News
Loading...

வன்முறைகளுக்கு எதிரான நம் மவுனத்தைக் கலைப்போம்

வன்முறைகளுக்கு எதிரான நம் மவுனத்தைக் கலைப்போம்

பெண்கள் மீதான வன்முறை குறித்து நிறைய எழுதியாயிற்று. இது குறித்து விவாதித்தும், மனம் குமுறியும், வெம்பியும் போனோம். சுவாதி, வினுப்பிரியா, கலைச்செல்வி, சோனாலி, பிரான்சினா ஆகியோரின் கொலை மரணங்களுக்காக வருந்தாதவர்கள் மிகக் குறைவு என்று நினைக்கும்படிதான் மக்களின் எதிர்வினை இருந்தது. ஆனால் இப்படிப் பெரும்பாலான மக்கள் வருந்தியதால் இனிமேல் மாற்றம் வந்துவிடப்போகிறதா என்ற கேள்விக்கான பதில் எதிர்மறையாகவே இருக்கிறது.

தவறுகளுக்குப் பழகிவிட்ட சமூகம்

பொதுவெளியில் வைத்து நிகழ்த்தப்படும் கொடூரமான வன்முறைகள் நமது தமிழ்ச் சமூகத்துக்குப் புதிது. நம் சமூகத்துக்குப் பல புதிய விஷயங்களைப் பரவலாக சினிமா அறிமுகப்படுத்தியபோது உள்ளூர மகிழ்ச்சியுடனோ அல்லது வார்த்தைகளில் கோபத்துடனோ மட்டும் எதிர்கொண்டோம். ஆனால் அது பழகிப்போய்விட்டது. ஒரு காலத்தில் குடி என்றாலே அச்சப்பட்டவர்கள் பிறகு வாரம் இரண்டு நாட்கள் குடித்தால் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டார்கள். பிறகு எல்லா நாட்களும் குடித்தாலும் சண்டையில்லாமல் அமைதியாக வந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் போதும் என்று வேண்டிக்கொள்கிற நிலையும் வந்துவிட்டது.

இதே போலத்தான் பெரிய தவறுகள் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நடக்காமல் இருந்தால் சரி என்னும் அளவுக்கு இயலாமைக்கும் கையறு நிலைக்கும் நமது சமூகம் தள்ளப்பட்டுவிட்டது. ‘ஆம்பிளை என்றால் கொஞ்சம் பேசத்தான் செய்வான். ஆனால் அவனுக்குள் அன்பிருக்கிறது’, ‘அவன் அடித்தாலும், உதைத்தாலும் நீதான் கொஞ்சம் பொறுத்துக்கணும்’ என்று காலம் காலமாக நம் குடும்பங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் அறிவுரைகள் ஏராளம். இவை பெண்களுக்கு எரிச்சலைத்தான் தருகின்றன. ஆனால் எரிச்சல்படுவதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

வீழ்த்தும் வன்முறை

வன்முறைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று தனியிடங்களில் நடப்பவை, இரண்டாவது பொதுவெளிகளில் நடப்பவை. முதலாவது பெண்களுக்கு மிகுந்த வலியையும், வேதனையையும், வாழ்க்கையில் நம்பிக்கையின்யையும் ஏற்படுத்துகின்றன. அல்லது ‘பொறுத்துப் போய் பிழைத்துக்கொள்’ என்கிற தகவமைப்வைச் சொல்லிக் கொடுக்கின்றன. குடும்பம் உள்ளிட்ட சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்ட பெண்ணை ஆற்றுப்படுத்தி, ‘வன்முறை உன்னுடைய வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒரு விஷயம்’ என்று கற்பித்துக் குடும்ப வன்முறைகளைக் காக்கின்றன. பொது வெளியில் நடப்பவைகளும் மேற்கண்ட அதே வலி, வேதனைகளைத் தருவதோடு பொதுவெளியில் உயிரை இழக்கிற அவலத்தையும் ஏற்படுத்துகின்றன. வன்முறையாளார்கள் அதிகபட்ச வெற்றிப் பெருமிதம் அடைவது போலவும், அவர்களது வெறியைத் தீர்த்துக்கொண்ட ஆசுவாசத்தை அடைவதாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. இதனால் தனி இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வந்தவர்கள் பொதுவெளி வன்முறையாளார்களாக மாறுகின்றனர்.

