News
Loading...

‘டெங்கு தேசம்’ என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டலாம்

டெங்கு தேசம்

டெங்கு தேசம்’ என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டலாம். அந்தளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சலே தமிழ்நாட்டில் இல்லை என்கிறார் அமைச்சர். ‘இது பருவகால பாதிப்பு தான்’ என்கிறார் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர். ஆனால், மொத்தத்தையும் அம்பலப்படுத்திவிட்டது மத்திய அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் 2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ‘டெங்கு’ பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,163..!

கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழப்பு 101.

அதிகபட்ச உயிரிழப்பு 2012 -ல் 66 பேர்.

2010 முதல் 2016 வரை டெங்கு பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,002.!

- இது மத்திய அரசின் ஆய்வுக் கணக்கு.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1,360 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது, தமிழக சுகாதாரத் துறை வட்டாரம். யதார்த்த நிலை இப்படி இருக்க... தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக தமிழக ஆட்சியாளர்கள் சொல்லிவருவது அரசுக்கே அவமானம். இதேபோலவே, முந்தைய காலங்களிலும் மதுரை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்குவால் ஏராளமானோர் மரணம் அடைந்தபோதும், ‘மர்மக்காய்ச்சல்’ என்றே திசைதிருப்பியது தமிழக அரசு. இப்போதும் அதுதான் நடக்கிறது.

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் பல குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை எட்டுப் பேர் பலியானதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவற்றை, மர்மக் காய்ச்சலால் ஏற்பட்ட மரணங்கள் என அரசு சொல்லி வருகிறது. 

சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சிலருக்கு மட்டுமே டெங்கு அறிகுறி உள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான 47 படுக்கைகளும் ஹவுஸ் ஃபுல்லாகவே உள்ளன. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் திருவள்ளூரைச் சேர்ந்த செந்தில்குமாரின் 2 வயது ஆண் குழந்தையான தீபக் 7-ம் தேதி இறந்தது. காரணம் இதுவரை தெரியவில்லை. இப்படி தொடரும் உயிர்பலிகளால் பீதியில் உறைந்து போயிருக்கிறது திருவள்ளூர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்​பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் 1,600 நர்ஸிங் மாணவர்களை வைத்து கொசுமருந்து தெளித்தனர். காஞ்சிபுரம் நகரின் முக்கிய ப்பகுதிகளில் விழிப்பு உணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர். வேறு ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. ஜனவரி மாதத்தில் இருந்தே டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகாஞ்சி போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் மகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதுமே, மருத்துவக்குழு மொத்தமாக அந்தக் காவலர் குடியிருப்புக்குப் படையெடுத்தனர். குப்பைகளை அகற்றி, குடிநீர் தொட்டி சுத்தம் செய்து , பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளப்பாக்கிவிட்டு வந்தனர். காஞ்சிபுரம் பல்லவ மேட்டில் ஒரு குழந்தைக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது. அதை, காஞ்சி நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. ‘நகராட்சியில் நிதி இல்லை’ என காரணம் சொல்கிறார்கள். சென்னையில் இருந்து வந்த சுகாதாரத் துறை டீம் ஒன்று, பேருந்து நிலையம் வரை பொடிநடையாக நடந்து சில போட்டோக்களை எடுத்துக்கொண்டு கிளம்பியது. அன்றைக்கு மட்டும் பேருந்து நிலையத்தைத் துடைத்துப் பெருக்கி, பிளீச்சிங் பவுடர்களைக் கொட்டி வைத்திருந்தார்கள். கழிவறைக்குக் கட்டணம் வசூலிக்கவில்லை என்பது ஓர் ஆறுதல்!

டெங்கு தேசம்

காஞ்சிபுரம் மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தகுந்த மருத்துவர்கள் இல்லை. டெங்கு முற்றிய நிலையில் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லச் சொல்லி மருத்துவர்கள் கைவிரித்துவிடுகிறார்கள். காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் போன்றவர்களே சிகிச்சை அளிக்கிறார்களாம். 10 நாட்களுக்கு ஒரு முறை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்​கிறார்கள். 

