News
Loading...

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

செப்டம்பர் 27, 2014 அன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கும், உடன் பிறவா சகோதரி உள்ளிட்ட இதர பினாமிகளுக்கும் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற்ற கூத்துக்கள் அனைத்தையும் உலகமே கண்டு சிரித்தது.

அலகு குத்துதல், மண் சோறு சாப்பிடுதல், மண் தரையில் உருளுதல், தீமிதித்தல், மொட்டை அடித்தல், என்று தமிழகத்தில் அதிமுக அடிமைகள் நடத்திய கூத்துகள் அதிமுக அடிமைகள் மற்றும் முட்டாள்களின் கூடாரம் என்பதை உலகுக்கே பறைசாற்றியது.    தற்போது மீண்டும் அந்த கூத்துகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் நள்ளிரவில் ஜெயலலிதா சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவுக்காக அனுமதிக்கப்பட்டார்.    நள்ளிரவில் இந்த செய்தி ஊடகங்களுக்கு கசிந்து, 24 மணி நேர தொலைக்காட்சி செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என்ற அப்போல்லோ மருத்துவமனை அல்லோலக்கலப்பட்டது.    மறுநாள் காலை விடிய விடிய அடிமைகளின் கூட்டம் மருத்துவமனை நுழைவாயிலை தாண்டி, க்ரீம்ஸ் சாலை முழுக்க நிறைந்தது.   

அடிமைகளின் கூட்டத்தால் நுங்கம்பாக்கம் அண்ணா சாலை முழுக்க போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.    தமிழக அரசின் நிழல் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அப்போல்லோ மருத்துவமனையில் முகாமிட்டனர்.    அடிமைகள் தங்கள் ஒப்பாரிகளை தொடங்கினர்.

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவர் மத்தியிலும் ஒரே விவாதம் ஜெயலலிதாவின் உடல் நிலைக்கு என்னதான் நடந்தது ?  அவர் நலமாக இருக்கிறாரா அல்லது இது நாடகமா என்பதே.

விவாதத்தை தொடங்கும் முன், ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஒரு நடிகையாக இருந்தார் என்பதை நாம் மறந்து விட முடியாது.    நடிப்பையே தனது தொழிலாக வைத்திருந்தவர்.     நடிப்பை அவருக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை.

தனது சுயநலனுக்காக ஜெயலலிதா எதை வேண்டுமானாலும் பேசக் கூடியவர், செய்யக் கூடியவர் என்பதை கடந்த கால வரலாறு நிரூபித்துள்ளது.    1991 ஆட்சிக் காலத்தில், சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது, தமிழகத்தில் நெடுஞ்சாலை கொள்ளைகள் அதிகரித்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோது 'அவரது ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு  ஆட்களை அனுப்பி நெடுஞ்சாலை கொள்ளைகளை நடத்துகிறது' என்று கூசாமல் சொன்னவர்.   இன்றும் சட்டப்பேரவை பதிவுகளில் இது இடம் பெற்றுள்ளது.

அப்போது தமிழகத்தின் ஆளுனராக இருந்த சென்னா ரெட்டி, தன் மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி வழங்கப்போகிறார் என்று தெரிந்து கொண்டதும் ஜெயலலிதா வெளிப்படையாக வயது முதிர்ந்த சென்னா ரெட்டி மீது கூறிய குற்றச்சாட்டு "சென்னா ரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்" என்பதே.     

இப்படி ஒரு குற்றச்சாட்டை எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் ஒரு வயது முதிர்ந்த ஆளுனர் மீது சுமத்தியதேயில்லை.  அதற்குப் பிறகு தமிழகத்தின் ஆளுனராக இருந்த பீஷ்ம நாராயண் சிங்கின் 'அனைத்துத் தேவைகளையும்' தனது உளவுத்துறை மூலமாக ஜெயலலிதா நிறைவேற்றித் தந்தது அனைத்தும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.
திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தினத்தன்று, பெரும் கலவரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே திட்டமிட்டு அவைக்குள் கலவரத்துக்கு வித்திட்டவர் ஜெயலலிதா.     

அவர் விரித்த வலையில் விழுந்த திமுக அப்பரசண்டிகள், ஜெயலலிதாவை வன்மத்தோடு தாக்க, கலைந்த கேசத்தோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயலலிதா புலம்பிய புலம்பலை இந்த தேசம் பார்த்திருக்கிறது.

