News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

இருமுகன்’ படத்துல வர்ற மருந்து மாதிரி, சாப்பிட்ட உடனே அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு அபாரமான சக்தி கிடைச்சா என்னென்ன செய்யலாம்னு யோசிச்சு பார்த்தோம்... 

* ஆபீசுக்கு வழக்கம் போல லேட்டானா, இந்த மருந்தை மோந்து பார்த்துட்டு நிற்காம வேகமா ஓட ஆரம்பிக்கலாம். 
* எட்டு மணி விசேஷத்துக்கு பத்து மணி ஆகியும் கிளம்பிக்கிட்டு இருக்கிற பொண்டாட்டிங்களுக்கு கொஞ்சம் மருந்தடிச்சு வேகமா கிளம்ப வைக்கலாம். 
* தியேட்டர்ல மொக்க படம் ஓடுனா, ஆபரேட்டரை கொஞ்சம் மருந்தை நுகரச் சொல்லி படத்தை சீக்கிரம் முடிச்சு விட்டு மக்கள் உயிரைக் காப்பாத்தலாம்.  
* மூணு மாசம் ஓசில பேசலாம்னு ஜியோ சிம் வாங்க மைல் கணக்குல நிக்கிற கூட்டத்தைக் கலைச்சு விட்டுட்டு முதல் ஆளாய் அமைதியா நின்னுக்கலாம். 
* ஓட்டப் பந்தய வீரர்களுக்கு ஊக்க மருந்து போல, ஹோம்வொர்க் பண்ணாம இழுத்தடிக்கிற குழந்தைகளுக்கு கொஞ்சூண்டு கொடுத்து ஹோம்வொர்க்க முடிச்சு தூங்க வைக்கலாம். 
* நாம ரயில் டிக்கெட் புக் பண்றப்ப, ஐஆர்சிடிசி  வலைத்தளத்துக்கு கொஞ்சம் ஊத்தி, அதை வேகமா செயல்பட வைக்கலாம்.  
* சுனாமி கினாமி வர்றப்ப, மொத்த மக்களையும் முழுக்க உறிஞ்சுட்டு சென்னையை விட்டுட்டு செங்கல்பட்டுக்கு ஓடிப் போயிடலாம். 
* தற்பெருமை பேசணும்னு வந்துட்ட சொந்தக்காரனுக்கு கொஞ்சத்த அடிச்சு விட்டு, சீக்கிரம் பேச வச்சு துரத்தி விடலாம்.  
* உருப்படியா ஏதாவது செய்யணும்னா, கபினியோ, கிருஷ்ணாராஜசாகரோ... ஏதோ ஒரு அணைக்குப் பக்கத்துல அந்த ‘ஸ்பீடு’ மருந்தை அடிச்சுக்கிட்டு மொத்த மதகையும் ஒவ்வொண்ணா வெள்ளப்பெருக்கு வராத வகையில் அஞ்சு நிமிஷம் திறந்து விட்டுடுட்டு அங்கையே ஹமாம் சோப்பை போட்டு குளிச்சுட்டும் வரலாம்.

நாட்டுல பல விஷயங்கள் நாள்தோறும் ரிலீசாகுது. தியேட்டர்ல ஓடுதோ இல்லையோ, தியேட்டரை விட்டு ஓடணும்னே வாரம் நாலு படம் ரிலீசாகுது. நாலாயிரம் குழந்தைகள் ஆபரேஷன் தியேட்டர்ல ரிலீசாகுது. நாகர்கோவில் ஏரியா நகரப் பேருந்துகளில் சீட்டுக்கு அடியில ரோட்டை பார்த்துக்கிட்டு போற மாதிரி பஸ்கள் ஓடிக்கிட்டு இருக்கு, ஆனாலும் மாசத்துக்கு  அஞ்சு மாடல் கார் ரிலீசாகுது. மாசத்துக்கு பத்து பைக் மாடல் ரிலீசாகுது.

வருஷத்துக்கு முன்னூறு புது செல்போன் மாடல்கள் ரிலீசாகுது. ஆனா இந்த ஆப்பிள் போன் ரிலீசாகுறப்ப நம்ம ஐபோன் அடிமைங்க பண்ற அட்டகாசமும் அட்ராசிட்டியும் இருக்கே... அடேங்கப்பா, என்னவோ கர்நாடகத்துக்கு கைக்காசைப் போட்டு கால் டாக்சில போய் காவிரியை கைய புடிச்சு கால்நடையா கூட்டியாந்த மாதிரி ஒரு கெத்து ஃபீலிங்ல அலையுறாங்க. சீனாவுல ஒருத்தன் ஐபோன் வாங்க கிட்னியை வித்தான்னு செய்தி வருது. 

