News
Loading...

பொய் வழக்கு... வேட்டையாடும் போலீஸ்!

தமிழக போலீஸ்

திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொய் வழக்குப் போடுவதற்கு என்று ஒரு சமூகத்தினரையே ‘குத்தகை’க்கு எடுத்துள்ளது தமிழக போலீஸ். 

எங்கு திருட்டு நடந்தாலும் சரி, அந்தக் குற்றத்தை யார் செய்திருந்தாலும் சரி... குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்துவந்து, அவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை நீண்டகால வழக்கமாகக் கொண்டிருக்கிறது தமிழக போலீஸ். குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்ள வைக்க, குறவர் இன மக்களுக்கு இழைக்கப்படும் சித்ரவதைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. 

நிர்வாண சித்ரவதைகள்...

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்... “ஆனந்தி. இவர், ஒரு கூலித்தொழிலாளி. இவர் மீது ஒரு திருட்டு வழக்குப் போடப்பட்டது. அவரையும், அவரது மகனையும் அதிகாலை மூன்று மணி அளவில் போலீஸார் வலுக்கட்டாயமாக தர்மபுரி மாவட்டம் அரூர் மகளிர் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பிறகு, பள்ளிப்பட்டி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்று, இரண்டு போலீஸார் ஆனந்தியின் இரு கால்களையும் அகற்றிப் பிடித்துக்கொள்ள... அவரது பிறப்பு உறுப்புக்குள் மிளகாய்ப்பொடியைத் தூவினார்கள். பிறகு, ஆனந்தியின் பிறப்பு உறுப்புக்குள் லத்தியை விட்டு குடைந்தனர். அந்த நேரத்தில், ஆனந்தியின் தங்கையை அரூர் காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்று, அவரை நிர்வாணமாக்கி தொடைகளில் லத்தியால் அடித்து சித்ரவதை செய்தனர்.” இதைச் சொல்லியிருப்பது வேறு யாருமல்ல. பட்டியல் இனத்தவருக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கையிலே இவ்வாறு சொல்லப்பட்டு இருக்கிறது. 

விசாரணைக்குழு!

பொய் வழக்குகளில் பிடித்துச் சென்று, விசாரணை என்ற பெயரில் குறவர் இனப் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான சித்ரவதைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. இவ்வாறு பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த 21 பேர் அனுபவித்த கொடுமைகள் குறித்து, திண்டிவனத்தைச் சேர்ந்த ‘சசி’ (Social Awareness Society for youths) என்ற தன்னார்வ அமைப்பு, பட்டிலின தேசிய ஆணையத்திடம் 2014-ம் ஆண்டு புகார் ஒன்றை அளித்தது. அதை ஏற்றுக்கொண்ட ஆணையம், பாதிக்கப்பட்டவர்களையும், தமிழக போலீஸ் அதிகாரிகளையும் டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தியது. மேலும், இவ்வாறாக பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களின் நிலையை ஆய்வுசெய்ய ஆணையத்தின் உதவி இயக்குனர் பி.ராமசாமி, சமூக செயற்பாட்டாளர் வி.ஏ.ரமேஷ்நாதன், வழக்கறிஞர் அஜிதா ஆகியோரைக் கொண்டு குழு ஒன்றை ஆணையம் நியமித்தது. தஞ்சாவூர், விழுப்புரம், மதுரை, தர்மபுரி உட்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பிரதேசத்தில் இந்தக் குழு ஆய்வுசெய்து, சுமார் 20,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஆணையத்திடம் ஆதாரங்களுடன் அளித்தது. அந்த அறிக்கையை கடந்த மாதம் 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஆணையம் சமர்ப்பித்தது.

32 வகை கொடுமைகள்...

