News
Loading...

வெளிநாடுகளில் கோடி கோடியாக முதலீடு கரூர் அன்புநாதன் மீது அமலாக்கத் துறை வழக்கு

வெளிநாடுகளில் கோடி கோடியாக முதலீடு கரூர் அன்புநாதன் மீது அமலாக்கத் துறை வழக்கு

தமிழகத்தில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் கோடி கோடியாக முதலீடு செய்திருப்பதாக கரூர் அன்புநாதன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஒரு மூத்த அமைச்சர், தற்போதைய எம்பி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் சிக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கரூரைச் சேர்ந்த அன்புநாதனுக்குச் சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தி ரூ.5 கோடி ரொக்க பணத்தை கைப்பற்றினர்.

மேலும், குடோனில் ரூபாய் நோட்டுக்களை எண்ணும் 12 மெஷின், பணம் கடத்த பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டன. குடோனில் இருந்த கேமராவை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கேமராவை ஆய்வு செய்தபோது, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தற்போதைய மூத்த அமைச்சர், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்பியுமான ஒருவர் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் அடிக்கடி அங்கு போலியான நம்பர் பிளேட் காரில் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமானது என்றும் தெரியவந்தது.

இவை தவிர, அன்புநாதன் வீட்டில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்ஹாங் போன்ற நாடுகளில் கோடி கோடியாக அன்புநாதன் மூலம் முதலீடு செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக தாய்லாந்து நாட்டின் அருகே ஒரு தனி தீவும் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள் குறித்த தகவல்கள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்தனர். இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அன்புநாதன் பினாமி பெயரில் துபாயில் உள்ள டெய்ரா சிட்டியில் ரூ.1900 கோடியில் கட்டப்பட்டுள்ள 
அடுக்குமாடி வர்த்தக வளாகத்தை வாங்கியிருப்பதும், அதற்கு மும்பையில் ஹவாலா மோசடியில் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்ட மனோஜ்குமார் கார்க் என்பவர் உதவியிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்த ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், 2004ம் ஆண்டில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சுரேந்திரகுமார் என்பவர் உதவியுடன் வெளிநாட்டில் ஹவாலா மூலம் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் முழுவதும் தற்போதைய மூத்த அமைச்சர் ஒருவர், முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான ஒருவர், முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் தெரியவந்தது. ஆனால் இந்தப் பணம் முழுவதும் அன்புநாதன் மூலம் மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும் அமலாக்கத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர் போலீஸ் அல்லது சிபிஐ போன்ற அமைப்புகளைப் போல இல்லாமல் அமலாக்கத் துறையைப் பொறுத்தவரை தீவிரமாக விசாரணை நடத்திய பின்னர்தான் வழக்குப்பதிவு செய்வார்கள். இதனால் அன்புநாதன் மற்றும் மூத்த தலைவர்களின் முதலீடு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி, உறுதி செய்ததைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ்( ஃபெமா) வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அந்த வழக்கில், அன்புநாதன்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மற்ற யாருடைய பெயரும் சேர்க்கப்படவில்லை. ஆனால், ‘‘மேலும் பல குற்றவாளிகள்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் அன்புநாதன் மூலம் முதலீடு செய்த ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் இதில் சிக்குகின்றனர் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது அன்புநாதனுக்கும் அரசியல் தலைவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் திரட்டி வருகின்றனர். அதன்பின் 3 முக்கிய தலைவர்களும் அதில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுகின்றனர்.

தொடர்ந்து, அன்புநாதன் மற்றும் 3 மூத்த தலைவர்களும் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் அன்புநாதனுடன் தொடர்பு வைத்திருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.  இப்போது அன்புநாதன் மற்றும் பலர் என்று 3 மூத்த தலைவர்களை மறைமுகமாக குறிப்பிட்டு அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம் மீண்டும் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

* சட்டப்பேரவை தேர்தலின்போது அன்புநாதனுக்குச் சொந்தமான  குடோன் மற்றும் வீட்டில்  ரூ.5 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.
* துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்கில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
* தாய்லாந்து நாட்டின் அருகே ஒரு தனி தீவு வாங்கப்பட்டுள்ளது. 
* துபாயில் உள்ள  டெய்ரா சிட்டியில் ரூ.1900 கோடியில் அடுக்குமாடி வர்த்தக  வளாகம் வாங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...