News
Loading...

வைகை அணையை தூர்வார நடவடிக்கை : ஐகோர்ட் கிளையில் அரசு உறுதி

வைகை அணையை தூர்வார நடவடிக்கை : ஐகோர்ட் கிளையில் அரசு உறுதி

வைகை அணையை 4 கட்டங்களாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் உறுதியளிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. 72 அடி உயரம் உள்ள இந்த அணையில் தற்போது  20 அடி ஆழத்திற்கு சகதி தேங்கி உள்ளது. இதனால் அணையின் நீர் கொள்ளளவு குறைந்து, நிலத்தடி நீரும் குறைகிறது. இதனால் குடிநீரும், விவசாயமும் கேள்விக்குறியாக உள்ளது. 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அணையில் தேங்கியுள்ள சகதியை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும். இதற்கான பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அரசு தரப்பில், ‘வைகை மற்றும் அமராவதி அணைகளை தூர்வாரி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் நீரியியல் (வாப்காஸ்) மையத்தை சேர்ந்த குழு ஈடுபட்டது. இவர்கள் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு 4 முறை கூடி விவாதித்துள்ளது. இதன் அறிக்கை கடந்த ஜூன் 25ல் அரசிடம் அளிக்கப்பட்டது. அரசு நிதி ஒதுக்கியதும் 4 கட்டங்களாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘அரசு தரப்பில் தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அணையை தூர்வாருவது குறித்து அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இதனால். மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.