லஞ்சப் பணத்தில் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக தனது ஆடிட்டர் ராஜசேகரை, ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து செருப்பால் அடித்தனர்.   மறுநாள் இந்த செய்தி பெரிதாகக் கூடாது என்பதற்காகவே, அப்போது அவையில் சுயேட்சை எம்எல்ஏவாக இருந்த தாமரைக்கனியை விட்டு, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கடுமையாக தாக்கச் செய்தவர் ஜெயலலிதா.   மறுநாள் ஆடிட்டரை செருப்பால் அடித்ததை விட, தாமரைக்கனி தாக்கிய சம்பவமே செய்தியானது.

இது போல தரந்தாழ்ந்த எத்தகைய நாடகத்தையும் அரங்கேற்ற ஜெயலலிதா எப்போதும் தயங்கியதில்லை.   தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பொதுக்கூட்டங்களை நடத்தியபோது, அவருக்கு எதிராக அதிமுக மகளிர் அணியினர் எத்தகைய போராட்டங்களை கையாண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஜெயலலிதாவின் சம்மதம் இல்லாமல் அந்தப் போராட்டங்கள் நடைபெறவில்லை.

தான் மற்ற அரசியல்வாதிகளை விட, குறிப்பாக கருணாநிதியை விட அதிகம் படித்தவர் என்ற பெருமை ஜெயலலிதாவுக்கு எப்போதும் உண்டு.    இப்படிப்பட்ட படித்த ஜெயலலிதாதான், டான்சி வழக்கு விசாரணையின்போது, அரசுக் கோப்பில் தான் போட்ட கையெழுத்தை தன்னுடையது அல்ல என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர்.   இப்படி கொஞ்சமும் தயங்காமல் பச்சையாக பொய் சொல்லக்கூடியவர்தான் ஜெயலலிதா.

இந்தப் பின்னணியில்தான் ஜெயலலிதா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க வேண்டும்.   இது போன்ற தந்திரங்களை நெருக்கடியான நேரத்தில் ஜெயலலிதா கையாண்டிருக்கிறார்.    டான்சி வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அது வரை விசாரணை நீதிமன்றத்திலோ, சென்னை உயர்நீதிமன்றத்திலோ எடுக்காத ஒரு புதிய நிலைபாட்டை உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா எடுத்தார்.   டான்சி நிலத்தை மீண்டும் அரசுக்கே திருப்பித் தந்து விடுகிறேன் என்ற நிலைபாடே அது.   அவரின் அந்த நிலைபாட்டை மிகவும் வசதியாக பயன்படுத்திக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிபகள், ஜெயலலிதா நிலத்தை திருப்பிக் கொடுத்ததை ஒரு முக்கிய காரணமாக வைத்து, அவரை வழக்கிலிருந்து விடுவித்தனர்.

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

செப்டம்பர் 9 அன்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது சுயசரிதத்தில், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் தான் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப் பட்ட விபரத்தையும் தனக்கு இழைக்கப்பட்ட நெருக்கடிகளையும் பட்டியலிட்டிருந்தார்.    

அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.   அந்த வழக்கின் விசாரணையின்போது, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தபோது, வழக்கறிஞர் ரத்தினம் அதற்கான காரணத்தை வினவினார்.   அப்போது நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் அமித்தவ ராய் உள்ளிட்ட நீதிபதிகள் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் இறுதித் தீர்ப்பை நான்கு வாரங்களுக்குள் வழங்குவதாக தெரிவித்தனர்.    அதனைத் தொடர்ந்தே தற்போது நடந்து வரும் அப்போல்லோ அட்டகாசம் சோக காவியத்தை பார்க்க வேண்டும்.  

தனது உடல்நிலை குறித்து எந்த செய்தியும் எப்போதும், எங்கேயும் கசிந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொள்பவர் ஜெயலலிதா.  ஒரு துளி செய்தி கூட கசியாமல் பார்த்துக் கொள்வார்.   அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை விதிப்பது குறித்து வாதம் நடைபெற்றபோது, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், வாதிட்டது அனைத்தும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தே.   

 ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, உள்ளிட்ட பல்வேறு நோய்களை பட்டியலிட்டார் பி.குமார்.   இந்த வாதங்கள் அனைத்தும் ஜெயலலிதா முன்னிலையிலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.    சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றதும், உடல்நிலை குறித்து வாதிட ஜெயலலிதா தயங்கியதில்லை.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது, கணிதத்தை அடிப்படையாக கொண்டது.      நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புப் படி 53 கோடிக்கும் அதிகமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.    இதில் உள்ள மதிப்பீடுகளையெல்லாம் உச்சநீதிமன்றம் கடுமையாக குறைத்தாலும், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ள சொத்துக்களின் அளவை 25 கோடிக்கும் குறைவாக குறைக்க சாத்தியமில்லை. 

 ஏனெனில் 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதாவின் வருமானம் 9.9 கோடியைத் தாண்டவில்லை.   இன்று புதிதாக 1991 முதல் 1996 வரை எனக்கு வருமானம் இருந்தது என்று ஜெயலலிதா புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தவே இயலாது.   உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் அப்படி புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தவும் இல்லை.   இந்த நிலையில் ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நினைத்தால் இந்த வழக்கிலிருந்து எப்படி காப்பாற்ற முடியும் ?

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

அதையும் மீறி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி போல அடாவடியாக தீர்ப்பளித்தால் ஒரு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.     1988ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 13 (i) (e) என்ற பிரிவின் கீழ், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைகள் மற்றும் சிபிஐ ஆகிய அனைத்து  அமைப்புகளும், 1988ம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்த அனைத்து வழக்குகளுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும்.   

சுருக்கமாக சொன்னால் இனி வருமானத்துக்கு அதிகமான சொத்து என்ற அடிப்படையில் இந்தியாவில் எந்த பொது ஊழியரையையும் தண்டிக்கவே முடியாது.    இது ஒரு மிகப்பெரிய அரசியல் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும்.  ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற ஒரு நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் எடுக்க முடியாது.

இந்த நிலையில், அதிகபட்சமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதாவை காப்பாற்ற விரும்பினால் என்ன செய்ய முடியும் ?  ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பாமல் வீட்டுச் சிறையிலோ அல்லது வெறும் அபராதத்துடனோ விடுவிக்க முடியும்.   ஆனால் சசிகலா மற்றும் இதரர்களை சிறைக்கு அனுப்பி விடுவார்கள்.    இப்படி ஒரு முடிவை உச்சநீதிமன்றம் எடுக்க தேவையான சூழல் வேண்டுமல்லவா ?   அதற்கு ஏதுவான சூழலை உருவாக்கத்தான் அப்போல்லோ அட்டகாசம் என்ற நாடகம்.  

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

அப்படி தண்டிக்கப்பட்டால் ஜெயலலிதா பதவியிழக்க நேரிடுமே, மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதே என்ற கேள்வி எழும்.    ஓ.பன்னீர் செல்வம் என்ற அடிமையை வைத்து இரண்டு முறை ஆட்சியை நடத்தியவர்தான் ஜெயலலிதா.     ஜெயலலிதாவை மீறி, அதிகாரிகளோ, அமைச்சர்களோ முடிவெடுத்து விடுவார்களா   என்ன ?      அதிமுக  என்ற அடிமைகளின் கூடாரத்தில் ஜெயலலிதாவின் வார்த்தையை மீறி என் நடந்து விடும் ?  

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக, ஜெயலலிதா நடந்து செல்லும் காட்சியைக் கூட எந்த தொலைக்காட்சி ஊடகமும் ஒளிபரப்பியது கிடையாது (தேர்தல் மனுத்தாக்கல் நேரத்தை தவிர்த்து).  தமிழக செய்தி ஒளிபரப்புத் துறையால் வெளியிடப்படும் அனைத்து புகைப்படங்களும் போட்டோ ஷாப் செய்யப்பட்டே வெளியிடப்பட்டன.   இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்தது போல, நடக்காத ஒரு சம்பவத்தை அரை குறையாக போட்டோஷாப் செய்து அம்பலப்பட்டது தமிழக செய்தித்துறை. 

