News
Loading...

காவிரி பிரச்னை மீண்டும் விஸ்வரூபம்: கன்னட அமைப்புகள் நாளை போராட்டம்

காவிரி பிரச்னை மீண்டும் விஸ்வரூபம்: கன்னட அமைப்புகள் நாளை போராட்டம்

ஓசூர்: காவிரி பிரச்னையால் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நிலையில், நாளை மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இப்பிரச்னையின் காரணமாக, தமிழகம்-கர்நாடகா இடையே, இன்று 13வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு செல்லும் பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட்ட விவகாரம் விஸ்வரூபமெடுக்க, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பல்வேறு போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் பயணிகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் இயங்குவது தடைப்பட்டது. 

இதனால் அரசுக்கும், பல்வேறு தரப்பினருக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 6ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப் படவில்லை. பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரிலும், மாதேஸ்வரன்மலை செல்லும் பஸ்கள் மேட்டூரிலும், மைசூரு செல்லும் பஸ்கள் சத்தியமங்கலத்திலும் திருப்பி விடப்பட்டன. கர்நாடக பஸ்கள் அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல் தமிழக எல்லையான ஜூஜூவாடி வரையில் இங்குள்ள அரசு பஸ்கள் இயங்கி வருகிறது. இதனால், பெங்களூரு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், நோயாளிகள் 3 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அத்திப்பள்ளி வரை பஸ்களை இயக்கலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தேவையற்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என்ற சிக்கலால் கலெக்டர் அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் போனது.

ஓசூர் பஸ் ஸ்டாண்ட்டில் பெங்களூரு செல்லும் பயணிகள் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர். ஜூஜூவாடி வரை செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 3 நாட்களாக கர்நாடக பதிவெண் பஸ்கள் இயக்கப்படாத நிலையில், இன்று ஓரிரு பஸ்கள் காலையில் இயங்கி வந்தன. அந்த பஸ்களையும் தற்போதைக்கு இயக்க வேண்டாம் என தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காலை 9 மணிக்கு மேல் தனியார் பஸ்கள் ஓசூருக்கு வரவில்லை. இன்று 13வது நாளாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக மாநில மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காவிரி பிரச்னையால் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நிலையில், நாளை மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. கன்னட செழுவழி அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நாளை பெங்களூரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். இதில் கன்னட வேதிகே, ஜெய் கன்னட அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. மீண்டும் போராட்டம் தீவிரமடைவதால் இரு மாநில எல்லையிலும் துணை ராணுவத்தினர், போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்,கர்நாடகா பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழகத்திற்குள் வர தடை விதிக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி டோல்கேட் மற்றும் ஓசூர் எல்லையில் போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். அதேநேரத்தில் அத்திப்பள்ளி, ஓசூர் வழியாக தமிழகத்திற்குள் வராமல் பாகலூர், வேப்பனஹள்ளி உள்ளிட்ட பிற சாலை வழியாக தமிழகத்திற்குள் வரக்கூடிய கர்நாடக பதிவெண் வாகனங்கள் கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. மீண்டும் அம்மாநிலத்துக்குள் செல்லுமாறு போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...