News
Loading...

குடியரசுத் தலைவர் உடன் அன்புமணி சந்திப்பு. காவிரி விவகாரம் பற்றி ஆலோசனை...

குடியரசுத் தலைவர் உடன் அன்புமணி சந்திப்பு. காவிரி விவகாரம் பற்றி ஆலோசனை...

அன்புமணி ராமதாஸ் அறிக்கை :

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் 
இன்று என்னுடைய சந்திப்பு. 

கர்நாடகத்தில் அமைதி ஏற்படுத்தவும், காவிரி மேலாண்மை 
வாரியம் அமைக்கவும் அரசுக்கு ஆணையிட வலியுறுத்தல்
தமிழர் மீதான தாக்குதல் குறித்து பிரணாப் வருத்தம்

காவிரிப் பிரச்சினையை மையமாக வைத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் கலவரங்கள் குறித்து முறையிடுவதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை தில்லியிலுள்ள அவரது மாளிகையில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பு பிற்பகல் 2.05 மணி வரை மொத்தம் 20 நிமிடங்கள் நீடித்தது.

குடியரசுத் தலைவருடனான சந்திப்பின் போது காவிரி பிரச்சினை குறித்தும், அதை மையப்படுத்தி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறையும், கலவரமும் கட்டவிழ்த்து விடப்பட்டது குறித்தும் விளக்கினேன். கர்நாடகத்தில் இன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அதனால் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் குடியரசுத் தலைவர் அவர்களிடம் எடுத்துக் கூறினேன்.

கர்நாடகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அங்கு இராணுவத்தையும்,துணை இராணுவப் படைகளையும் பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும். நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்கை கர்நாடகத்திற்கு அனுப்பும்படி பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். 

தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதலமைச்சரை அழைத்து இப்பிரச்சினை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதன்மூலம் கர்நாடகத்தில் அமைதியை ஏற்படுத்துவதுடன், இரு மாநிலங்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தும்படி பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

கர்நாடகத்தில் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டது குறித்தும், தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்தும் விளக்கிய அவர், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடும், நிவாரண உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் இதற்கெல்லாம் மேலாக இனி வரும் காலங்களில் காவிரிப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரினேன்.

அதைக் கேட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் வருத்தமளிப்பதாகக் கூறினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களும் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவதாகவும் குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...