இப்படியே போனா, ஐபோன் மோகத்துல குழந்தையை விக்கிறது, கட்டுன புருஷனை விக்கிறதுன்னு நடந்தாலும் ஆச்சரியமில்ல. அதிக ஃபீஸ் வாங்குற ஸ்கூல் நல்லாயிருக்கும், செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், அரசாங்க பள்ளிகளில் வாத்தியார்கள் பாடம் நடத்த மாட்டாங்க,  பெரிய ஆஸ்பத்திரில உயிரைக் காப்பாத்திடுவாங்க... இந்த ரேஞ்சுல ஐபோன் மட்டும்தான் சிறந்த போன்னு நம்மாளுங்க நம்ப ஆரம்பிச்சுட்டாங்க போல.  

புது ஐபோன் ஸ்பெசிஃபிகேஷன்கள் எல்லாம், இந்தியாவுல தயாராகுற பல போன்களின் அஞ்சு வருஷத்து ஃப்ளாஷ்பேக் என்பதுதான் உண்மை. சொல்லப் போனா, ‘இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே’ன்னு ஒரு ஃபீலிங் வந்தா, அது நிச்சயம் ஹாரிஸ் இசையா இருக்கணும்; இல்ல, புது  ஐபோனின் ஸ்பெசிஃபிகேஷனா இருக்கணும். 

இதுல பெரிய கூத்து என்னன்னா, இப்படி சிறந்த போன் எதுன்னு ஆப்பிளும் ஆண்ட்ராயிடும் அடிச்சுக்கிட்டு இருக்கிறப்ப,  விண்டோஸ், லூமியா, நோக்கியான்னு சில பேரு வருவாங்க, பொறந்ததுல இருந்தே சிறை வைக்கப்பட்டு, உலகம் தெரியாம வெளிய வர்ற ‘பங்காளி’ பட சத்யராஜ் மாதிரி. புது ஐபோனை தண்ணில போட்டாலும் ஒண்ணுமாகாதாம். சரி, போனை தண்ணில போட்டா ஒண்ணும் ஆகாம இருக்கட்டும்; நாம தண்ணில போயி போனை கீழ போட்டா ஒண்ணுமாகாதான்னு கேட்டா டீச்சருக்கு லவ் லட்டர் கொடுத்ததை பார்த்துட்ட பி.டி. வாத்தியார் மாதிரி முறைக்கிறாங்க.  

நாட்டுல அவனவன் அம்பது, அறுபது வயசாகியும் பொண்ணு கிடைக்காம மண்டைய பிச்சுக்கிட்டு அலையுறான். நம்மாளுங்க புது ஐபோன் கிடைக்குமான்னு புக்கிங் போட அலையுறாங்க. முன்னால ஒரு கேமரா, பின்னால ஒரு கேமரா வரை ஓகே... புது ஐபோன்ல மூணு கேமரான்னு விட்டான் பாருங்க ஒருத்தன் ரீலு, அவன் மட்டும் கைல கிடைச்சான்னா, விஷால் படத்துல வில்லனா போட்டு, பஸ் பம்பரைக் கழட்டி மண்டைய பொளந்திடலாம். 

ஏன்டா, போனை கைல புடிச்சு போட்டோ எடுக்க போறீங்களா, இல்லை கல்யாண வீட்டுல மொத்த சொந்தத்தையும் கவர் பண்ண போறீங்களா? ஒவ்வொரு போன் ரிலீஸாகும்போதும், பழைய போனை விட புது போன் ஸ்பீடு அதிகம்னு சொல்றாங்க, போனு ஸ்பீடா இருந்து என்ன பண்றது? அமேசான் காட்டு அரிய மூலிகை மருந்து வாங்கி டவருக்கு அடியில ஊத்திவிட்டாலும், சிக்னல் எந்திரிச்சு வரலையே மாப்ள! என்னவோ போங்க, பேசறதுக்காக கண்டுபிடிச்ச போனை, பேசறதைத் தவிர மீதி எல்லாத்துக்கும் பயன்படுத்தணும்னு ஆகிடுச்சு! அப்புறம் போன் ரிலீசை ‘புது போனுக்கு பூப்பு நீராட்டு விழா’ன்னு போஸ்டர் அடிச்சும் கொண்டாடலாம், பேனர் வச்சும் கொண்டாடலாம்.        

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.