News
Loading...

தண்ணீர் புகாத ஆப்பிள் போன்!

தண்ணீர் புகாத ஆப்பிள் போன்!

ரியோ’ ஒலிம்பிக்ஸை நேரடி ஒளிபரப்பில் பார்த்தவர்களை விட அதிகம் பேர் ஒரு செல்போன் வெளியீட்டு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறார்கள் என்றால், அதுதான் ‘ஆப்பிள் ஐபோன்’ ஸ்பெஷல். ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 என எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகள் தவிர, இயர்பாட் என்ற பெயரில் வயர்லஸ் இயர்போன் ஒன்றையும் இந்த முறை ஆச்சரியப் பரிசாக அளித்திருக்கிறது ஆப்பிள். அக்டோபர் 7ல் இவை அனைத்தும் இந்தியாவுக்கு வரலாம். ஐபோன் 7 ஆரம்ப மாடல் 60 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கலாம்.

இந்த வெளியீட்டின் மிகப்பெரிய மாறுதல், ஐபோனில் காலம் காலமாக ஹெட் போன்களை இணைப்பதற்காக இருந்த 3.5 எம்.எம் போர்ட் நீக்கப்பட்டிருப்பதுதான். இனி, ஐபோனில் புளூ டூத் வழியாக மட்டுமே பாட்டு கேட்க முடியும். இதற்கெனவே தனியாக இயர்பாட் எனும் குட்டிக் கருவியை இதே நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இது ஐபோன் கூடவே வராது. தனியாகக் காசு கொடுத்து வாங்க வேண்டும். (சுமாராக இதன் விலை, ஜஸ்ட் 10 ஆயிரம் ரூபாய்தான்!) ‘இது என்னங்க அநியாயமா இருக்கு?’ என வாயைப் பிளப்பவர்களுக்காக ஹெட்போன் அடாப்டர் ஒன்றை புதிய ஐபோனோடு தருகிறது ஆப்பிள். 

ஐபோனை சார்ஜ் ஏற்றும் போர்ட்டிலேயே நமது வழக்கமான ஹெட்போன்களை இணைத்துப் பாட்டுக் கேட்க வழி செய்கிறது இந்த அடாப்டர். ஆப்பிளின் வடிவமைப்பு டீம் எங்கோ லாங்லீவில் போய்விட்டது போல. முந்தைய ஐபோன் 6எஸ், 6 ப்ளஸ்ஸோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விஜய்யின் கெட்டப் சேஞ்ச் போலத்தான் இருக்கிறது ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்ஸின் தோற்றம். நீளம், அகலம், தடிமன் எல்லாமே அதேதான். ஆனால், ஹெட்போனை சொருகுவதற்காக இருந்த ஒரு போர்ட் நீக்கப்பட்டிருப்பதால், இதற்கு அதிகபட்ச வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் திறன் கிடைத்திருக்கிறது. 

‘‘அரை மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்தால் கூட ஐபோன் 7க்குள் தண்ணீர் புகாது’’ என அடித்துச் சொல்கிறார் ஆப்பிள் தலைவர் டிம் குக்.
இதுவரை ஐபோன் பதிப்புகள் 16 ஜி.பி கொள்ளளவில் இருந்து துவங்கும். விலை குறைவு என சபலப்பட்டு இதை வாங்குகிறவர்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் தாண்டி வேறெந்த ஆப்புக்கும் இடமில்லாமல் புழுங்கித் தவிப்பார்கள். இனி அந்தக் கஷ்டம் இல்லை. ஐபோன் 7 ஆரம்ப நிலை மாடலே 32 ஜி.பி. அடுத்தது 128 ஜி.பி. மூன்றாவது 256 ஜி.பி. வேறென்ன வேண்டும்? இன்றிருக்கும் பெரும்பாலான வீட்டு கம்ப்யூட்டர்களின் ஹார்டு டிஸ்க்கின் சைஸில் இது பாதி பாஸ்.

