News
Loading...

வாய்மை - திரை விமர்சனம்

வாய்மை - திரை விமர்சனம்

தூக்கு தண்டனைகூடாது... என்பதை கடுமையாக வலியுறுத்தி, சாந்தனு பாக்யராஜ், மம்பட்டியான் தியாகராஜன், கே.பாக்யராஜ், கவுண்டமணி, ராம்கி, மனோஜ் பாரதிராஜா, பிருத்வி பாண்டியராஜன், தாமிரபரணி பானு, பூர்ணிமா பாக்யராஜ், ஊர்வசி, நமோ நாராயணா உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க, புதியவர் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில், அவரது மனைவி எஸ்.தமிழினி, மகன் எஸ்.மணிகண்டன் இருவரது தயாரிப்பில் ஓப்பன் தியேட்டர் பட நிறுவனம் வழங்க, மின் மேக்ஸ் மூவிஸ் வெளியிட, திரைக்குவந்திருக்கும் படம் தான் "வாய்மை".

அகிம்சாவாதி ஒருவரை, சுட்டுக் கொன்றதாக அப்பாவி பிருத்வி பாண்டியராஜுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது, இந்திய தண்டனை சட்டத்தில் அதிசயமாக, அவசர கோலத்தில் நிறைவேற்றவும் படுகிறது. செய்யாத கொலைக்கு மகனை பறிகொடுத்து விட்டு பரிதவித்து நிற்கும் பூர்ணிமா பாக்யராஜும் மகன் செய்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி அவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர், குற்றவாளியா? நிரபராதியா..? என ஆராய வேண்டிய சூழல் நீதிமன்றத்திற்கு.... அதற்காக பழங்கால முறையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்கள் பனிரெண்டு பேர் கொண்ட ஒரு குழுவை நியமிக்கும் நீதிபதி, தீர்ப்பை அவர்களின் ஒருமித்த கருத்தை வைத்து எழுத முடிவு செய்கிறார். வெவ்வேறு மனநிலை கொண்ட, பல்துறை வித்தகர்களான அந்த பனிரெண்டு பேரும் இரண்டு மணி நேரத்தில் ஒருமித்த கருத்தில் சங்கமித்தார்களா.? பூர்ணிமா பாக்யராஜ் உயிர் பிழைத்தாரா..? தான் மட்டுமல்ல... தன் மகனும் நிரபராதி என்பதை உலகிற்கு உணர்த்தினாரா...? என்பது தான் "வாய்மை" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

பல்துறை பிரமுகர்கள் பனிரெண்டு பேரில் ஒருவராக, தூக்கு தண்டனை கூடாது.... என்பதை கடுமையாக தன் பாத்திரத்தின் மூலம் வலியுறுத்தியிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். ஆனால், அவர் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக தெரிகிறது... பாவம்.

பனிரெண்டு பேர் குழுவில் மாஜி மிலிட்டரி மேஜராக இடம்பெறும் மம்பட்டியான் தியாகராஜன், சிறப்பாக கர்ஜித்திருக்கிறார். அவரது சமூகத்தின் மீதான கோபமும், சட்டத்தின் மீதான நம்பிக்கையும் படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம்.

மனசாட்சி உள்ள போலீஸ் கமிஷ்னராக கே.பாக்யராஜ், கொஞ்ச நேரமே வந்தாலும் கச்சிதம்.

இவர்களை மாதிரியே டாக்டர் பென்னி குயிக்காக வரும் கவுண்டமணி, பல்துறை குழுவின் நடுவராக ராம்கி, பயந்த சுபாவமுடைய எழுத்தாளராக மனோஜ் பாரதிராஜா, அப்பாவி தூக்குத்தண்டனை கைதியாக பிருத்வி பாண்டியராஜன், பல்துறை குழுவில் இடம்பெறும் பெண் பைலட்டாக தாமிரபரணி முக்தாபானு, மகனையும் பறிகொடுத்து, அபாண்ட குற்றச்சாட்டுக்கும் ஆளான அபலைப் பெண்மணியாக பூர்ணிமா பாக்யராஜ், பசி, பசி என அலையும் கோடீஸ்வரியாக ஊர்வசி, பனிரெண்டு பேர் குழுவில் மேலும் இடம்பெறும் நமோ நாராயணா, வெங்கட் உள்ளிட்ட எல்லோரும் இயக்குனர் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்திருப்பது இப்படத்திற்கு பலமா.? பலவீனமா..? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்.

ராசாமதியின் ஒளிப்பதிவு ஓஹோ பதிவில்லை... என்றாலும் ஓ.கே. பதிவு. புதியவர் அஹத்தின் இசையும் அப்படியே... என்பது, ஆறுதல் !

தூக்கு தண்டனைகூடாது... என்னும் அருமையான கருத்தை பதிவு செய்ய விரும்பி., அதை கடுமையாக வலியுறுத்தி, ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க, "வாய்மை" திரைப்படமாக இயக்கி இருக்கும் இயக்குனர் ஏ.செந்தில்குமார்., அதை சொல்லியிருக்கும் விதத்தில்... (குறிப்பாய் நீதிபதி நீதிமன்றத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு 12 பேரின் ஒருமித்த கருத்துக்காக காத்திருப்பது, ஒரே அறையில் டிராமா தன்மையுடன் படமாக்கப்பட்டிருக்கும் 12 பேரின் வாத, பிரதிவாதங்கள்... உள்ளிட்ட காட்சிகளில்...) எக்கச்சக்கமாய் கோட்டை விட்டிருப்பதை கொஞ்சமே கொஞ்சம் தவிர்த்திருந்தாரென்றால், "வாய்மை" திரைப்படம், "வாய்மை எனப்படுவது யாதெனில்..." எனும் திருக்குறள் மாதிரி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில், அவ்வாறு, இல்லாதது "வாய்மை"-யை ரசிகனுக்கு நாடகத்தன்மையாக காட்டுகிறது பாவம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.