News
Loading...

குஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை

குஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை

காவிகளின் தேசப்பற்று என்பது வெறும் பம்மாத்து, காவிகளின் தேசப்பற்று சொந்த மக்களைக் குண்டு வைத்துக் கொன்று கலவரத்தை உருவாக்கி அந்த நெருப்பின் மீது நின்று குளிர்காயும் நாகரீகமற்ற பித்தலாட்டம், பதன்கோட் தாக்குதலில் நிலவிய மர்மங்கள் இன்னும் அகலாத நிலையில் இப்போது யூரி தாக்குதல்.

காவிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உளறுவதைப் பார்த்தால் பன்னாட்டு அளவில் காஷ்மீர் போராட்டங்களும் அதற்கெதிரான இந்திய தேசிய வன்முறையும் சிக்கலான திசையில் போவதைத் தடுக்க சொந்த வீரர்களையே காவிகள் காவு வாங்கி இருப்பார்களோ என்றொரு ஐயம் சில ஊடகங்களில் எழுப்பப்பட்டு இருப்பது உண்மையாகக் கூட இருக்குமோ என்று எண்ண வைக்கிறது. ஏனெனில் காவிகள் சொந்த தேசத்தைக் காவு கொடுத்தே தங்கள் அமைப்பு பலத்தை இதுவரையில் தக்க வைத்திருக்கிறார்கள்.

விடுதலைப் போராட்டத்தின் பொது ஆங்கில அரசின் கூலிகளாகவும், ஆட்காட்டிகளாகவும் இருந்தார்கள், பிறகு விடுதலை பெற்ற இந்தியாவில் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மங்களைப் பரப்பி, எளிய இஸ்லாமிய மக்களையும் ஒடுக்கி ஒடுக்கி ஊடகங்களையும் ஏனைய அதிகார அமைப்புகளையும் பயன்படுத்தி தேசத்தின் பொதுப்புத்தியில் இஸ்லாமிய எதிர்ப்பையும், பாகிஸ்தான் எதிர்ப்பையும் ஒரு நீண்ட காலக் கொள்கையாகவே முன்னெடுத்து குஜராத்தில் இருந்து துவங்கி கோயம்புத்தூர் வரை வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள்.

இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான எல்லா வேலைகளையும் செய்து இந்து மத நெருப்பை மூட்டுகிறார்கள், மாடுகளின் மீது கரிசனம் கொண்டு மனிதர்கள் பலரின் உயிரைத் தின்றிருக்கிறார்கள். அந்த நெருப்பின் மூலம் புகையும் தேசபக்தியையும், இந்துத்துவ பொதுமை மனநிலையையும் பயன்படுத்தி அவர்கள் ஆட்சி அதிகாரத்தின் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து முதலாளிகளிடம் மொத்தமாக இந்த தேசத்தை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பசுக்களின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொள்ளும் இவர்களுக்கு மானுட உயிர்களின் மகத்துவம் குறித்து எந்த அக்கறையும் கிடையாது, வர்ண வேறுபாடுகளின் மூலம் கிடைக்கும் பிறவித் தகுதி, சமூக அடுக்குகளை சாதியின் மூலம் காப்பாற்றி எப்போதும் உயர் அடுக்கில் அமரும் அடிப்படை வன்மம், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் மீதான தாக்குதல்கள் மூலமாக நிறுவத் துடிக்கும் அவர்களின் மேலாண்மை வன்மம் உலகப் புகழ்பெற்ற எந்த இனவெறிக்கும் குறையாத ஆற்றல் கொண்டது. பணமும், பதவியும், சொகுசு வாழ்க்கையும் வாய்க்கப் பெற்றால் எந்த நாட்டையும் காட்டிக் கொடுப்பார்கள் காவிகள்.

தமிழ்நாடு காவி மயமாகி விடாதா என்கிற அவர்களின் எதிர்பார்ப்பில் எப்போதும் மண்ணை அள்ளிப் போட்டது இங்கிருக்கும் அரசியல் கோட்பாடு தான், சாதிவெறியோ, மதவெறியோ பெரிய அளவில் பரவி விடாமல் தடுப்பது இங்கிருக்கும் திராவிட இயக்க அரசியல் கட்டமைப்பே என்பது சின்னக் காவிகளான இந்து முன்னணி துவங்கி பெரிய காவிகளான ஆர்.எஸ்.எஸ் வரைக்கும் நன்றாகத் தெரியும்.

ஆகவே தான் திட்டமிட்டு இங்கிருக்கும் ஊடகங்களில் தொடர்ந்து பாரதீய ஜனதாவையோ, வலதுசாரித் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களையோ அரசியல் அரங்குகளில் அமர வைத்தார்கள், ஹரிஹரன்களையும் பாண்டேக்களையும், சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் சுமந்த் ராமன்களையும், பானு கோம்ஸ்களையும் உளற வைத்தார்கள். அறிவும், மானுட அறமும் வேறானது என்பதை உணராத பச்சைமுத்துக்களும், வைகுண்டராஜன்களும், ஆதித்தனார்களும் இவர்களின் கல்வி அறிவில் மயங்கித் தங்கள் ஊடகங்களில் இவர்களின் மேலாதிக்கத்தை அனுமதித்தார்கள்.

