News
Loading...

அவர்களே ஆக்கிரமிப்பார்கள்... அவர்களே இடிப்பார்கள்!

எஸ்.ஆர்.எம் கோட்டை

மதன் மாயம்... பச்சமுத்து கைது... ஆக்கிரமிப்பு அகற்றம்... என கொஞ்சம்கொஞ்சமாக ஆட்டம் கண்டு வருகிறது 

எஸ்.ஆர்.எம் கோட்டை. ஜாமீன் கிடைக்காதா என காத்திருக்கும் பச்சமுத்துவுக்கு, ஆக்கிரமிப்பு வழக்கு அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.  

‘காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர வேண்டும்’ என சொல்லி பொத்தேரியை சேர்ந்த சதீஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘ஆக்கிரமிப்பு உள்ளதா? என காஞ்சிபுரம் வருவாய் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பன்னீர் செல்வம் தலைமையிலான டீம், ‘ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி’ என சொன்னது. அரசாங்கம் இடிப்பதற்குள் எஸ்.ஆர்.எம். நிர்வாகமே உஷார் ஆனது. 5-ம் தேதி இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கத் தொடங்கியது. யாருக்கும் தெரியக் கூடாது என்பதால் வெளிப்பக்கம் திரையிட்டு இடிப்பதை மறைத்திருந்தார்கள். மறுநாளும் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் பணி தொடர்ந்ததால் செய்தி மீடியாக்களுக்கு கசிந்தது.

ஆக்கிரமிப்புகள்

வழக்கு தொடர்ந்த சதீஷிடம் பேசினோம். “விதிகளை மீறி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தினர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். ‘நீர்நிலைகளின் அகலம் குறைக்கக் கூடாது. கால்வாயின் குறுக்கே பாலங்கள் கட்ட பொதுப்பணித்துறை அனுமதி வாங்க வேண்டும். கால்வாயில் தண்ணீர் செல்வதைத் தடுக்கக் கூடாது. பொத்தேரி, வல்லாஞ்சேரி ஏரிகளின் வெளிப்பக்க அடிப்புறத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்குள் எந்தவித கட்டிடங்களும் கட்டக் கூடாது. பாசனக் கால்வாயை எந்த காலத்திலும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது’ போன்ற அரசு விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. நீர்பிடிப்புப் பகுதிகளில் கட்டடங்களை எழுப்பி இருக்கிறார்கள். ஹோட்டல், இரண்டு ஏ.டி.எம் மையங்கள், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ் முன்பதிவு மையம் ஆகியவை ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் உள்ளன. ஆறு வருடங்களாக அரசாங்க நிலங்களில் ஏ.டி.எம் அமைப்பதற்கு தனியாருக்கு வாடகை விட்டுள்ளனர். ஏரியின் நீர் பிடிப்பு பகுதியான 26 ஏக்கர் நிலத்தையும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. பஞ்சமி நிலத்தில் வசிப்பவர்களை ஓலை வீடுகட்ட கூட அனுமதிப்பதில்லை. அந்த நிலத்தில் தங்கியிருந்தவர்களை அராஜகமாக மிரட்டி வெளியேற்றி எஸ்.ஆர்.எம். ஆட்கள் ஆக்கிரமித்து கொண்டார்கள். பெருமாள் கோயில் இடத்தில் எவ்வித கட்டடங்களும் எழுப்பக் கூடாது என்பதால் அதை கல்லூரி வாகனங்களுக்கான பார்க்கிங்காக மாற்றிக் கொண்டார்கள். பொத்தேரியில் உள்ள பெரும்பாலான குடும்பங்களை மிரட்டியே நிலங்களை வாங்கியிருக்கிறார்கள்” என்றார் சதீஷ்.

வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம்

வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சர்ச்சைக்குரிய இடங்களை ஆய்வு செய்தோம். அதில், மேய்க்கால் புறம்போக்கு மற்றும் தாங்கல் புறம்போக்கு (கல்லூரிக்கு எதிரே சாலை ஓரத்தில் உள்ள சிறிய ஏரி) ஆகிய இடங்களை எஸ்.ஆர்.எம். நிறுவனம் குத்தகைக்கு கேட்டனர். மேய்க்கால் புறம்போக்கு நிலத்துக்கு மட்டுமே குத்தகை வழங்கப்பட்டிருந்தது. தாங்கல் புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் சில வருடங்கள் கழித்து குளத்தை அழகுபடுத்தி பராமரித்துக் கொள்கிறோம் என்று அனுமதி கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில் குளத்தின் அமைப்பை மாற்றக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என விதிகளோடு மாவட்ட நிர்வாகம் குளத்தைப் பராமரித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருந்தது. ஆனால், எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தினர் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். கோயில் நிலம், சாலைப்புறம்போக்கு என 7 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்​பட்டது. அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பித்தேன். எஸ்.ஆர்.எம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்​பப்பட்டது. இதனால் எஸ்.ஆர்.எம் நிர்வாகமே ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தொடங்கிவிட்டது. நோட்டிஸ் காலக்கெடு முடிந்த நிலையில் ஆக்கிரமிப்பு இருந்தால் நாங்களே இடித்துவிடுவோம். குளத்தை பராமரிக்க வாங்கிய அனுமதியை ரத்து செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறேன்” என்றார்.

இப்படி அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேற... ‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை போல எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங்கர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார். 

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேச கல்லூரி அலுவலர்கள் மூலமாகத் தொடர்பு கொண்டோம். அவர்கள் தரப்பில் யாரும் பேச முன்வரவில்லை. 

உப்பைத்தின்றால் தண்ணீர் குடிப்பது இயல்பு​தானே!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.