News
Loading...

பிரதமரை சந்திக்க நடிகர் ரஜினி ஆர்வம் : நதிநீர் இணைப்பை வலியுறுத்த திட்டம்

பிரதமரை சந்திக்க நடிகர் ரஜினி ஆர்வம் நதிநீர் இணைப்பை வலியுறுத்த திட்டம்

நதிநீர் இணைப்பு உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு நலன்களுக்காக, விரைவில் நடிகர் ரஜினி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

சில நாட்களுக்கு முன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். கிட்டதட்ட, நான்கு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 'தமிழகத்தின் எதிர்கால நலனை முன்னிட்டு, மக்கள் சக்தியை பின்புலமாகக் கொண்ட நீங்கள், அரசியலுக்கு வருவது அவசியம்; காலத்தின் கட்டாயம்' என்ற ரீதியில், நிறைய விஷயங்களை பொன்ராஜ், ரஜினியிடம் அழுத்தம் திருத்தமாக கூறினார்.இதையடுத்து ரஜினிக்கும், தமிழக அரசியல் களத்தை தன்வயப்படுத்தும் ஆர்வம் தலைதுாக்கி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தன் ரசிகர் மன்றங்களின் செயல்பாட்டை வேகமாக்கும் முயற்சியில், ரஜினி இறங்கி உள்ளார்.

மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவு

முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை, மன்றங்களில் பொறுப்பில் உள்ளவர்கள், அவர்கள் பின்புலம், வயது, வேறு ஏதேனும் அரசியல் இயக்கங்களில் உள்ளனரா, தொழில் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சேகரிக்க, தன் நண்பர்களுக்கும், ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். நிர்வாகிகள் இல்லாமல், சரிவர செயல்படாமல் இருக்கும் மன்றங்களை புதுப்பிக்கவும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கலாம் ஆலோசகர் பொன்ராஜ்

ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ரஜினி நடித்து வெளியான, கபாலி படத்தில், அம்பேத்கர் மற்றும் தலித் இன மக்களை முன்னிலைப்படுத்துவது போல, காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது, தலித் இன மக்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளானதும், ரஜினி சந்தோஷமடைந்தார். இதையெல்லாம் குறிப்பிட்டு, ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியத்தை, அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ், வலியுறுத்தி சொல்லவும், அதில் ரஜினிக்கும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்தே, தன் ரசிகர் மன்றங்களை துாசு தட்டும் முனைப்பில் களம் இறங்கி உள்ளார். கூடவே, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட, பல்வேறு தமிழக நலன்களை வலியுறுத்தி, பிரதமர் மோடியை சந்திக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளார். இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...