News
Loading...

கணவர் ஆட்சி... திருட்டு(திருச்சி) மாநகராட்சி!

கணவர் ஆட்சி... திருட்டு(திருச்சி) மாநகராட்சி!

அரசியலில், திருச்சி என்றால் திருப்புமுனை என்பார்கள். அதனால்தான், தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை மாநகரமான திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக மாற்ற முயற்சி எடுத்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.! இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோ,  கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீ ரங்கத்தில்தான் போட்டியிட்டார். ஆக, அரசியல் தலைவர்களுக்கெல்லாம் திருப்புமுனையாக உள்ள திருச்சி, தற்போது வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறதா?

காங்கிரஸ் தொடர்ச்சியாகத் தக்கவைத்திருந்த திருச்சி மாநகராட்சியைக் கடந்த 2011-ல்தான்  அ.தி.மு.க கைப்பற்றியது. அந்த மேயர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.ஆர்.ஜெயா, 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகள் திருச்சி மாநகரம் முதல்வரின் கண் பார்வையில் இயங்கியதால், ஏராளமானத் திட்டங்களைக் கொண்டுவருவார் என ஜெயாவை மக்களும் நம்பினார்கள். ஆனால், அத்தனையும் புஸ்ஸாகிப்போனதுதான் மிச்சம்.

யார் இந்த ஜெயா?

திருச்சி நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை நடத்துவதில் ஃபேமஸ் ஆனவர் வழக்கறிஞர் எம்.எஸ்.ராஜேந்திரன். அரசு வழக்கறிஞரான ராஜேந்திரன், வழக்குகளைச் சரியாக நடத்தவில்லை, குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் எனக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, அரசு வழக்கறிஞர் பதவியை இழந்தார்.

“தேர்தலில் வெற்றிபெற்று மேயராகப் பொறுப்பேற்ற ஜெயா, மேற்கொண்ட முதல் வேலை... முன்னாள் மேயரான சுஜாதாவிடம் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரைச் சந்தித்து, ‘சுஜாதா மேயராக இருந்தபோது எங்கெல்லாம் கமிஷன் வாங்கினார்’ என்பதுபோன்ற பால பாடங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான். பின்னர் அதே வழியில் சென்று மேயர் சீட்டுக்காகத் தான் செலவிட்ட பணத்தையெல்லாம் மீட்டெடுக்க ஆரம்பித்தார் ஜெயா. ஆரம்பத்தில், ‘போட்ட காசை எடுக்கணும்’ என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட ஜெயா, இப்போது ‘வந்தவரை லாபம்’ என செயல்படுகிறார்” என பொறுமுகிறார்கள் திருச்சிவாசிகள்.

கணவர் ராஜ்யம் 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஜெயா வாக இருந்தாலும், மாநகராட்சியைப் பொருத்தவரை அவரது கணவர்தான் எல்லாம். மாநகராட்சி அலுவலர்கள் கூட்டம், அரசு நிகழ்ச்சிகள், கட்சி விழாக்கள் என அனைத்திலும் தம்பதி சமேதராகத் தான் பங்கேற்பார்கள். மேயர் ஜெயாவின் செல்போன் எப்போதும் ராஜேந்திரனிடமே இருக்கும். மேயர் சார்பாக எல்லோரிடமும் பேசுவதும் அவர்தான். மேயர் அறையில் உட்கார்ந்துகொண்டு அதிகாரிகளை அழைத்து அதட்டுவது, எந்த கோப்புகளில் மேயர் கையெழுத்து போடவேண்டும் என்பதுவரை அனைத்து டீலிங்குகளையும் அந்த அறையில் இருந்தே முடித்துவிடுவார் ராஜேந்திரன்.

‘திருச்சி மாநகராட்சியில் பணி புரியும் சுமார் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைக் கடிதத்தில் மேயர் உள்ளிட்ட நியமன உறுப்பினர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகக் கையெழுத்துப் போடாமல் இழுத்தடிக்கிறார்கள்’ எனக்கூறி சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் போராட்டக்காரர்களை மேயர் அறைக்கு அழைத்தார் ராஜேந்திரன். அங்கே பேச்சுவார்த்தை என்ற பெயரில், ஊழியர்களை அவர் மிரட்டியதாக மீடியாவில் செய்தி வந்ததையடுத்து, சத்தமில்லாமல் கோப்புகள் கையெழுத்தானது தனிக்கதை.

கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு

மாநகராட்சிப் பகுதியில் உள்ள வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி விதிப்பு செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றுவருவதாக நீண்டகாலப் புகார்கள் இருந்துவருகின்றன. பெரிய நிறுவனங்களுக்கு வரியைக் குறைத்து மதிப்பிட்டு கணக்குக் காட்டிவிட்டு, கணக்குக்கு வராமல் பெருந்தொகை கமிஷனாக மாறியிருக்கிறது. இந்தவகையில், மட்டும் திருச்சி மாநகராட்சிக்கு இதுவரை 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி இழப்பு என்கிறார்கள். குறிப்பாகத் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையை சாதாரணக் குடியிருப்பாகக் கணக்கு காட்டி, வெறும் 9,876 ரூபாய் மட்டுமே வரியாக வசூலித்துள்ளார்கள். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, 800 நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த முறைகேட்டில்  அதிகாரிகளுடன் மேயருக்கும் தொடர்புள்ளது என அப்போது புகார் கூறப்பட்டது. இந்தப் பிரச்னை அப்படியே நீர்த்துப்போனது. நில அபகரிப்பு விவகாரங்களிலும் மேயர் குடும்பத்தினர் தலை ஏகத்துக்கும் உருட்டப் படுகிறது. திருச்சி பீமா நகரில், பல கோடி மதிப்புள்ள இடத்தை மேயர் தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதாக ஏற்கெனவே புகார் உள்ளது. 

ஒத்துவராத ஆணையருக்கு அறை

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்தவர் தண்டபாணி. இவருக்கும் மேயரின் உறவினர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். கமிஷன் வாங்குவதற்கு ஆணையர் முட்டுக்கட்டை போடுவதுதான் இதற்கான காரணம். இதனால் கடுப்பாகிப்போன மேயரது உறவினர் ஒருவர் ஆணையர் தண்டபாணியை ஓங்கி ஒரு அறைவிட்டார்.  இந்தப் பிரச்னையை உயர் அதிகாரிகள் சிலர் தலையிட்டுத் தீர்த்து வைத்தனர். அதன்பிறகு சில மாதங்கள் மட்டுமே திருச்சி ஆணையராகப் பணியாற்றிய தண்டபாணி, ‘திட்டங்கள் வந்தால்தானே மேயர் தரப்பு ஆட்கள் கமிஷன் வாங்க முடியும்.... அதற்கு செக் வைக்கிறேன்’ எனத் திட்டமிட்டு, திருச்சிக்கு வருகிற திட்டங்களுக்​கான டெண்டர் தொகையைவிட கூடுதல் தொகைக்கு திட்டவரைவு அனுப்புவார். இவர்களது இந்தப் போட்டியால், பல திட்டங்கள் திருச்சிக்கு கிடைக்காமல் போனது. அதன்பிறகு தண்டபாணியும் ஐ.ஏ.எஸ் ஆக பதவி உயர்வு பெற்று திருச்சியை விட்டே போய்விட்டார்.

துப்புரவு வேலைக்கும் லஞ்சம்

சில வருடங்களுக்கு முன்பு திருச்சி முழுக்க, வாரிசு அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கருணை அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியலைக் கையில் எடுத்துக்கொண்ட மேயர் ஆட்கள், பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, ‘30 ஆயிரம் ரூபாய் கட்டினால்தான் வேலை’ என பேரம் பேசினர். இதுகுறித்தப் புகார் முதல்வர் அலுவலகம் வரை சென்றது. சமீபத்தில் திருச்சி மாநகராட்சியில் மருத்துவர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், ஓட்டுநர்கள்,  செவிலியர்கள் என 52 பணியிடங்களுக்கு நேரடியாகப் பணி நியமனம் செய்யவிருந்தனர். தகுதியின் அடிப்படையில் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதால், பொறியாளர் பதவிக்கு 8 லட்ச ரூபாய் வரையும், கிளார்க் வேலைக்கு 5 லட்சம் ரூபாய் எனவும் பட்டியல் போட்டு பண வசூல் நடத்தும் முடிவோடு மேயர் தரப்பினர் கல்லாக் கட்ட முயன்றனர். இதனைக்கண்டு கொதித்துப்போன மாநகராட்சியின் தற்காலிகப் பணியாளர்கள், நீதிமன்றம் சென்று பணி நியமனத்துக்கு தடை வாங்கினார்கள்.

