதி சாகடிக்கும் கொடூரங்கள் இப்போது அதிகம் நிகழ்கின்றன. ‘இந்தியாவில் 77 சதவீத விபத்துகள் வாகன ஓட்டிகளின் தவறாலேயே நிகழ்கின்றன’ என்கிறது புள்ளிவிவரம். ஒவ்வொரு ஆண்டும் இந்தியச் சாலைகளில் நிகழும் சுமார் 5 லட்சம் விபத்துகளில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். 

மூன்று லட்சம் பேர் நிரந்தர ஊனம் அடைந்து வாழ்வை இழக்கிறார்கள். விபத்துகளைக் குறைக்கும் அக்கறையில், நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் முடிவில் இருக்கிற மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், கார்களுக்கும் சில பாதுகாப்பு விதிகளைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. 2017 அக்டோபர் முதல் இவை அமலுக்கு வரும்.

திறக்கும் கதவு

நவீன கார்களில் ஆட்டோமேடிக் லாக் சிஸ்டம் இருக்கும். விபத்தாலோ, வேறு காரணங்களாலோ கார் திடீரென ஆஃப் ஆகும்போது, உள்ளே இருப்பவர்கள் தவிக்க நேரும். இனி வரும் கார்களில், அவசரத்துக்கு கைகளால் திறக்க முடிகிற மாதிரி கதவுகளின் லாக் அமைக்கப்படும்.

ரிவர்ஸ் கியர் சென்ஸார்

காரை பின்னால் இயக்கும்போது, பின்புறம் யாராவது இருக்கிறார்களா என கண்ணாடியில் பார்த்து இயக்குகிறார்கள் இப்போது! காருக்கு அடியில் யாராவது படுத்திருந்தாலோ, குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தாலோ, கண்ணாடியில் தெரியாது. ரிவர்ஸ் கியர் சென்சார் பொருத்தினால், கார் பின்புறம் இயங்கும்போது, காரின் பின்பக்கம் இருக்கும் 4 கேமராக்கள் தானாக இயங்கத் தொடங்கி கண்காணிக்கும். இந்தக் காட்சியை ஓட்டுநர் திரையில் பார்க்கலாம்.  

ஏர் பேக் கட்டாயம்

சின்ன காரோ, பெரிய காரோ, விலை அதிகமோ, குறைவோ... எதுவாக இருந்தாலும், ஏர் பேக் கட்டாயம். மோசமான விபத்துகளில் காருக்குள் இருப்பவர்களைக் காக்க இதுவே ஆபத்பாந்தவன்.

ஆடியோ அலெர்ட்

கடந்த ஆண்டில் நிகழ்ந்த 50 ஆயிரம் விபத்துகளுக்கு, வாகனங்கள் அதிவேகமாகச் சென்றதுதான் காரணம். எனவே வேகக் கட்டுப்பாடும் கட்டாயம் ஆகிறது. நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் சென்றால், கார் லேசாக ஒரு அலெர்ட் கொடுத்து எச்சரிக்கும். 90 கி.மீ வேகத்தைத் தாண்டினால், சைரன் போல அலெர்ட் நிற்காமல் ஒலிக்கும். வேகம் குறைத்தால்தான் சத்தம் நிற்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.