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜ​புரத்தில் ஜூன் முதல் வாரத்தில் மோசஸ் என்ற ஆறுமாத குழந்தைக்கு லேசாக காய்ச்சல் ஆரம்பித்து, பிறகு அந்தக் குழந்தை இறந்துபோனது. உஷாரான மாவட்ட நிர்வாகம் காவேரிராஜபுரத்தில் தண்டோரா அடித்து, “மரணங்களுக்குக் காரணம் டெங்கு அல்ல. போலி மருத்துவர்களை முதலில் நாடி, காலத்தை ஓட்டியபின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்ததுதான்” என பிளேட்டை மாற்றியது. அதே வேளையில், போலி டாக்டர்கள் கைது நட​வடிக்கையையும் திருவள்ளூரில் தொடங்கினார்கள். விழுப்புரம் மாவட்டத்திலும் அப்படி சில கைதுகள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்த யுவராஜ், மோகன், மோகன குமார், சந்தோஷ் என குழந்தைகள் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் அடுத்தடுத்து காய்ச்சலால் உயிரிழந்தனர். டெங்கு என அறிவிக்கவே அரசு தயக்கம் காட்டி வந்தாலும், “ஒருவருக்கு டெங்கு அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தீவிரக் காய்ச்சல் மட்டுமே. விரைவில் அதை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம். போதுமான மருந்துகள் கைவசம் இருக்கின்றன” என அரசு அறிக்கை வெளியிட்டது. திருவள்ளூரை தாண்டி கோவையிலும் திருப்பூரிலும் டெங்கு பாதிப்புகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. கோவை, துடியலூரில் 10 மாதமே ஆன பிரசன்னா என்ற குழந்தை, மருத்துவமனையில் டெங்குவுக்கான தனி வார்டில் சிகிச்சை  பெற்றுவந்த நிலையில் உயிரிழந்திருக்கிறது. இதே ஏரியவில்தான், 3 வயது சிறுமி இரு வாரங்களுக்கு முன்பு டெங்குவால் இறந்தது. 

‘‘தமிழகத்தில் டெங்கு இல்லை” என தமிழக அரசு சொல்லிவரும் நிலையில், அது உண்மை இல்லை என்பதை போட்டு உடைத்திருக்கிறது மத்திய அரசு. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தேசிய திசையன் பரவும் நோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (National Vector Borne Disease Control Programme) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில் தமிழகத்தில் டெங்கு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் ‘டெங்கு’வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1163. கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 101. அதிகபட்சமாக, 2012-ம் ஆண்டு 66 பேர் இறந்திருக்கிறார்கள். 2010 முதல் 2016 வரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32,002 என கணக்கு அதிர வைக்கிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசினோம். “தமிழகத்தில் டெங்கு கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. பருவ காலங்களில் காய்ச்சல் வருவது இயற்கை. நாங்கள் டெங்கு பாதித்த திருவள்ளுர் மாவட்டத்தில முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், வேறு நோய்களால் இறந்தவர்களைக்கூட டெங்குவால் இறப்பதாகச் சொல்வது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசு வெளியட்டுள்ள பட்டியலைப் பாருங்கள், நம்மைவிட பல மாநிலங்களின் நிலை மோசமாக இருக்கிறது’’ என்றார்.

சூப்பர்... நோய் இருப்பதையோ ஒப்புக்கொள்ளாத இவர்களால் எப்படி முழு சிகிச்சை அளிக்க முடியும்?

டெங்கு தேசம்

கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் டெங்குவின் பாதிப்புகள் என்ன? ஏற்பட்ட இழப்புகள் என்ன என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்குவே இல்லை என்று அரசு கூறி வந்த நிலையில் அது உண்மை இல்லை என உடைக்கிறது அறிக்கை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.