இவர்கள் பரப்பிய கோட்பாட்டு நெருப்பு இவர்கள் மீதே ஒருநாள் திரும்பப் பாயும் என்பதை இவர்கள் ஒருநாளும் அறியப் போவதில்லை, வலதுசாரிச் சிந்தனைகள் இன்றைய முதலாளிகளுக்கு ஏற்றதாக பணம் பண்ணும் நிறுவன அமைப்பாக இருந்து வியப்பைக் கூட்டலாம், ஆனால், அது இந்துத்துவ பயங்கரவாதக் கோட்பாடான பார்ப்பனீயம் என்கிற காலைச் சுற்றிய பாம்பு என்பதை இவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

தமிழகம் என்றில்லை, இந்தியா என்கிற பார்ப்பனீயக் கூட்டமைப்பின் அரசமைப்பை முட்டுக் கொடுக்கிற மிகப்பெரிய ஆற்றல் மாநிலக் காவல்துறை, காவல்துறை சமூகத்தின் இன்னொரு மறைமுகமான வர்ணாஸ்ரமக் கூடாரம், வழக்கம் போலவே இந்தக் கூடாரத்தின் தலைப் பகுதியில் அமர்ந்திருக்கும் பார்ப்பனர்களை அல்லது பார்ப்பன லாபியை, பார்ப்பனரல்லாத ஒரு முதல்வரால் கூட அவ்வளவு எளிதில் ஆளுமை செய்து வெற்றி பெற்று விட முடியாது.

மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் வெளிப்படையாக சாதி சார்பான நடவடிக்கைகள் இல்லையென்றாலும், உள்ளடி வேலைகளும், நவீனத் தீண்டாமை வடிவங்களும் உண்டு. ஊரகப் பகுதிகளில் சொல்லவே தேவையில்லை, ஒடுக்கப்பட்ட மக்களை (ஏழை முதல் பணக்காரன் வரை) பூச்சிகளைப் போலக் கையாள்வதும், ஆதிக்க சாதி நாட்டாமைகளுக்குக் குடை பிடிப்பதும், கூழைக் கும்பிடு போடுவதும் நமது காவல் துறைக்குக் கைவந்த கலை. (ஐயா, சரிங்க ஐயா, செஞ்சுருவோம் ஐயா, முடிச்சுருவோம் ஐயா, நான் பாத்துக்கிறேன் ஐயா என்று காவல் துறை அதிகாரிகளில் பலர் அலைபேசிகளில் புழுவைப் போல நெளிவதை நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.)

நேர்மையாக உண்மையின் பக்கம் நின்று சமூகத்தின் அடிப்படை ஒழுங்கை சட்டத்தின் துணை கொண்டு காக்க வேண்டிய பெரும்பொறுப்பைத் தன் கையில் வைத்திருக்கும் காவல்துறை சாதிக் கட்டமைப்பின் அசைக்க முடியாத ஒரு அமைப்பாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிறது. சட்டம், ஒழுங்கு, குற்றம், தண்டனை என்று எல்லாவற்றிலும் வர்ணாஸ்ரம அமைப்பின் நீதியே இங்கே செயல்படுத்தப்படுகிறது.

ஐயர் நல்லவர், சாமி ஆகவே அவர் கொலையே செய்தாலும் வாயையும் மற்றவற்றையும் மூடிக் கொண்டுதான் இங்கே நீதிபதியில் இருந்து காவல்துறைக் கண்காணிப்பாளர், சிறைத்துறை ஐ,ஜி வரையும் அவர்களிடம் பேசுவார்கள், ஜெயேந்திரன் என்கிற கொலைக்குற்றவாளியை வைத்துக் கொண்டு இவர்கள் செய்த வர்ணாஸ்ரமக் கூத்தெல்லாம் சொல்லி மாளாது, ஆதிக்க சாதிக்காரன் சமூகத்தின் ஒழுங்கை நிர்ணயிக்கும் சட்டாம்பிள்ளை, ஆகவே அந்த சமூக நாட்டாமைகளிடம் கேட்டுத்தான் இந்திய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் தான் ஏறத்தாழ 70 விழுக்காடு காவல்துறை அதிகாரிகள் இங்கே இருக்கிறார்கள், அடுத்த நிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, இஸ்லாமிய மக்களின் உடலைக் கண்டால் இந்த அகோரிகளுக்குக் கொண்டாட்டம்.

காவிகள் தங்கள் விடா முயற்சியில் தமிழக அரசியலைக் காவி மயமாக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள், வழக்கமான அவர்களின் அரசியல் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போக இப்போது வன்முறை வெறியாட்டங்களை முடுக்கி விடுகிறார்கள், ஊடகத்தில் இருக்கும் எமது இளைஞர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள். திராவிட அரசியல் கோட்பாடுகளைக் முன்வைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் இன்றைய அரசும், அதன் காவல்துறையும் இந்துத்துவ வெறியர்களுக்கு முட்டுக் கொடுப்பதும், அவர்களை பாதுகாப்பதும் அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அவர்களே செய்யும் சவப்பெட்டி என்பதை ஏனோ சிந்திக்க மறுக்கிறார்கள்.

காவிகளை அமைப்பாக விரட்டி அடிக்கும் வேலையை திராவிட இயக்கங்களும், தமிழ் தேசிய இயக்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் முன்னின்று நிகழ்த்தியதாக வேண்டிய ஒரு நெருக்கடியான காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம், கோவைக் கலவரம் உயிர்ப் பலியை நோக்கிப் போக விடாமல் தடுக்க வேண்டிய அறம் இங்கிருக்கும் ஒவ்வொரு மானுடனுக்கும் அவசரத் தேவை.

- அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.