வெளிப்புறத்தில் பளிச்சென்று தெரியாத பல முன்னேற்றங்களை இந்தப் பதிப்பில் கண்டிருக்கிறது ஐபோன். ஹோம் பட்டன்கள் கொஞ்ச காலத்தில் பழுதாகிவிடுவதால் அதை டச் பட்டனாக மாற்றியிருக்கிறார்கள். முதல்முறையாக நான்கு கோர் ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஐபோன் 7 போனைப் பொறுத்தவரை இனி முன்புற செல்ஃபி கேமராவை வைத்து கூட ஹெச்.டி வீடியோக்கள் எடுக்கலாம். 7 மெகாபிக்சல்களாக அது தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 

ஐபோன் 7 ப்ளஸ் மாடலில் முதல்முறையாக பின்புறம் இரண்டு கேமராக்களை அறிமுகம் செய்திருக்கிறது ஆப்பிள். இதன் மூலம் ஒரு தொழில்முறை கேமரா போலவே ஜூம் செய்து படமெடுக்க முடியும். அதற்கேற்ற தரமும் இதில் கிடைக்கும். வழக்கம் போலவே இந்த முறையும் ஆப்பிளின் புது வெளியீட்டைப் பார்த்து ‘ஆஸம்’ என்பவர்களை விட ‘மோசம்’ என்பவர்கள்தான் அதிகம். காரணம், ஆண்ட்ராய்டுடனான ஒப்பீடு. 

இந்த டபுள் கேமரா, செல்ஃபியில் ஹெச்.டி... இதையெல்லாம் ஆண்ட்ராய்டு கடந்து போய் ரொம்ப நாளாகிறது. ஆறு ஜி.பி, எட்டு ஜி.பி என ஆண்ட்ராய்டு போன்களின் ராம்கள் அதிர வைக்கின்றன. அதற்கேற்ப அவற்றின் வேகமும் எகிற வைக்கிறது. ஆனால், ஐபோன் 7 இன்னும் 2 ஜி.பி ராமில் சிக்கித் திணறுகிறது. ஆண்ட்ராய்டில் குறைந்தபட்ச கேமராவே 14 மெ.பிக்சல் என்றான பிறகு ஆப்பிள் இன்னும் 12 மெ.பிக்சல்களோடு வருகிறது. அரை டிரவுசர் கூட, ‘ஆக்டாகோர் ப்ராசஸர்தான் வேணும்’ என அசால்ட்டாகக் கேட்கும் காலத்தில் ஆப்பிள் இப்போதுதான் குவாட் கோர் ப்ராசஸரையே எட்டிப் பிடித்திருக்கிறது. 

ஆக, ஆப்பிளின் இந்த வெளியீடு அட்டர் ஃப்ளாப் என்றுதான் வர்த்தக உலகம் கணித்திருக்கிறது. இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின் பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு 2 புள்ளிகள் சரிந்திருந்தது. ஆனால், இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் வெளியீட்டின்போதும் இதே 2 புள்ளிகள் சரியத்தான் செய்தது. ஆனால், ஐபோன் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை ஐபோன் 6 பெற்றது. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என ஆப்பிள், யானை போல மிடுக்காக நடக்கிறது. பந்தயத்தில் ஓடுவது அதன் நோக்கமில்லை!

ஆப்பிள் வாட்ச்

அழகருக்கு திருவிழா நடக்கும்போது சைடில் கருப்பசாமிக்கு கிடாவெட்டு நடப்பது போல, ஐபோன் 7 பதிப்புக்கான இந்த நிகழ்ச்சியில் ஒரு கொசுறு வெளியீடாக அறிவிக்கப்பட்டது ஆப்பிள் வாட்ச் 2. ஆனால், ‘‘அணிந்துகொள்ளக் கூடிய தொழில்நுட்பத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் வெளியீடு இது’’ என்கிறார்கள் டெக் ஆரூடக்காரர்கள். காரணம், இதுவரை வந்த ஸ்மார்ட் வாட்ச்சுகள் எல்லாமே நமது போனோடு ப்ளூ டூத் மூலம் இணைக்கப்பட்டு அதனைச் சார்ந்தே இயங்கும். ஆனால், இந்த வாட்ச்சில் தனியே ஜி.பி.எஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. 

போன் துணையின்றி இந்த வாட்ச்சே நமக்கு திசைகாட்டும்... மேப் மூலம் வழிகாட்டும். மொத்தத்தில் இது போன் இன்றி தனித்து இயங்கும். திரையின் பிரகாசம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருப்பதால், வெயிலிலும் இது மணி காட்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இளசுகள் உலகை இழுத்துப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் போகேமான் ஆப் இந்த வாட்ச்சுக்குள் இயங்கும். இதற்கான ஸ்பெஷல் போகேமான் பதிப்பு இந்த வருட இறுதிக்குள் வெளியாகுமாம். அப்போ, விபத்துகள் கமிங் சூன்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.