News
Loading...

அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜெ!

அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜெ

சட்டமன்றத் தேர்தலைப்போல, உள்ளாட்சித் தேர்தலிலும் சரிவு தொடர்ந்து விடக் கூடாது என்று உஷார் ஆகியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. அதன் எதிரொலியாக, சென்னை அ.தி.மு.க நிர்வாகிகளைக் களையெடுத்து ஷாக் கொடுத்து இருக்கிறார் ஜெயலலிதா.

தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லப் பட்டு வந்த சென்னை மாநகரில், 2011 சட்டமன்றத் தேர்தலில், 14 தொகுதிகளில் வெற்றிக்கோட்டை கட்டியது அ.தி.மு.க.

இரண்டு தொகுதிகளில் மட்டுமே தி.மு.க-வால் ஜெயிக்க முடிந்தது. அந்த வெற்றியைக் கண்டு அ.தி.மு.க-வினரே அதிசயித்துப்போனார்கள். பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க-வே மேயர் பதவியைக் கைப்பற்றியது. முதல் தடவையாக, சென்னை மாநகராட்சி மேயர் பதவி அ.தி.மு.க-வின் வசம் வந்தது. ஆனால், பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளஅ.தி.மு.க-வினர் தவறிவிட்டனர். அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களைவிட அ.தி.முக-வின் மாநகராட்சிக் கவுன்சிலர்களின் அடாவடித்தனம், நிர்வாகிகளின் வசூல்வேட்டை போன்றவை, அ.தி.மு.க-வின் தலைமையை எரிச்சலுட்டின. அ.தி.மு.க தலைமைக்கு, அனைத்து வார்டுகளில் இருந்தும் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒரே வருடத்தில், கவுன்சிலர்கள் அனைவரையும் வரவழைத்து, ‘திருந்துங்கள்...அல்லது தீர்த்துவிடுவேன்’ என்று எச்சரித்து அனுப்பினார் ஜெயலலிதா. சிலர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு, சென்னையைப் புரட்டிப்போட்ட கனமழையால், கவுன்​சிலர்களின் குட்டு வெளிப்​பட்டது. பல இடங்களில் அடிப்​படை வசதிகள் கூட இல்லை என்பதை அந்த மழை அம்பலப்படுத்தியது. அப்போதே, அ.தி.மு.க-வின் ​தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்களின் கூட்டத்தைக் கூட்டிய நால்வர் அணியினர், “உங்களால்தான், இந்த ஆட்சிக்குக் கெட்டபெயர். இது அம்மாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஒழுங்காகப் பணியாற்றுங்கள்” என்று எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கையையும் காற்றில் பறக்கவிட்டு, கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் அட்டகாசங்களைத் தொடர்ந்தனர். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில், 

6 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற்றது. அமைச்சர்களாக இருந்த வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

“மாநகராட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளும், மக்களிடம் அவர்கள் அதிருப்தியைச் சம்பாதித்து விட்டதும்தான், இந்தத் தோல்விக்குக் காரணம்” என்று புகார் சொல்லப்பட்டது. அதை சீரியஸாகவே எடுத்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டு மாவட்டச் செயலாளர்களை மாற்றி அதிரடியில் இறங்கினார் ஜெயலலிதா. அதன் தொடர்ச்சியாக, இப்போது மாவட்ட நிர்வாகிகள், வட்டம், பகுதி என பலருடைய பொறுப்புகளை  மாற்றியும், சிலரிடமிருந்து பொறுப்புகளைப் பறித்தும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். குறிப்பாக, தென் சென்னை வடக்கு மாவட்டத்தில் 14 வட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்​பட்டுள்ளன. இரண்டு பகுதிச் செயலாளர்கள் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜெ

தென் சென்னை வடக்கு மாவட்டத்தில் முழுமையாக மாற்றம் அறிவிப்பு வந்தபிறகு, பதவியைப் பறிகொடுத்தவர்கள், மாவட்டச் செயலாளர் கலைராஜனை கண்டித்து போயஸ் தோட்டம் செல்ல முயன்றனர். காவல்துறை அனுமதி மறுத்தது. அவர்கள், அ.தி.மு.க தலைமைக் கழகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “கலைராஜன், பணம் பெற்றுக் கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்குப் பதவியைக் கொடுத்துள்ளார். நீண்டகாலமாக கட்சியில் இருந்தும் எங்களுக்கு மரியாதை இல்லை. முதலில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கோஷமிட்டனர்.  

கலைராஜன் தரப்பிலோ, “சட்டமன்றத் தேர்தலில், செயல்படாத நிர்வாகிகள்தான் மாற்றப்பட்டுள்ளனர். பதவிகளைப் பறிக்காமல், மாற்றுப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒருவரே நீண்டகாலம் ஒரே பதவியில் இருப்பதால் கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்றுதான் அம்மா இந்த மாற்றங்களைச் செய்துள்ளார்” என்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள், “இப்போது தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் மட்டும்தான் அறிவிப்பு வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் சென்னையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். புதியதாகப் பொறுப்புக்கு வந்தவர்களில் பழையவர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பதவி பறிபோனவர்களில் பலர் கடந்த தேர்தலில், வேலை செய்யாதவர்களும், கட்சிக்குத் துரோகம் செய்தவர்களும்தான். தியாகராய நகர் பகுதியில் நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர், அங்கு நின்ற தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு வேலை செய்திருப்பது தெரியவந்தது. அண்ணாநகர் பகுதியிலும் புகார் உள்ளது. அதனால்தான், அவர்கள் மீது நடவடிக்கை. எந்த வட்டங்களில் சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவானதோ, அந்த ஏரியாக்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குள் இதுபோல நிறைய மாற்றங்கள் இருக்கும்” என்கிறார்கள்.

அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜெ

சென்னையில் களையெடுப்பைத் தொடங்கிய அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளார் ஜெ.   அ.தி.மு.க-வின் முக்கிய அமைப்புகளில் ஒன்று இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை. அவற்றின் ஐந்து மாவட்டச் செயலாளர்களை ஒரே நாளில் மாற்றியுள்ளார். அணிவாரியாக நிர்வாகிகள் மாற்றம் நடந்துள்ளது.

தமிழகத்தைப் போலவே, பிற மாநிலங்களில் இருக்கும் அ.தி.மு.க-வின் நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளார்கள். தெலுங்கானாவில் பாண்டியன் என்பவரை மாநிலச் செயலாளராக நியமித்துள்ளார் ஜெ.

மாற்றம், உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்குமா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...