News
Loading...

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்

தேர்தல் ஆணையம்

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான தகுதி, கட்டுப்பாடு, மனுதாக்கல், தேர்தல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், பிரசாரத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 28 பக்கம்  கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* கிராம ஊராட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நான்கு வகை வாய்ப்புகள் உள்ளன. வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம்.

* ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு பதவியிலும் குறிப்பிட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* நடப்பு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் அப்பகுதிக்கு தொடர்புடைய கிராம ஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதியுடையவர்.

* எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். 

* ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும்.

* தேர்தலில் போட்டியிடுவோர் அரசின் எந்த பதவியிலும்  இருக்கக் கூடாது.

* இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

1955ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற வராக இருக்கக் கூடாது. மேலும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை தீர்ப்பானது அபராதம் மட்டுமிருப்பின்- குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார். அந்த தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார். இது தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.

* திவால் நோட்டீஸ் அளித்தவராக இருக்கக் கூடாது.

* நீங்கள் போட்டியிடும் பகுதியின் ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது.

* உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அதற்கான கணக்கு தாக்கல் செய்யாதவர், தேர்தலில் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தவிர்த்த ஏனைய வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.200, கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.1000 என வைப்பு தொகை செலுத்த வேண்டும்.

* ஒரு பதவியிடத்திற்கு எத்தனை வேட்பு மனு தாக்கல் செய்தாலும் ஒரே ஒரு வைப்புத் தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது. தேர்தலுக்கான மனுதாக்கல் தொடங்கி ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வேட்பாளர்கள் கடைப் பிடிக்க வேண்டிய அனைத்து விதிமுறைகள் பற்றியும் கையேட்டில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...