News
Loading...

குப்பையாக கிடந்த இடத்தை பூங்காவாக மாற்றிய நல்ல மனிதர்

ராமர்

பொது இடங்களை கடக்கும் போது குப்பை காணப்பட்டால் அகற்றலாம்,இல்லையேல் செடி வளர்க்கலாமே என ஒரு சிலருக்கு ஏற்படும் எண்ணத்திற்கேற்ப, ராஜபாளையத்தில் தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் குப்பையாக கிடந்த இடத்தை பூங்காவாக மாற்றி உள்ளார்.

ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்த ராமர், 46. மதர் தெரஸா கல்வி அறக்கட்டளை நிர்வாகியான இவர், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், வீடற்றவர்களுக்கு சேவை செய்து வருகிறார். இவரது சேவையை மதுரை மாநகராட்சி நிர்வாகம் கேள்விப்பட்டு, இவரது தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, ஆதரவற்றோர் காப்பகத்தை மதுரை செல்லுாரில் நடத்தி வருகிறது.

தினசரி பணி : தினமும் செட்டியார்பட்டியில் இருந்து ராஜபாளையம் வந்து அங்கிருந்து மதுரைக்கு செங்கோட்டை ரயிலில் செல்கிறார். காப்பகத்தில் பணிகளை செய்துவிட்டு, இரவு மீண்டும் வீடு திரும்புகிறார். இது தான் ராமரின் தினசரி பணி. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முன் சிறிய அளவில் பூங்கா ஒன்று உள்ளது. பராமரிப்பின்றி பாக்கு பொட்டலம், சிகரெட் காலி பாக்கெட் போடும் இடம், வெற்றிலை எச்சிலை துப்பும் இடமாக மாறியது. இதை பார்த்து முகம் சுளிக்காத ரயில் பயணிகளே இல்லை எனலாம்.

குப்பை பூங்கா : ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் எச்சரிக்கை போர்டு வைத்தும் இந்த பிரச்னை தொடர்ந்தது. இதை கவனித்த ராமர், இதை பராமரிக்க ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். நிர்வாகத்தினரும் அனுமதி கொடுத்தனர். தற்போது குப்பையாக கிடந்த பூங்கா சுத்தம் செய்யப்பட்டு செடி, புல் தரையுடன், மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான தனி தண்ணீர் பைப் லைன் அமைத்து தண்ணீரும் தினமும் ஊற்றப்படுகிறது. அருவருப்பாக இருந்த இடத்தை அழகாக மாற்றி, ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியை அழகுற செய்து உள்ளார் ராமர்.

மரத்தால் மேலும் அழகு : அவர் கூறுகையில், “ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்லும்போது, இப்படி வைத்துள்ளார்களே என நினைப்பேன். பராமரிக்க ஆள் இல்லையா, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லையா என பல கேள்விகள் என்னிடம் எழுந்தது. மற்றவர்களை பற்றி கவலையில்லை, முடிந்தவரை நாம் செய்வோம் என, ரயில்வே கண்காணிப்பாளர் செங்கோல் ராஜை சந்தித்தேன். அவர்,“ உங்களை போன்றவர்களை தான் தேடுகிறேன்” என கூறி அனுமதி அளித்தார். தண்ணீருக்கும் ஏற்பாடு செய்தனர். இதற்கென உபகரணங்களை வாங்கி பராமரிக்க துவங்கினேன். தற்போது பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். மரம் வளர்ந்தால் மேலும் இதற்கு அழகு சேரும்,” என்றார்.

வாழ்த்தலாமே : அரசையே நம்பி, நிர்வாகத்தை குற்றம் சொல்லி காலத்தை கழிக்கும் நபர்களுக்கு மத்தியில், தினமும் ரயில் ஏறும் முன் பூங்கா பராமரிப்பை செய்யும் ராமர், பாராட்டப்படவேண்டியவர் தான். நாமும் அவரை வாழ்த்துவோம்.அலைபேசி எண் 94430 83095.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.