மவுனத்தைக் கலைப்போம்

சுவாதி என்ற பெண்ணின் பெயரை உச்சரிக்கிறோம். காரணம் அவள் பொதுவெளியில் வன்முறையாகக் கொல்லப்பட்டிருக்கிறாள். ஆனால் நேற்றும் இன்றும் ஆயிரக்கணக்கான சுவாதிகள் ‘பின் தொடர்தல்’ என்னும் வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஒரு வினுப்பிரியா உயிரை மாய்த்துக்கொண்டார். ஆனால் புகார்களைக் கவனியாத சமூகத்தின் புத்தியும், காவல் துறையின் மெத்தனமும் நூற்றுக் கணக்கான வினுப்பிரியாக்களின் மரணங்களை வயிற்று வலி மரணங்களாகச் சித்தரிக்கின்றன. காதல் மறுப்பும் நிராகரிப்புகளும்கூட பெண்களை வன்முறை வெறியாட்டத்துக்கு இட்டுச் செல்கின்றன.

வீடு, பொது இடம் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகியிருக்கும் இந்தச் சூழலில் நான்கு சுவருக்குள் நடக்கும் வன்முறைகளைப் பேசுவது குடும்பத்துக்கு அழகல்ல என்பது போன்ற கட்டுப்பெட்டித்தனங்களைத் தகர்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் பெண்கள் மீதான வன்முறைகள் பொது வெளிவரை வராது. வெட்டு, குத்து, ரத்த காயம் மட்டுமே வீட்டுக்குள் நடக்கும் வன்முறை என்று நம்பப்படுவது மிகப் பெரிய பின்னடைவு. உளவியல், பொருளாதாரம், பாலியல் ஆகியவற்றை மையமாக வைத்து நடக்கும் வன்முறைகளும் மிகப் பெரிய வன்முறைகளே. இவற்றை எதிர்க்கும்போதுதான், பெண்கள் மீதான வன்முறை குறித்த பார்வையும் மாறும். வீடுகளில், தனி இடங்களில் நடக்கும் வன்முறைக்கு எதிராக ஒவ்வொரு நாளும் நூறு, ஆயிரம், லட்சம் என எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டே இருந்தால்தான் பெண்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முடியும்.

‘வன்முறையற்ற வாழ்க்கை ஒரு பெண்ணின் பிறப்புரிமை’ என்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் உணர வேண்டும். வன்முறையை எதிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வது குறித்து பயப்படக் கூடாது. வன்முறைகளைத் தாங்கிக்கொள்வதைவிட, எதிர்மறையான சூழலில் அதை எதிர்ப்பது எளிது என்பதை நடைமுறைதான் நமக்கு உணர்த்தும். சட்ட வழிகளில் தீர்வுகளைத் தேடும் பல பெண்கள் இப்படித்தான் தொடர்ச்சியான வன்முறைகளிலிருந்து மீள்கிறார்கள். ‘தனியாக இருப்பது சிரமம்தானே’ என்ற கேள்விக்கு, ‘அதைவிட சிரமம் வன்முறையோடு வாழ்வதே’ என்பதுதான் பதிலாக இருக்க முடியும். மவுனம் சம்மதம் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் நம் சமூகத்தில் வன்முறைகளுக்கு எதிரான நம் மவுனத்தைக் கலைப்பது மட்டுமே வன்முறைகளை நமது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான முதல் படி.

கட்டுரையாளர், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.