News
Loading...

உற்பத்தியான காய்கறிகளை தந்திரமாக தமிழகத்துக்கு அனுப்பும் கர்நாடகா விவசாயிகள்

உற்பத்தியான காய்கறிகளை தந்திரமாக தமிழகத்துக்கு அனுப்பும் கர்நாடகா விவசாயிகள்

காவிரியில் தண்ணீர் திறந்து விடும் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் கர்நாடகாவில் தமிழக வாகனங்கள், கடைகள் மற்றும் தமிழர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், தமிழகத்தில் கன்னடர்கள் நடத்தும் ஓட்டல், அவர்களின் வாகனங்கள் மற்றும் கர்நாடக வங்கி ஆகியவற்றின் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இரு மாநில பஸ்களும், மாநில எல்லையில் கடந்த 10 நாளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இடையில் ஓரிரு நாள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு காரணமாக போராட்டம் வெடித்துள்ளது. 
குறிப்பாக பெங்களூரு பகுதியில் பஸ் மற்றும் லாரிகள் எரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் விளைந்து விற்பனைக்கு தயாராக இருக்கும் காய்கறிகளை அதிக நாள் பாதுகாக்க முடியாது என்பதாலும், உடனடியாக அவற்றை விற்காவிட்டால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதாலும் அம்மாநில விவசாயிகள் நூதன முறையில் இந்த பிரச்னையை கையாள தொடங்கி உள்ளனர். 

அதாவது, கேரட், பீட்ரூட், கோஸ், நூக்கல், பீன்ஸ், அவைரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கர்நாடகா மாநிலம் கோலார் மற்றும் மாளூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகிறது. இந்த காய்கறிகள் விளையும் பகுதிகள் தமிழக - கர்நாடகா எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் இருந்து வருவதால், இவைகள் அனைத்தும் தமிழக எல்லை வரை, கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. தமிழக எல்லையை அடைந்ததும், அந்த காய்கறிகள் அனைத்தும் தமிழக பதிவு எண் கொண்ட லாரிக்கு உடனடியாக கூலியாட்கள் கொண்டு மாற்றப்படுகிறது. இதற்கு காலதாமதம் மற்றும் சிறிய அளவில் செலவானாலும் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது என்பதால், கர்நாடக விவசாயிகள் தற்போது இந்த தந்திரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தமிழக எல்லைக்குள் வரும் லாரிகள் அனைத்தும் தமிழக பதிவு எண் கொண்டுள்ளது என்பதால், அந்த லாரிகளுக்கோ அல்லது காய்கறிகளுக்கோ எந்த பிரச்னையும் இல்லை.

எனவே, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மேற்கண்ட பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள் நூதன முறையில் இப்படித்தான் தங்கு தடையின்றி வந்து சேருகின்றன. இதனால் காய்கறிகளின் விலை மற்றும் சரக்கு வரத்தில் பெரிய அளவில் தொய்வு இல்லை. இது குறித்து கர்நாடக விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘‘பெரிய வெங்காயத்துக்கு பேர் போனது கர்நாடக மாநிலம். இங்கு விளையும் பெரிய வெங்காயம் அனைத்தும் பெங்களூரு சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், தற்போது கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தால், பெரிய வெங்காயத்தை அங்கிருந்து நேரடியாக தமிழகத்துக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள் பெரிய வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து கர்நாடகா பதிவெண் கொண்ட லாரிகள் மற்றும் வேன்கள் மூலம்  தமிழக - கர்நாடகா எல்லைக்கு கொண்டு வந்து, தமிழக லாரிகளில் மாற்றி தந்திரமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். 

மேலும் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கத்தரிகாய், வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கர்நாடகா மாநிலம் மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்படும். தற்போது கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மற்றும் வேன்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் அனுப்பப்படும் காய்கறிகள் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கே திரும்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கர்நாடகாவில் பயங்கர வன்முறை வெடித்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகரிக்கும் என வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர். 

ஆனாலும், சற்று மாறாக கர்நாடகா மாநிலத்துக்கு செல்ல வேண்டிய காய்கறி லாரிகள் மற்றும் கர்நாடகா எல்லையில் இருந்த தமிழக லாரிகளில் காய்கறிகளை மாற்றி அனுப்பப்படுவதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக தினமும் 300 லாரிகள் வரும் காய்கறிகள், நேற்று 25 லாரிகளில் கூடுதலாக 325 லாரிகளில் வந்துள்ளது. லாரிகள் போக்குவரத்து இரவு நேரங்களில் நடைபெறுவதால், வன்முறையாளர்கள் பிடியில் இருந்து தப்பித்து கொள்கின்றன. இதனால் எந்த பிரச்னையும்   இல்லாமல் வழக்கம் போல் கோயம்பேடு மார்க்கெட்டு இயங்குகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...