News
Loading...

முதல்வர் தொகுதி மக்கள் மீண்டும் வெள்ள அபாயத்தில் வசித்து வருகின்றனர்.

முதல்வர் தொகுதி மக்கள் மீண்டும் வெள்ள அபாயத்தில் வசித்து வருகின்றனர்.

பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால்கள் மற்றும் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி, கரைப்பகுதியை உயர்த்தி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், முதல்வர் தொகுதி மக்கள் மீண்டும் வெள்ள அபாயத்தில் வசித்து வருகின்றனர். 

சென்னை கொருக்குப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், எழில்நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மழை காலத்தின்போது இப்பகுதியில் தேங்கும் தண்ணீர் மழைநீர் கால்வாய்கள் வழியே, கொருக்குப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் விடப்படுகிறது. பின்னர், அதன் மூலம் எண்ணூர் கடலில் கலக்கிறது. 

இப்பகுதியில் முக்கிய நீர் வழித்தடமாக உள்ள இந்த பக்கிங்காம் கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமலும், அதன் கரைகளை உயர்தி அமைக்காமலும், நீண்ட காலமாக தூர்வாரப்படாமலும் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால், கடந்த ஆண்டு தொடர் மழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கால்வாய் நிரம்பி அருகில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 

இதனால், ஏராளமானோர் தங்களது உடமைகளை இழந்து, வீடுகளைவிட்டு வெளியேறி வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். மழைநீர் வடிகால்கள், பக்கிங் கால்வாயை முறையாக தூர்வாரி பராமரிக்காததே வெள்ள பாதிப்புக்கு காரணம் என அப்போது பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆனால் கடந்த மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிறகும் அதிகாரிகள் பாடம் கற்கவில்லை. 

இப்பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயின் கரைகளை முழுவதுமாக உயர்த்தாமல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் உயர்த்தியுள்ளனர். மேலும், தூர்வாரப்படாத காரணத்தால் தற்போது கால்வாயில் மணல் திட்டுக்களாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் ஆகாயத்தாமரை வளர்ந்தும், குப்பை குவியலுமாக உள்ளது. இதனால், நீரோட்டம் தடைபட்டு, ஆங்காங்கே குளம்போல் கழிவுநீர் தேங்கி உள்ளது. 

விரைவில் பருவ மழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்கள் மற்றும் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி, கரைப்பகுதியை உயர்த்தி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், கரையோரத்தில் உள்ள எழில் நகர், நேரு நகர், நேதாஜி நகர், அம்பேத்கர் நகர், ஜெஜெ நகர், பட்டேல் நகர், தமிழர் நகர் மற்றும் கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வெள்ள அபாய பீதியில் வசித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இங்குள்ள மழைநீர் கால்வாய்கள் மற்றும் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி கரைப்பகுதியை உயர்த்த மாநகராட்சி மூலம் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறினர். ஆனால், அதில் எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் ஒரு வெள்ள பாதிப்பை இப்பகுதி மக்களால் தாங்க முடியாது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...