பிவிசி ஊழல்... பிணத்திலும் ஊழல்

சில வருடங்களுக்கு முன்பு அவான் பிளாஸ்ட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரகாஷ் நாகரத்தினம், கோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், ‘மாநகராட்சிக்கான குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளில் எங்கள் நிறுவனத்தின் பெயரைத் தவறுதலாகப் பயன்படுத்தி போலியான குழாய்கள் பதிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப்பிறகு அவசரகதியில், இரவோடு இரவாக குடிநீர் குழாய்களைப் பதித்து முடித்தனர் மாநகராட்சி அதிகாரிகள். ‘உலக வங்கியின் நிதி உதவியுடன் 231 கோடி ரூபாய் செலவில் காவிரி – கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகர் முழுக்க 385 கிலோமீட்டர் தூரத்துக்கு பிவிசி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது’ என திருச்சி மாநகராட்சி சொல்கிறது. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை போலி குழாய்கள். இந்தக் குழாய்கள் சில வருடங்களில் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இதனால் குடிநீரும் தரமற்றதாகிவிடும் என்பதுதான் அவான் பிளாஸ்ட் நிறுவனத்தின் குற்றச்சாட்டு.  நிலைமை இப்படியிருக்க, அப்போதைய மாநகராட்சி ஆணையர் தண்டபாணியோ, ‘குடிநீரில் கழிவுகள் கலந்துவருவதைத் தடுக்க முடியாது. கழிவு நீர் கலந்து வரும் குடிநீரை மக்கள் குடித்துதான் ஆகவேண்டும்’ என ஓப்பன் மீட்டிங்கிலேயே தில்லாகப் பேசினார். 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் உள்ள மின் மயானத்தில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,500 உடல்கள் வரை எரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கணக்கு சொல்கிறது. ஆனால், ‘இங்கு எரியூட்டுவதற்காக கொடுக்கப்பட்ட உடல்கள் தனியார் மருத்துவமனை களுக்கு சப்ளை செய்யப்பட்டது. இந்தப் பிரச்னையில் மாநகராட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கணவர் ஆட்சி... திருட்டு(திருச்சி) மாநகராட்சி!

திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கத் திட்டம், மத்தியப் பேருந்து நிலையம் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை ஆகியவைக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. கோரையாறு, அரியாறு, உய்யகொண்டான், குடமுருட்டி ஆறு ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர் வாரி, வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் கரைகளை பலப்படுத்த வேண்டும்; ஆனால், அதிகார வர்க்கமும், மாநகராட்சி அதிகாரிகளும் தங்களது பாங்க் பாலன்ஸைப் பலப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். புத்தூர் நால்ரோடு முதல் சோமரசம்பேட்டை வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கிராப்பட்டி, எடமைலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.... ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. 

முழுமையடையாமல் கிடக்கும் பூங்கா

திருச்சி பஞ்சப்பூரில் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 22.5 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு கோடியே 49 லட்சம் செலவில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிக்காக நூற்றுக்கணக் கானவர்கள் நன்கொடையும் கொடுத்துள்ளனர். ஆனாலும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்தப் பூங்கா பணி முழுமையடையவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக அறிவித்து விருது வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. ‘சிறந்த மாநகராட்சிக்காக நடந்த தேர்வுப் பட்டியலில் திருச்சியின் பெயர் இல்லாதபோதும்கூட எப்படி திருச்சிக்கு விருது கிடைத்தது?’ என அப்போதே திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் ‘அதிர்ச்சி’யோடு விவாதிக்கப்பட்டது. ‘மீண்டும் மேயராகிவிடலாம்’ என்ற ஆசையில் லோக்கல் அமைச்சர்கள் மூலம் காய் நகர்த்தி வந்தார். இப்போது கவுன்சிலருக்கு நிற்கிறார் ஜெயா. வாக்குச் சீட்டில் மக்கள் என்ன சொல்லப்போகிறார்களோ?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.