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

இந்த ஐந்தரை ஆண்டுகளில் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் அல்லாமல், நேரடியாக சென்று கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு.     வாரத்துக்கு ஒரு முறை தலைமைச் செயலகம் செல்வது.   20 நிமிடங்களில் மீண்டும் வீட்டுக்கு செல்வது என்பதைத் தவிர்த்து ஜெயலலிதா எப்போது முதலமைச்சர் பணியாற்றியிருக்கிறார் ?   சென்னை நகரம் வெள்ளத்தால் தாக்கப்பட்டபோது, ஏரியைத் திறந்து விடக் கூட அவரை அணுக முடியாத ஒரு அவலச் சூழலில்தான் தமிழகம் ஐந்தரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது போல தலைமைச் செயலகத்துக்கே செல்லாமல், எந்த திட்டங்களையும் தொடங்கி வைக்காமல், நிர்வாகத்தை முடக்கி வைத்து, அடிமைகளை வைத்து ஆட்சி நடத்தினாலும் கூட,ஒரு ரூபாய் இட்லி மற்றும் 250 ரூபாய் பணத்தின் மூலம், எந்த விதமான கூட்டணி பலமும் இல்லாமல், பலமான எதிர்க்கட்சிக் கூட்டணியை எதிர்த்து ஒரு பெரும் வெற்றியைப் பெற முடியும் என்பதை 2016 தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்கு உணர்த்தியுள்ளன.   

இந்த தேர்தல் முடிவுகள் அவருக்கு ஏற்கனவே இருக்கும் அகங்காரத்தை பல மடங்கு உயர்த்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.    இப்படி இருக்கையில், எந்த நாடகத்தையும் அரங்கேற்றி அதன் மூலம் மேலும் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து ஏகாந்து இருக்கலாம் என்று ஜெயலலிதா நம்புவதில் என்ன ஆச்சர்யம் உள்ளது ?

சொத்துகுவிப்பு வழக்கும் அப்போல்லோ அட்டகாசமும்

இது போன்ற நாடகங்களுக்கெல்லாம், ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் முக்கிய குற்றவாளியான அப்போல்லோ மருத்துவமனையின் பிரதாப் சி ரெட்டி துணைபோவதிலும் பெரும் வியப்பு இல்லை.   மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ உபகரணங்கள் என்று தனது தொழிலை உலகெங்கும் விரிவாக்கிக் கொண்டிருக்கும் அப்போல்லோ குழுமத்துக்கு இது எப்படிப்பட்ட இலவசமான விளம்பரம் என்பதை எண்ணிப் பாருங்கள் ?   சென்னை உயர்நீதிமன்றத்தின் பெரும்பாலான நீதிபதிகளுக்கு இலவச மருந்துகளும், இலவச சிகிச்சையும் தொடர்ந்து வழங்கி அவர்களில் பலரை தனக்கு நெருக்கமாக்கி வைத்திருப்பவர்தான் பிரதாப் சி. ரெட்டி. அதனால்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, நிகழ்ச்சியின் நன்றியுரையில் அவர் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு நன்றி சொன்னால் நீதிபதி எலிப்பி தர்மாராவ்.    சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவுக்கும், பிரதாப் சி. ரெட்டிக்கும் என்ன தொடர்பு ?    இதுதான் ரெட்டியின் செல்வாக்கு.

தமிழக உளவுத் துறையினர், முக்கியமான பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் "லிவர் பெய்லியர், கிட்னி பெய்லியர், ஹார்ட் பெய்லியர், ப்ரெய்ன் பெய்லியர், அன்கான்சியஸ், டயாலிசிஸ், சிங்கப்பூர் மருத்துவர்கள், அமெரிக்கா சிகிச்சை" என்று கலர் கலராக ரீல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஐந்தரை வருடங்களாக மீளா உறக்கத்தில், ஜெயலலிதாவிடம் அண்டிப் பிழைக்கும் ஊடகங்கள், அப்போல்லோ மருத்துவமனை வெளியிடும் உடான்ஸ் செய்திக் குறிப்புகளை எழுத்து தவறாமல் மறு பிரசுரம் செய்து வருகின்றன. 

இப்படிப்பட்ட ஊடகங்களும், 250 ரூபாய்க்கு விலைபோன வாக்காளர்களும் இருக்கும் வரை, அப்போல்லோ அட்டகாசம் போன்ற ஓரங்க நாடகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.   நாமும், நகைச்சுவை உணர்வோடு அதை பார்த்துக் கொண்டுதான் இருப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.