பெண்களை நிர்வாணமாக்கி சித்ரவதைகள் செய்வது, ஆண்களின் பிறப்பு உறுப்பில் செங்கல் கல்லைக் கட்டி நீண்டநேரம் தொங்க விடுவது, ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் ஊசியை வைத்துக் குத்துவது... லத்தியால் அடிப்பது, நகங்களைப் பிடுங்குவது, அவர்களைக் கட்டாயப்படுத்தி வாய்வழியாக புணரச் சொல்வது என 32 வகையான கொடுமைகள் போலீஸாரால் இழைக்கப்பட்டதை ஆதரங்களுடன் அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

“தஞ்சாவூரைச் சேர்ந்த நாகப்பன் என்பவரை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக ஜீப்பில் காட்டுப் பகுதிக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு, திருடியதாக ஒப்புக்கொள் என்று அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்ரவதை செய்தனர். அவரது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர். அவர் ஒப்புக்கொள்ளாததால் பல்வேறு காவல்நிலையங்களில், 33 வழக்குகளில் நாகப்பன் பெயரை சேர்த்தனர். நான்கு வருடங்களுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்ததுடன், 18 வருடங்களாக நீதிமன்றங்களுக்கு அவர் அலைந்து கொண்டிருக்கிறார்.” என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது.

11 கட்டளைகள்...

தமிழக உள்துறை செயலாளர், தமிழக காவல் துறை தலைவர், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு சில பரிந்துரைகளை இந்தக் குழுவினர் அறிக்கையில் அளித்துள்ளனர். “சந்தேகத்தின் பேரிலோ, அனுமானத்தின் பேரிலோ, குறவர் இனமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று ஆணை பிறப்பிக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும். குறவர் சமூக மக்கள் மீது காவல்துறை கொண்டுள்ள தவறான பார்வையை மாற்றவும், குற்றப் பரம்பரையினர் என்ற தவறான பார்வையை மாற்றவும், அவர்கள் கைது செய்யப்படும்போது உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் வழங்கியுள்ள 11 கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தவும், காவல் துறையினருக்கு கூருணர்ச்சி (Sensitation) பயிற்சி நடத்தப்பட வேண்டும்” என பரிந்துரைகளை அளித்துள்ளது.

வழக்கறிஞர்

விசாரணைக் குழுவில் ஒருவரான வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம். “தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல்நிலையத்தில் நாங்கள் ஆய்வுசெய்தோம். அங்கு, ரஜினி என்பவர் மீது 17 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றை ஆய்வுசெய்தபோது, 24.09.2014 அன்று நடந்த திருட்டு சம்பவம் ஒன்றில், ‘நான்தான் திருடினேன்’ என்று அவர் ஒப்புக்கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திருட்டு நடந்ததாகச் சொல்லப்பட்ட அன்று டெல்லியில் என்.சி.எஸ்.சி ஆணையத்தில் ஆணைய உறுப்பினர் கமலம்மா மற்றும் தமிழக போலீஸ் டி.ஐ.ஜி. முன்னிலையில் சாட்சியம் அளித்தார் ரஜினி. அதற்கான வீடியோ ஆதாரமே இருக்கிறது. அதுபோல, விழுப்புரத்தில் ஒரு பெண்ணை மிரட்டி, ‘நான் திருட்டு சாராயமும், கஞ்சாவும் விற்றேன்’ என்று சொல்லவைத்து அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். ஒருவர் சிக்கிவிட்டால், 10 ஸ்டேஷன்களில் ஆளுக்கு 2 வழக்குகள் என போட்டுக்கொள்வார்கள்” என்றார்.

தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம், “தூரத்து உறவினர்களில் யார் பேரிலாவது திருட்டு வழக்கு இருந்தால், அதை வைத்தே மற்றவர்களை அழைத்துச் சென்று சித்ரவதை செய்து குற்றம் செய்ததாக பொய் வழக்கு போட்டு விடுகிறார்கள். அந்த வழக்குக்காக அலைந்து கொண்டிருக்கும்போதே மற்ற மாவட்டத்தில் இருந்தும் பொய் வழக்குகள் போட்டுவிடுகிறார்கள்” என்றார்.

‘சசி’ அமைப்பின் இயக்குநர் பாண்டியனிடம் பேசினோம். “ஆயுதபூஜை அன்று சிறை காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக முதல்நாளே குறவர் இனத்தவரை அழைத்துவந்து பொய் வழக்குப்போட்டு சிறையில் வைக்கிறார்கள். பெரியவர்கள் ஒவ்வொருவர் மீதும் 20-30 பொய் வழக்குகள் போட்டுள்ளனர். தற்போது, அவர்களின் வாரிசுகளையும் குறிவைத்து அவர்களை இளம் குற்றவாளிகளாகச் சித்தரிக்கிறார்கள்” என்றார்.

பிறப்பால் ஒருவரைக் குற்றவாளியாக்குவது சமூகக் கொடுமையின் உச்சம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.