News
Loading...

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை எதிர்த்து கன்னட திரையுலகினர் பெங்களூருவில் ஆர்பாட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறப்பதை எதிர்த்து கன்னட திரையுலகினர் பெங்களூருவில் ஆர்பாட்டம்

பெங்களூரு: கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்று எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குல்பர்காவில் விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பல இடங்களில் உருவபொம்மையை எரித்தும் டயர்களை கொளுத்தியும் கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். காலிக்குடங்களுடன் குவிந்த பெண்கள் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். தீப்பந்தங்களை ஏற்றி விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அரசு, மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. முழு அடைப்பால் பெங்களூரு, மாண்டியா உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கன்னட திரையுலகினர் போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறப்பதை எதிர்த்து கன்னட திரையுலகினர் பெங்களூருவில் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் நடிகைகள் பாரதி, மாளவிகா, சஞ்சனா, உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

நடிகர் சிவராஜ்குமார் கண்டனம்

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சிவராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒரே அணியில் சேர அவர் கோரிக்கை விடுத்தார்.

கன்னட நடிகை நாகினி பேச்சு

பெங்களூரு: காவிரி ஆறு கர்நாடத்துக்கே சொந்தம் என கன்னட நடிகை நாகினி தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறப்பதை எதிர்த்து கன்னட திரையுலகினர் பெங்களூருவில் ஆர்பாட்டம் நடத்தினர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...